குழந்தைகளில் சிலருக்கு ADHD (கவனக்குறைவு மற்றும் அதிவேக திறன்) என்று அழைக்கப்பட கூடிய நரம்பியல் மண்டல பாதிப்பு காணப்படுகிறது. இந்தப் பாதிப்பினால் அந்தக் குழந்தைகள் பல்வேறு சிக்கல்களை சமாளிக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிறார்கள். அந்தக் குழந்தைகளுக்கான சிக்கல்களை தீர்ப்பதற்கும் அவர்களை கையாள்வதற்கும் பெற்றோர்களுக்கு அதிக பொறுமையும் திறமையும் அவசியம். தங்க மீன்கள், ஹைக்கூ என சில திரைப்படங்கள் ADHD குழந்தைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் சிலருக்கு அவர்களை கையாள்வது இன்னும் குழப்பமே நீடிக்கிறது.
இந்த ADHD குழந்தைகளை எப்படி கையாளலாம் என்பதற்கான சில எளிய வழிமுறைகளை பார்க்கலாம்.
1. நேர்மறையுடன் அணுகுங்கள்:
உங்கள் குழந்தைகளின் பிரச்சனைகளை சவால்களை நேர்மறையுடன் கையாள கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளின் செயல்பாடுகளை நீங்களும் குறை கூறினால், தான் என்ன செய்கிறோம் என்பதே புரியாமல் அவர்கள் குழம்பிப் போய் விடுவார்கள். ஒவ்வொரு சூழ்நிலையையும் எப்படி கையாள்வது என்பது குறித்த புரிதல்கள் அவர்களுக்கு தெளிவாக இல்லை என்பதனாலேயே அவர்களுடைய நடத்தை வேறுபடுகிறது. ADHD குழந்தைகள் எதையும் வேண்டுமென்றே செய்யவில்லை என்பதை முதலில் புரிந்து கொண்டு அவர்கள் செயல்பாடுகளை நேர்மறையுடன் அணுகி அவர்களுக்கு வழிகாட்டுங்கள்.
2. வேலைகளை திட்டமிட்டு தருதல்:
தினமும் காலை எழுந்ததில் இருந்து இரவு உறங்கச் செல்லும் வரை அவர்களுக்கான வேலைகள் என்னென்ன என்பதை சரியாக திட்டமிட்டு அவர்களுக்கு புரியும்படி கூறிவிடுங்கள். எந்த நேரத்தில் எந்த வேலையை செய்ய வேண்டும் என்பதை ஒரு அட்டவணையிட்டு அவர்களுடைய அறையில் ஒட்டி விடுவது நல்லது. அந்த வேலையை அவர்கள் செய்வதற்கு போதுமான நேரத்தை வழங்க தவறி விடாதீர்கள். அவர்களுடைய படுக்கையை சரி செய்வது, புத்தகங்களை அடுக்கி வைப்பது போன்ற வேலைகள்.. உணவு உண்ணும் நேரம், விளையாட்டு நேரம், வீட்டுப் பாடங்கள் செய்வதற்கான நேரம் இப்படி அனைத்தையும் அவர்களுக்கு திட்டமிட்டு கொடுங்கள். அவர்கள் வேலையை செய்து முடித்தவுடன் ஒரு சிறிய பாராட்டையோ வெகுமதியையோ கொடுக்க தவறி விடாதீர்கள். வெகுமதி என்றால் விலை உயர்ந்த பொருட்களை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று அல்ல அவர்களுக்கு பிடித்த உணவை செய்து கொடுப்பது, வார இறுதியில் அவர்களுக்கு பிடித்த இடத்திற்கு அழைத்துச் செல்வது போன்ற சிறு சிறு விஷயங்கள் செய்தால் போதும்.
3. உடல் இயக்கம் மற்றும் தூக்கம்
ADHD குழந்தைகளுக்கு உடலில் நல்ல ஆற்றல் உண்டு. குதிரை போன்ற திறனுடைய குழந்தைகளாய் இருப்பர். எனவே அவர்களுக்கு ஆர்வம் உடைய ஏதேனும் விளையாட்டுகளிலோ நல்ல உடல் இயக்கம் தரக்கூடிய செயல்பாடுகளிலோ சேர்த்து விடுவது நல்லது. இது அந்த குழந்தைகளின் ஆற்றல்களை வெளிப்படுத்திடவும் உதவும்.
அதேபோல் அவர்களுக்கு நல்ல உறக்கமும் அவசியம் எனவே அவர்கள் அமைதியாக உறங்குவதற்கு ஏற்ற வசதிகளை செய்து கொடுங்கள்.
4. எதிர்பார்ப்புகள் மற்றும் வரையறைகள்:
ADHD குழந்தைகளின் நடத்தை குறித்த எதிர்பார்ப்புகள் மற்றும் அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற விஷயங்களை அவர்களுக்கு தெளிவாக எடுத்துரையுங்கள்.
உங்கள் எதிர்பார்ப்புகளை அவர்கள் பூர்த்தி செய்தால் ஒரு பலகையை உருவாக்கி அதில் மதிப்பெண்களோ அல்லது ஸ்டார்களோ கொடுக்க துவங்குங்கள். ஒரு குறிப்பிட்ட ஸ்டார்களை பெறும் பொழுது அவர்களுக்கு வெகுமதி என்று கூறுங்கள். பரிசுகளை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருங்கள்.
5. உணவுக்கட்டுப்பாடு
ADHD குழந்தைகளுக்கு உணவுக் கட்டுப்பாடு என்ற ஒன்று அவசியம் இல்லை என்றாலும் சில உணவுகள் நரம்பு மண்டலத்தை பாதிக்க கூடிய வாய்ப்புகள் உள்ளது. எனவே துரித உணவுகள், கேஃபின் நிறைந்த காபி மற்றும் சாக்லேட்டுகள் போன்றவற்றை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகள், பழங்கள், நட்ஸ் ஆகியவற்றை கொடுங்கள்.