ஆடி மாதத்திற்கென பல சிறப்புகள் உண்டு. அந்த வரிசையில் ஆடி 18ம் நாளில் கொண்டாடப்படும் பண்டிகையான ஆடிப்பெருக்கு மிக சிறப்பானது. இந்த நாளை ஆடி 18, ஆடிப்பெருக்கு, ஆடிப்பட்டம் எனவும் சொல்வது வழக்கம்
அம்பிகையின் மகிமையை எடுத்து சொல்லும் ஸ்ரீமத் தேவிபாகவதத்தில், எமனுடைய கோரைப்பற்கள் என உருவகப்படுத்தும் காலம் இரண்டு உண்டு. அதில் ஒன்று கடும் காற்றடித்து மழை கொட்டத் துவங்கும் காலமான தட்சிணாயண காலம். அடுத்தது, வெயில் வீசிக் கொளுத்தத் தொடங்கும் காலமான உத்தராயண காலம். வெயிலில்கூடத் தப்பிவிடலாம். ஆனால், மழைக்காலத்தில்?! அதுவும் புதுத் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிவரும்போது, அந்தப் புது நீர் பல வகையான நோய்களை பரப்பும்.. அதன் காரணமாகவே தட்சிணாயண காலத் தொடக்கமான ஆடி மாதத்தில் அம்பிகைக்கு (காப்பவள் தாய்தானே!) விசேஷமான வழிபாடுகள் நடத்தப்படுகிறது. அதிலும் ஆடி 18 மிக விசேசமானது. அன்றைய தினம் அம்மனை வழிப்பட்டு குடும்ப நலனுக்கும், தாலி பாக்கியம் வேண்டியும் மாங்கல்ய சரடை மாற்றிக்கொள்வர்.
பொங்கி வரும் நீரினால் ஆற்றிலிருக்கும் கழிவுகள் அனைத்தும் அடித்து செல்லப்பட்டு, ஆறு சுத்தமாகும். அதுப்போல், மனதிலிருக்கும் அழுக்குகள் நீங்கவும், வாழ்க்கையிலிருக்கும் கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கி, குடும்ப நலனுக்காக அனைவரும் வேண்டிக்கொள்ளும் நாளே இந்த ஆடிப்பெருக்கு.
புதிதாக திருமணமாகும் மணப்பெண் அணிந்திருக்கும் மாங்கல்யத்தின் இருபுறமும் லட்சுமிக்க்காசு, மணி, பவளம் கோர்த்து, அவரது கழுத்தில் சுமங்கலிப் பெண்கள் அணிவிப்பதுதான் தாலி பெருக்குதல் வைபவம். முதன்முதலில் மஞ்சள்கயிற்றை மாற்றும் சடங்கு இது. புதிதாக மாற்றும்போது மங்களகரமான தாலியுடன், லட்சுமிக்காசு, மணி ஆகியவற்றை சேர்ப்பதன் மூலம் தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம். இதை ஒற்றைப்படை மாதத்தில் மணமகன் வீட்டில் நடத்துவர். பெரும்பாலும் திருமணமான மூன்றாவது மாதத்தில் இந்த வைபவம் நடக்கும். ஆடிப்பெருக்கன்று இதனை செய்வது சிறப்பு. ஆடிப்பெருக்கன்று நதிகளில் நீர் பெருக்கு ஏற்படும் என்பது நம்பிக்கை. அன்று நதிக்கரைகளில் வழிபாடு நடத்தப்படும். அந்த நாளில் நதிக்கரைகள், கடற்கரைகளில் குடும்பத்தினருடன் அமர்ந்து இரவு உணவு சாப்பிடும் மரபு இருந்துள்ளது. புதிய திருமண தம்பதிகள் நதிக்கரையில் அன்று இரவு நிலாச்சோறு சாப்பிடும் பழக்கமும் உண்டு. அன்றைய தினம் பெண்கள், கோயில்களில் தாலிக்கயிற்றை மாற்றி புதிய தாலி கயிறு அணிவதுண்டு. திருமணமாகாத பெண்கள், விரைவில் திருமணம் ஆக வேண்டும் என அம்மனை வேண்டி மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்வர்.
இன்றைய தினம் ஆடி 18 எனப்படும் ஆடிப்பெருக்காகும். இன்றைய தினம் தங்கம் உள்ளிட்ட பொருட்களை வாங்கினால் மென்மேலும் பெருகும் என்பது ஐதீகம். அட்சைய திருதியை விட இன்று சிறப்பான நாளாகும். ஆனாலும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கூட்டம் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவரவர் இல்லத்திலேயே கொண்டாடப்படுவது அவசியமாகும்.
.