கோடை விடுமுறை முடிந்து இன்னும் சில நாட்களில் பள்ளிகள் திறக்கப் போகின்றன. குறும்பு செய்யும் குழந்தைகளை சமாளிக்க இயலாமல் பெற்றோர்கள் எப்பொழுதுதான் இந்த பள்ளிகள் திறப்பார்களோ? என்று புலம்புவதுண்டு. ஆனால் பள்ளிகள் திறந்து விட்டால் பெற்றோர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலை இன்னைக்கு என்ன லன்ச் செய்வது? என்பது தான்.
பெரும்பாலும் குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை கொடுக்க வேண்டும் என்றே அனைத்து பெற்றோர்களும் விரும்புவர். ஆனால் குழந்தைகளை பொறுத்தவரை அவர்களுக்கு கொடுக்கப்படும் உணவு அவர்களுக்கு பிடித்தமானதாக இருந்தால் மட்டுமே வீட்டிற்கு வரும் பொழுது டிபன் பாக்ஸ் காலியாக வரும்.
குழந்தைகளுக்கு சத்தாகவும் அதே சமயம் சுவையாகவும் செய்யக்கூடிய எளிமையான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி ஒன்றை பார்க்கலாம்.
கொண்டைக்கடலை புலாவ்:
கொண்டைக்கடலையில் போலிக் அமிலம், இரும்புச்சத்து, விட்டமின்கள், புரதச்சத்து, செலினியம், மெக்னீசியம், நார்ச்சத்து, சுண்ணாம்பு சத்து ஆகியன உள்ளன. மாரடைப்பு சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தீர்வு காண உதவும். நினைவாற்றலை அதிகரிக்க கொண்டைக்கடலை மிகவும் சிறந்தது. இதை சாதாரணமாக வேக வைத்துக் கொடுக்கும் பொழுது குழந்தைகள் பெரிதளவு அதை விரும்பி உண்ண மாட்டார்கள். இந்த கொண்டை கடலை புலாவ் ரெசிபியை முயற்சி செய்து பாருங்கள் நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்:
- பாஸ்மதி அரிசி – 1 கப்
- கொண்டைக்கடலை – அரை கப்
- பெரிய வெங்காயம் – 2
- தக்காளி – 2
- பச்சை மிளகாய் – 3
- கறிவேப்பிலை – சிறிதளவு
- இஞ்சி பூண்டு விழுது – 1ஸ்பூன்
- கரம் மசாலா – 1 ஸ்பூன்
- தயிர் – 1 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
- பட்டை – 1
- கிராம்பு – 2
- ஏலக்காய் – 1
- பிரிஞ்சி இலை – 1
- கொத்தமல்லி, புதினா – சிறிதளவு
செய்முறை:
- கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவைத்து விட வேண்டும் குறைந்தது ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.
- முதல் நாள் ஊற வைத்த கொண்டைக்கடலையை குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக வைக்க வேண்டும். அதிக நீர் சேர்த்து வேக வைக்க வேண்டாம். நீரினை வடிகட்டும் பொழுது கொண்டக்கடலையில் உள்ள சத்துக்களும் அதனுடன் சேர்ந்து வெளியேறிவிடும் எனவே அளவாய் தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.
- ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கிராம்பு, ஏலக்காய், பட்டை, ப்ரிஞ்சி இலை ஆகியவற்றை சேர்க்கவும்.
- நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
- கறிவேப்பிலை மற்றும் புதினா ஆகியவற்றை சேர்க்கவும்.
- நறுக்கிய தக்காளி மற்றும் பச்சை மிளகாய்களை சேர்த்து வதக்கவும்.
- வேகவைத்த கொண்டைக்கடலையை சேர்த்து வதக்கி பின்பு கரம் மசாலா மற்றும் தயிர் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
- அரை மணி நேரம் முன்பே ஊறவைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து இரண்டு கப் தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பினை போடவும்.
- கொத்தமல்லி இலை சேர்த்து குக்கரை மூடி இரண்டு விசில் விடவும். விசில் அடங்கியதும் குக்கரை திறந்து லஞ்ச் பாக்ஸில் வைக்கவும். இதனுடன் வறுத்த முந்திரி, திராட்சை போன்றவற்றை விருப்பப்பப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்.