குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க பெண்கள் கடைபிடிக்க வேண்டிய 6 முக்கிய விஷயங்களைப் பேச வேண்டும். முதலில் காலைப்பொழுதை துவங்கும்போதே சுறுசுறுப்பாக எழ வேண்டும். சோம்பேறித்தனம் இருக்கக்கூடாது. காலை எழுந்ததுமே மங்களகரமான வார்த்தைகளைப் பேச வேண்டும். பெண் சுறுசுறுப்பாக இருந்தால்தான் குடும்பம் சுறுசுறுப்பாக இருக்கும்.
இரண்டாவது நல்ல ஆடைகளை உடுத்துதல். கிராமமாக இருந்தாலும், நகரமாக இருந்தாலும் வீட்டுல இருக்குற பெண்கள் நைட்டியைத் தான் போடுறாங்க. இது இரவு உடை. அவரவர் சுதந்திரத்துக்கானது. இதையே பகலில் உடுத்தினால் அந்த உடைக்கான மரியாதையே போயிடுது. வெளியில் இருந்து யாராவது வந்தால் உடனே அவர்கள் உடைகளை மாற்றி விட்டு வர மாட்டார்கள்.
நாங்க இரவு உடையிலேயே தான் இருப்போம். வர்றவங்க வாங்க. இல்லன்னா போங்கன்னு அந்த நைட்டியில்தான் வரவேற்கிறாங்க. ஒரு பொண்ணைப் பார்த்ததும் அவளை வணங்க வேண்டும். அந்தளவு அவளது உடை இருக்க வேண்டும். பொண்ணைப் பார்த்ததும் எப்படி இருந்ததுன்னு கேட்டா பொண்ணு மகாலட்சுமி மாதிரி இருக்குன்னு சொல்லணும்.
பாரம்பரிய உடைன்னு ஒவ்வொரு நாட்டுக்கும் இருக்கு. புடவையே கட்டச் சொல்றீங்களான்னு கேட்கலாம். சுடிதார், சல்வார் போட்டுக்கலாம். வீட்டுக்கு வருபவர் முகம் சுழிக்கிற மாதிரி இருக்கக்கூடாது. அவங்களை வரவேற்கும் வகையில் மகாலட்சுமி மாதிரி இருக்க வேண்டும். தினமும் காலையும், மாலையும் விளக்கேற்றி இறைவனை வழிபட வேண்டும்.
வீட்டில் தீயசக்திகள் அகன்று மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். நாலாவது மங்களகரமான சொற்களைப் பேச வேண்டும். எப்போதும் அமங்கலமான வார்த்தைகளைப் பேசக்கூடாது. பேச்சில் நிதானம், அமைதி இருக்க வேண்டும். பேசியதை செய்யக்கூடிய ஆற்றல் இருக்க வேண்டும். எதிராளிகளும் அதைக்கேட்கும் வகையில் இருக்க வேண்டும்.
அமைதியாகப் பண்பாக, மகிழ்ச்சியாகப் பேச வேண்டும். வீட்டில் எப்போதும் பெண்கள் சிரித்த முகத்தோடு இருக்க பழக வேண்டும். யாராக இருந்தாலும் பார்த்த உடன் ஒரு புன்னகையுடன் இருக்க வேண்டும். ஆறாவதாக சுத்தமாக இருக்க வேண்டும். உடம்பு, மனசு, சுற்றுப்புறம், வீடு, பூஜையறை எல்லாவற்றையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
எந்த வீட்டில் சுத்தமாக இருக்கிறதோ அந்த வீட்டுப் பெண் பொறுப்புடன் நடந்து கொள்கிறாள் என்று அர்த்தம். இந்த 6 விஷயங்களையும் கடைபிடித்தால் போதும். இதைக் கடைபிடிக்கும்போது அவளுக்கே மகிழ்ச்சியும், தன்னம்பிக்கையும் ஏற்படும். குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



