கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய விழாக்களில் ஒன்றுதான் இந்த சிவாலய ஓட்டம். மாலையணிந்து விரதமிருந்து மாசி மாதத்தில் வரும் மகாசிவராத்திரியன்று பன்னிரண்டு சிவாலயங்களை ஓட்டமாக ஓடிச் சென்றே தரிசிக்கனும். அதுவும் 24 மணிநேரத்தில், சுமார் 110 கி.மீ. தொலைவுக்குட்ட தொலைவுகளிலிருக்கும் கோவில்களில் வீற்றிருக்கும் சிவனை தரிசிப்பதுதான் இந்த ஓட்டத்தின் சிறப்பு.
சிவாலய ஓட்டத்தின் வரலாறு…
மனிதத்தலையும், புலி உடம்பையும் கொண்டது புருஷாமிருகம். இவர் சிறந்த சிவபக்தர். . சிவனைத் தவிர, வேறு இறைவனை, இறைவனாய் ஏற்கமாட்டார். விஷ்ணு நாமம், இவருக்குக் கேட்க சகிக்காது! ஆனால் தானும்[ஹரியும்] ஹரனும் ஒன்றே என்ற தத்துவத்தை புருஷாமிருகத்துக்கு உணர்த்த கிருஷ்ணன் விரும்பினார் . பஞ்சபாண்டவர்களில் ஒருவனான பீமனை அழைத்தார். நடைபெறவிருக்கும் குருக்ஷேத்திர யுத்தத்தில் பாண்டவர்கள் வெற்றிப்பெற வேண்டுமானால், அந்த புருஷாமிருகத்தின் உதவியும் தேவைப்படுகிறது. போர் வெற்றிக்காக நடத்த இருக்கும் யாகத்திற்கு அந்த மிருகத்தின் பாலானது தேவைபடுகிறது. ஆகவே, அதனை சந்தித்து அதன் உதவியைக் கோரி வருமாறு அவர் பீமனை அனுப்பி வைத்தார். கூடவே, அவனிடம் 12 ருத்ராட்சங்களைத் தந்து, தன்னுடைய கோவிந்தா, கோபாலா என்ற பெயர்களை உச்சரித்தவாறே புருஷா (புருடா)மிருகத்தை நெருங்குமாறும் சொன்னார்.
‘‘என் பெயரைக் கேட்க விரும்பாத புருஷா மிருகம், உன் மீது பாயும். நீ உடனே ஒரு ருத்ராட்சத்தை அந்த இடத்தில் போட்டுவிடு. அது ஒரு சிவலிங்கமாக மாறிவிடும். அதனைக்காணும் புருஷாமிருகம், அந்த சிவலிங்கத்துக்கு உரிய வழிபாட்டினை செய்த பிறகுதான் மறுவேலை பார்க்கும். அங்கிருந்து நீ ஓடிவிடு. பிறகு அது உன்னைத் துரத்தி வரும். அடுத்த இடத்தில் இன்னொரு ருத்திராட்சத்தைப் போடு. இதுவும் சிவலிங்கமாக மாறும். புருஷாமிருகமும் பூஜை செய்யத் தொடங்கிவிடும். இப்படியே பன்னிரண்டு இடங்களுக்கு ஓடி, ஓடி அதனை அலைக்கழித்தால் பன்னிரண்டாவது ருத்திராட்சம் விழும் இடத்தில் நான், பரமேஸ்வரனுடன் உங்கள் இருவருக்கும் காட்சி தருவேன்’’ என்று விளக்கி, பீமன் நடந்துகொள்ள வேண்டிய முறையை சொன்னார். பீமனும் அவ்வாறே செய்தான்.
அப்படி முதல் ருத்திராட்சம் விழுந்த இடம்தான் திருமலை. பன்னிரண்டாவது விழுந்த இடம் நட்டாலம். நட்டாலத்தில் ஹரியும் ஹரனும் இணைந்த சங்கரநாராயணராக மகாவிஷ்ணு காட்சி தந்து, சிவனும் விஷ்ணுவும் ஒன்று என்று புருஷாமிருகத்துக்கு மட்டுமல்ல, உலகுக்கே உணர்த்தினார். நடக்கயிருக்கும் யாகத்திற்கு தேவையான பால் தனது மடியில் இருந்து எடுத்துக்கொள்ள அனுமதி அளித்தது. புருஷாமிருகத்தின் உதவியும் குருக்ஷேத்திர யுத்தத்திற்குக் கிடைத்தது.
‘‘கோவிந்தா, கோபாலா…..சிவனே….வல்லபா…!!!”
இப்படி கர்ண பரம்பரையாகச் சொல்லப்படும் கதையை ஒவ்வொரு மகாசிவராத்திரி அன்றும் ஒரு குழுவினர் பீமனுடைய பிரதிநிதியாக ஓடி, ஓடிச் சென்று அந்த சிவாலயங்களைத் தொழுகிறார்கள். இந்த சிவாலய ஓட்டத்தில் பங்கு பெறுபவர்கள் மாசி மாதம் ஏகாதசி அன்று மாலை அணிந்து விரதம் மேற்கொள்வர். சிவராத்திரிக்கு முதல் நாள் மாலை 3 மணியளவில் காவி வேட்டியும் காவித்துண்டும் அணிந்து கையில் விசிறியுடன் சிறிய பையில் விபூதி எடுத்துக்கொண்டு வழியில் ஏற்படக்கூடிய செலவுகளுக்காக கொஞ்சம் பணமும் எடுத்துக்கொள்வர். முதற்கோயிலான முஞ்சிறை என்ற திருமலையில், தாமிரபரணி ஆற்றில் நீராடி, ஈசனை வணங்கிவிட்டு ஓட ஆரம்பிப்பர். இப்போதிலிருந்து பன்னிரண்டாவது கோயிலில் தரிசனம் முடிக்கும்வரை ‘‘கோவிந்தா, கோபாலா’’ என்ற கோஷத்தை ஒலித்தபடியே இருப்பார்கள். நிறைவாக மும்மூர்த்திகளும் அருளும் சுசீந்திரம் கோயிலுக்குச் சென்று வழிபட்டு ஓட்டத்தை முடிக்கிறார்கள். .
கன்னியாகுமரி மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க மிக முக்கிய ஆண்மீக நிகழ்வானது சிவாலய ஓட்டம் இப்புனித யாத்திரை ஆனது வருகின்ற மார்ச் மாதம் 4 அன்று மகா சிவராத்திரி தினத்தன்று நடைப்பெறவுள்ளது.
தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து மகாசிவராத்திரி தினத்தன்று 110 கீ.மீட்டர் தூரம் பாத யாத்திரையாகவும் வாகனங்களிலும் சென்று 12 சிவாலயங்களில் வீற்றிருக்கும் இறைவனை தரிசனம் செய்கின்றனர்.
12 சிவாலயங்களும் இறைவனின் திருநாமங்களும்:
1.முஞ்சிறை திருமலை சூலப்பாணி தேவர்.
2.திக்குறிச்சி மஹாதேவர்
3.திற்பரப்பு வீரபத்திர ஜடாதரர்
4.திருநந்திக்கரை நந்தீகேஸ்வரர்
5.பொன்மனை தீம்பிலேஷ்வரர்
6.பன்றிபாகம் கிராத மூர்த்திஷ்வரர்
7.கல்குளம் நயினார் நீலகண்டேஸ்வரர்
8.மேலான்கோடு காலகாலர்
9.திருவிடைக்கோடு சடையப்பர் (ஜாயப்பர்)
10.திருவிதாங்கோடு பரசுபாணிஸ்வரர்
11.திருபன்றியோடு பக்தவச்சலேஸ்வரர்
12.திருநட்டாலம் சங்கர நாரயணர்
இந்த பனிரெண்டு தலங்களையும் ஒரே நாளில் தரிசிப்பதே சிவாலய ஓட்டம். பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே நீர்மோர், குளிபானங்கள், விசிறி, கால் பாதத்துக்கான வலிநிவாரணி தைலம், பசியாற சாப்பாடு, ஓய்வெடுக்க தற்காலிக குடில்ன்னு வசதிப்படுத்தி கொடுக்கிறார்கள்.
கோவிந்தா… கோபாலா…சிவனே…வல்லபோ.