குழந்தைகள் தாயின் கருவறையில் இருக்கும் பொழுதே தங்களுடைய விரல்களை சூப்ப தொடங்கி விடுகிறார்கள். இது குழந்தை பிறந்த பின்பும் சில காலம் நீடிக்கும். சில குழந்தைகள் இந்த பழக்கத்தை விட முடியாமல் தொடர்ந்து விரல்களை சூப்புவதை வழக்கமாக்கியே விடுகிறார்கள்.
இதற்கு என்ன காரணம்
- ஆறு மாதத்திற்கு மேல் குழந்தைகளுக்கு பல் முளைக்கத் துவங்கும்போது ஈறுகளில் ஏற்படும் மாறுபாட்டால் விரல் சூப்ப அல்லது கடிக்க துவங்குவார்கள்.
- பெரும்பாலும் தனிமையை உணரும் குழந்தைகள் விரல் சூப்புவதாக சொல்லப்படுகிறது. விரல்களை சூப்பும் பொழுது அவர்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள்.
- சில குழந்தைகள் புட்டி பாலில் பால் கொடுக்கத் தொடங்கும் பொழுது இந்த விரல் சூப்பும் பழக்கமும் வந்து விடுகிறது. காரணம் தாய்ப்பாலை குடிக்கும் பொழுது ஏற்படும் நிறைவு புட்டி பாலில் கிடைப்பதில்லை. எனவே அவர்கள் விரல் சூப்ப தொடங்கி விடுவார்கள்.
- சில குழந்தைகள் தொட்டிலில் நீண்ட நேரம் ஆடினால் தூங்குவார்கள். சில குழந்தைகள் தாயின் அரவணைப்பிலோ, கதை கூறினாலோ, இல்லை தட்டிக் கொடுப்பது, தாலாட்டு கேட்பது என்று ஒவ்வொரு குழந்தையும் ஒரு பழக்கத்தின் மூலமாக உறக்கத்தை வரவழைத்துக் கொள்வார்கள். ஆனால் சில குழந்தைகளோ இது எதுவும் பழக்கப்படுத்தாவிட்டால் அவர்கள் விரல் சூப்பி தங்களை தாங்களே பாதுகாப்பாக உணரச் செய்து தூங்கி விடுவார்கள் இது அவர்களது வழக்கமாகி விடுகிறது.
விளைவுகள்
- நிரந்தர பல் முளைக்கும் பொழுது பல் அமைப்பு வரிசையாய் இல்லாமல் மாறுபடலாம். பல்லின் அமைப்பு மாறினால் அது முகத்தின் அமைப்பையே மாற்றி விடக் கூடிய வாய்ப்பு உண்டு.
- விரல்களை தொடர்ந்து கடிப்பதால் விரலின் அமைப்பும் மாறுபடலாம்.
- குழந்தைகள் பல்வேறு இடங்களில் கைகளை வைக்க வாய்ப்பு உண்டு எனவே கைகளில் உள்ள கிருமிகள் எளிமையாக வயிற்றுக்குள் சென்று விடும்.
என்ன செய்யக்கூடாது
- குழந்தைகள் விரலை சூப்பும்போது அவர்கள் வாயிலிருந்து வெடுக்கென்று எடுத்து விடுவது கூடாது.
- குழந்தையின் விரலில் வேப்பெண்ணை தடவுவது, கற்றாழை தடவுவது, கசப்பான பொருட்களை தடவுவது கூடாது.
- விரலை எடுக்காவிட்டால் சூடு வைப்பேன் என்று மிரட்டுவதோ, அல்லது சூடு வைப்பது போன்ற தண்டனைகளை தருவதோ மிகவும் ஆபத்தானது
- மற்றவர்கள் முன்பு கேலி கிண்டல் செய்வது அறவே கூடாது.
என்ன செய்யலாம்
- பல் முளைக்க துவங்கும் குழந்தைகளுக்கு டீத்தர் கையில் கொடுத்து விடலாம்.
- கைகளில் கிளவுஸ் அணிவித்து விடலாம்.
- இரண்டு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் என்றால் அவர்களுக்கு நாம் பேசுவது புரிந்து கொள்ள முடியும் எனவே விரல்களை சூப்பினால் உண்டாகும் தீமைகளை எடுத்துச் சொல்லலாம்.
- அவர்களின் கைகள் கொண்டு விளையாடக்கூடிய விளையாட்டுகளை விளையாட செய்யலாம். ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல், பில்டிங் பிளாக் அடுக்குதல் போன்ற விளையாட்டுக்கள்.
- உறங்கும் பொழுது குழந்தைகளை அரவணைத்து கதை கூறி அவர்களை தூங்கச் செய்யலாம்.
- உறக்கத்தில் விரலை சூப்பினால் கைகளில் ஏதேனும் விளையாட்டுப் பொருளை கொடுத்து விடலாம் குழந்தை அந்த விளையாட்டு பொருளை கைகளில் பிடித்தபடியே உறங்கி விடுவார்கள்.
- சற்றே பெரிய குழந்தைகள் என்றால் நீ இந்த பழக்கத்தை நிப்பாட்டினால் நான் உனக்கு பரிசு பொருள் வாங்கித் தருவேன் என்று கூறலாம். அவர்கள் அந்த பழக்கத்தை விட்ட பிறகு நாம் சொன்னபடியே அவர்களுக்கு பரிசு வாங்கி கொடுத்து ஊக்குவிக்கவும் தவறவிடக்கூடாது.