பெரும்பாலும் நாம் உடல் நலத்தை ஒப்பிடும் பொழுது மனநலத்திற்கு அவ்வளவாக முக்கியத்துவம் தருவது கிடையாது. ஆனால் நம்மில் பலரும் உடல் நலனும் மன நலனும் ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்பு உடையவை என்பதை உணர மறுக்கிறோம். ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி இவை மட்டும் நல்ல உடல் நலனுக்கு போதாது ஒவ்வொருவரின் மன நலனும் அவரின் உடல் நலனில் மிகப்பெரிய பங்காற்றுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
நல்ல மன ஆரோக்கியம் உடல் ஆரோக்கியத்தையும் நேரடியான மற்றும் நேர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்பது நிபுணர்களின் கருத்து. அதேசமயம் மோசமான மன ஆரோக்கியம் உடல் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கும்.
உங்களுக்கு மன அழுத்தம் அதிகமாக உள்ள ஒரே நாளில் அல்லது ஒரு வாரத்தில் உங்கள் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்று இதற்கு அர்த்தம் கிடையாது.. இருப்பினும் மனநல பிரச்சனைகள் அல்லது நீண்ட கால மன அழுத்தம், பதற்றம் ஆகியவற்றை புறக்கணிக்க கூடாது. மன ஆரோக்கியம் உடல் ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் முக்கிய பிரச்சனைகள் எவையெவை என்பதை தெரிந்து கொள்ளலாம்.
செரிமான பிரச்சனை:
பொதுவாக நீங்கள் அதிக பதற்றத்தோடு நாம் இருக்கும்போது வயிற்றை பிசைவது போன்ற உணர்வு உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். இதுவே உங்கள் உடலும் மனமும் எப்படி ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளன என்பதற்கு சிறிய எடுத்துக்காட்டு. ஆனால் அதைவிட தீவிரமாக மோசமாக மன ஆரோக்கியம், நாள்பட்ட மனச்சோர்வு , மன அழுத்தம் மற்றும் பதற்றம் உண்மையில் செரிமான மண்டலத்தின் தன்மையை மாற்றி அது செயல்படும் விதத்தையே பாதிக்கிறது. மேலும் சில சமயங்களில் வலி மற்றும் அசவுகரியத்தை இது தீவிர படுத்தலாம்.
தூக்க சிக்கல்கள்:
நீண்டகால மன அழுத்தம் அல்லது மனச்சோர்வு உங்கள் உடலில் அதிக அளவு சோர்வை ஏற்படுத்தலாம் அல்லது உங்கள் உடலில் ஆற்றல் இல்லாதது போன்ற உணர்வை தூண்டலாம். அதுமட்டுமின்றி நீங்கள் தூங்கும் முறையையும் தூங்கும் தன்மையையும் இது பாதிக்கலாம். தூக்கமின்மையால் மன அழுத்தம் பதற்றம் ஆகியவை மேலும் அதிகரிக்கும் இது தூக்கத்தில் மூச்சு திணறல் உள்ளிட்ட தூக்க கோளாறுகளுக்கு காரணமாக அமையும்.
இதய பிரச்சனைகள்:
இதயத்தின் ஆரோக்கியத்தை பொறுத்தவரை உயர் ரத்த அழுத்தம் நீடித்த இதயத்துடிப்பு போன்றவை இதய நோய் காண ஆபத்தை அதிகரிக்கும். இந்த ஆபத்து காரணிகள் அனைத்தும் மன நலனை சார்ந்தும் அமைகிறது. உதாரணமாக நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும் பொழுது உங்கள் கார்டிசோல் ஹார்மோனை உடல் வெளியிடுகிறது இதனால் ரத்த அழுத்தமும், இதயத்துடிப்பும் அதிகரிக்கிறது.
எனவே உங்களின் மனநலத்தை அவ்வபோது நீங்களே விசாரித்து எந்த பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உடல் நலத்தை பேணி காப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு மனநலத்தை பேணிக்காத்தலும் அவசியம்.