முதுமை ஒரு மனிதனை நிலைகுலையச் செய்துவிடும் என்பது நமக்கு கண்கூடான விஷயம். முதலில் நாம் பாதிக்கப்படுவது கண்பார்வை. 2வது செவிப்புலன். 3வது ஜீரணக்கோளாறு. 4வதாக தோல்கள் எல்லாம் சுருங்கி உடலில் கிராப் போட்டாற்போல காணப்படும்.
குழந்தையாக இருக்கும்போது ஒவ்வொரு உறுப்பாக வளர ஆரம்பிக்கும். பின்னர் தேய்மானம் ஏற்பட்டு அது செயல் இழக்க ஆரம்பித்து விடும். பொதுவாக மூட்டுகளில் வலி ஏற்படும். தொடர்ந்து எப்போதும் உடலில் ஒரு வலி இருந்து கொண்டே இருக்கும். தூக்கம் குறையும். நினைவுத்திறன் படிப்படியாகக் குறையத் தொடங்கும்.
ஆனால் எல்லா விஷயங்களும் 95 வயதானாலும் சரியாக இருக்கு என்றால் அது அபாரம் தான். அப்படி ஒரு பாட்டி வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் தான் எப்படி உடலைப் பேணுகிறேன் என்பதை நமக்கு சொல்லித் தருகிறார்கள்.
காலையில் சூரிய உதயத்துக்கு முன்பாகவே எழுந்து விட வேண்டும். எழும்போது டக்கென்று எழுந்து விடக்கூடாது. முதலில் நாம் எழுந்துட்டோம்ங்கறது நமக்குத் தெரியணும். அப்புறம் மெல்ல கண் திறந்து பார்க்க வேண்டும்.
உள்ளங்கைகள் இரண்டையும் நல்லா தேய்த்து விட்டு கண்களில் ஒற்றி எடுக்க வேண்டும். அப்போது பகவானே பகவானே இந்தப் பொழுது நல்லா விடியணும்னு பிரார்த்தனை பண்ண வேண்டும்.
அதற்குப் பின் முகத்தை அலம்பி விட்டு வாயைக் கொப்பளித்து விட்டு வெளியில் வந்து சூரியபகவானை வழிபட வேண்டும். காலையில் இளம் வெயிலில் சூரியன் நம் கண்களில் பட வேண்டும். முற்றத்தில் நின்று கொண்டு மஞ்சள் கலந்த இளம் சூரியனை நாம் பார்த்து கும்பிட வேண்டும்.
அப்போது கொஞ்சம் கொஞ்சமாக இந்த சூரியன் மேலே எழும்பி வந்து கதிர்களை வீச ஆரம்பிக்கும். அதேபோல் சாயங்காலம் மேற்கே சூரிய அஸ்தமனத்தை வணங்க வேண்டும்.
இப்படி சூரிய உதயத்தையும், சூரிய அஸ்தமனத்தையும் யார் வணங்குகிறார்களோ அவர்களுக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படாது.
இதற்கு அறிவியல் ரீதியான காரணங்கள் உள்ளன. வைட்டமின் டி சூரிய ஒளியில் இருந்து நமது தோல் தயாரித்து விடும். அதனால் எலும்புகள் உறுதியாக ஆரம்பித்துவிடும். இதுவே நமக்கு உடற்பயிற்சியாகவும், பிரார்த்தனையாகவும், ஆன்மிக பலமாகவும் மாறிவிடுகிறது. உடலுக்கும், மனதுக்கும் பெரிய சக்தியைத் தருவதும் இதுதான்.
அதேபோல் இரவில் வெந்தயத்தை ஊற வைத்து அந்த தண்ணீரைக் காலையில் எழுந்ததும் எடுத்துக் குடித்து விட வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் சர்க்கரை நோயே அண்டாது.
உடம்பையும், மனசையும் ஒருபோதும் சோர்வடையச் செய்து விடக்கூடாது. நடக்கும்போதும் கையை முன்னும் பின்னுமாக அசைத்து நடக்க வேண்டும். உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் பயிற்சி கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
அதேபோல் மனசையும் நல்ல விதத்தில் உபயோகப்படுத்த வேண்டும். மற்றவர்களைப் பற்றி யாராவது குறை சொன்னால் காது கொடுத்துக் கேட்காதீர்கள்.
பகவானின் ஸ்தோத்திரங்களை நெஞ்சை நிமிர்த்தி நெற்றியில் புருவ மத்தியில் நிறுத்தி சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். 15 நிமிடம் இதுபோல நிலையில் தொடர்ந்து எவ்வித இடையூறுக்கும் இடம் கொடாமல் இருக்க வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து இருந்தால் ஆத்மபலமானது வளர்ந்து விடும். பசி எடுக்காமல் சாப்பிடாதே. பசி கொஞ்சம் இருக்கும்போது உணவை சாப்பிட்டு முடித்து விடு. சூரிய நமஸ்காரம் பண்ணினால் தோல் சுருங்காது. கண்கள் பலம் பெறும். ஞாபகசக்தி, ஆத்ம சக்தி எல்லாம் பலமாக இருக்கும்.
மனசை எப்போதும் சஞ்சலப்பட வைக்காதே. எதுவும் உன் சக்திக்கு உட்பட்டு தான் நடக்கும். அதனால் ரொம்பவும் ஆட்டம் போடக் கூடாது. எது நடந்தாலும் அது நன்மைக்கே என்று ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வர வேண்டும். புறம் பேசக்கூடாது. யாராவது உன்னிடம் வந்து அப்படி பேசினால் அதை ஏற்றுக் கொள்ளக்கூடாது.