எத்தனை சிறிதான வீடாக இருந்தாலும் பூஜைக்கென சிறு மாடமாவது ஒதுக்கி வைத்திருப்போம். பூஜை அறை என்று தனியாக வைத்துக் கொண்டிருந்தால் அங்கு தேவை இல்லாத உடைந்த பொருட்களைச் சேர்த்து வைக்கக்கூடாது. இது இறை சக்தியைக் குறைக்கும். ஆன்மிக அதிர்வுகள் ஏற்படாது. மிகக்குறைந்த பூஜைக்கு பொருட்களை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்.
சுவாமி படங்களில் காய்ந்த பூச்சரம் இருக்கக்கூடாது. தினமும் மாற்ற வேண்டும். படத்தில் பூக்கள் இல்லையென்றாலும் பரவா இல்லை. காய்ந்த பூச்சரம் மட்டும் இருக்கவே கூடாது. காலியான கற்பூரம், ஊதுவத்தி, எண்ணெய் கவர்களை சேமித்து வைக்கக்கூடாது. விளக்கு வைக்கும் இடத்தில் எண்ணெய் பிசுக்கு சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பூஜை அறையில் சுத்தமான பருத்தி துணி ஒன்றினை வைத்துக்கொண்டால் விளக்கு ஏற்றும்போதும், திரிகளை தூண்டும்போதும் கைகளில் படும் எண்ணெயினை துடைத்துக்கொள்ள வசதியாய் இருக்கும். சுவரும் பாழ்படாது.
சமையலறையிலேயே சுவாமி அலமாரி இருக்கும்பட்சத்தில் அசைவம் சமைக்கும்போது அலமாரி கதவினை சாத்தி விடவும். அதிகப்படியான சுவாமி படங்களை வைத்திருப்பதை தவிர்க்கவும். கற்பூரம், ஊதுவத்தி ஏற்றுவதால் பூஜை அறையில் ஒட்டடை சேரும். அவற்றை அவ்வப்போது சுத்தம் செய்யவும். வாரம் ஒருமுறை சுவாமி படத்தை துடைத்து சந்தனம், குங்குமம் பொட்டு வைக்க வேண்டும்.
கோவில்களில் கொடுக்கும் விபூதி, குங்குமம் பாக்கெட்டை அடைசலாய் சேமித்து வைக்காமல், அவ்வப்போது தினசரி பயன்படுத்தும் விபூதி, குங்குமம் கிண்ணத்தில் கொட்டி வைக்க வேண்டும். மீதமிருக்கும் விபூதி, குங்குமத்தை கிணறு, ஆறு, குளங்களிலோ அல்லது செடிகளிலோ கொட்டி விடவேண்டும். குப்பையில் கொட்டுவது மிகத்தவறு.
செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் பூறை அறையை தண்ணீர் விட்டுக் கழுவ வேண்டும். மார்பிள், கிரானைட் தரைகளாக இருந்தால் ஈரத்துணியால் துடைக்க வேண்டும். அமாவாசை, பவுர்ணமி, வருடப்பிறப்பு போன்ற பண்டிகை நாட்களுக்கு முதல் நாளும் சுத்தம் செய்ய வேண்டும்..
இவ்வாறு பூஜை அறையை பராமரித்து வந்தால் வீட்டில் நேர்மறையான எண்ணம் வளரும்.