பெற்றோர்களுக்கு தங்களின் குழந்தைகள் என்றுமே சிறப்பு வாய்ந்தவர்கள் எனவே அவர்களை விதவிதமாய் அழகுப்படுத்தி பார்க்க அனைத்து பெற்றோர்களும் விரும்புவார்கள். பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தையை அழகு படுத்துவதற்காக கண்களில் கண் மை கொண்டு வரைவதை பார்த்திருப்போம்.
கண்களில் கண்மை இடுவது பல ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கக்கூடிய பழக்கம். குழந்தையின் கண்களை பெரிதாக அழகாக காட்டுவதற்காக கண்மை வரையப்படுகிறது. மேலும் திருஷ்டிகள் படாமல் இருப்பதற்காகவும் கண்மை வைக்கப்படுகிறது. கண்மை சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பு அளிப்பதாகவும் சில முன்னோர்கள் நம்புகிறார்கள். எனவே குழந்தை பிறந்த நாட்களில் இருந்தே கண்மை வைக்கும்படி வீட்டில் உள்ள பெரியவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
ஆனால் உண்மையிலேயே இந்த கண்மை குழந்தையின் கண்களுக்கு நல்லதா என்று மருத்துவர்களிடம் கேட்டால் அவர்கள் அனைவரின் ஒருமித்த பதில் இல்லை என்பதே ஆகும்.
முன்பு குழந்தைகளுக்கு நம் முன்னோர்கள் பயன்படுத்திய கண் மை வீட்டிலேயே தயாரிக்க பட்டது. ஆனால் இப்பொழுது கடைகளில் வாங்கும் கண் மைகளில் அதிக அளவில் ஈயம் உள்ளது. குழந்தைகளின் சருமம் மிகவும் மென்மையானது இந்த கண் மை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும் பொழுது கண்களில் எரிச்சல் தொற்று மற்றும் அலர்ஜி போன்றவை ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
இந்த ஈயத்தை குழந்தைகளுக்கு அதிகம் பயன்படுத்தும் பொழுது அவர்களின் உடலில் பல்வேறு விதமான பாதிப்புகளை உண்டாக்கும் வாய்ப்புகள் மிக அதிக அளவில் இருக்கிறது.
உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (Food and drug administration) குறிப்பிட்டுள்ளதன்படி காஜல் எனப்படும் கண் மைகளில் 50 சதவிகிதம் லெட் சல்பைட் உள்ளன. நோய் மற்றும் தடுப்பு பாதுகாப்பு வாரியம் இரண்டு குழந்தைகள் அளவுக்கு அதிகமான காஜல் பயன்பாட்டால் இறந்துள்ளதாக தகவலை தெரிவித்துள்ளது.
லெட் எனப்படும் ஈயம் விஷத்தன்மை வாய்ந்தது. சிறுநீரகம், மூளை, மற்றும் எலும்பு மஜ்ஜை போன்ற பல உடல் உள்ளுறுப்புகளை பாதிக்க கூடிய சக்தி இந்த ஈயத்திற்கு உண்டு. ரத்தத்தில் அளவுக்கு அதிகமான ஈயம் கலக்கும் பொழுது குழந்தைகள் கோமா நிலைக்குச் செல்லலாம் அல்லது அவர்களுக்கு வலிப்பு ஏற்படலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இவை அச்சுறுத்தும் வகையில் இருந்தாலும் இதுதான் உண்மை. குழந்தைகள் இயற்கையிலேயே அழகானவர்கள். அவர்களை மேலும் அழகு படுத்த கண்களில் இது போன்ற மைகளை வைத்தல் தேவையற்றது. திருஷ்டி அல்லது தீய சக்திகள் அண்டாமல் இருக்க மை வைக்க வேண்டும் என்பது பல குடும்பங்களின் நம்பிக்கையாக இருந்தால் வீட்டில் தயாரித்த கண்மையினை நெற்றிப் பகுதி அல்லது காதுகளில் ஓரங்களில் மட்டும் வையுங்கள். இந்த வகையான கண் மைகளில் லெட் இல்லை என்றாலும் இதிலும் கார்பன் உள்ளது. எனவே கண்களில் வைக்க வேண்டாம். குழந்தைகளுக்கு பயன்படுத்தும் பொருட்களில் கவனமாய் இருங்கள்.