புடவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்… பட்டு புடவைகளின் வகைகள் பற்றி அறிந்து கொள்ளலாம் வாங்க

By Sowmiya

Published:

என்ன தான் விதவிதமாக நவநாகரீக உடைகள் வந்தாலும் பெண்களுக்கு புடவைகள் மீது இருக்கும் பிரியமே தனி தான்.

கோவில் விழாக்கள், திருமண விழாக்கள், கல்லூரி நிகழ்ச்சிகள் என எந்த பொது நிகழ்ச்சிகள் வந்தாலும் இன்றும் பெண்கள் அதிகம் தெரிவு செய்வது புடவை தான்.

புடவையைக் கட்டி விடுதல், புடவையை முன் கூட்டியே மடிப்பு எடுத்து  தருதல் போன்றவை இன்று அழகு கலை தொழிலில் முக்கிய பகுதியாக மாறிவிட்டது. புடவைகளிலும் ரெடிமேட் புடவைகள் வந்தாலும் பெரும்பாலும் பெண்களுக்கு பிடித்தது மடிப்பு எடுத்து கட்டுவது தான். அதிலும் பட்டுப் புடவை என்றால் சொல்லவே வேண்டாம் பட்டுப் புடவைகள் மீது என்றுமே அலாதிப் பிரியம் தான்.

இந்தப் பட்டு புடவைகளில் சில முக்கிய வகை பட்டு புடவைகள் என்னென்ன என்பதை நாம் பார்க்கலாம்

காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள்

kanchipuram

காஞ்சிபுரம் என்பது தமிழகத்தின் ஒரு சிறு நகரமாகும் இங்கு நெசவாளர்களால் கைத்தறி மூலம் பட்டு நெய்யப்படுகிறது. புவிசார் குறியீடால் அங்கீகரிக்கப்பட்ட பட்டுப்புடவை நம் காஞ்சி பட்டு. அடர் நிறங்களை கொண்டு தங்க சரிகைகளால் வேலைப்பாடு செய்து பார்ப்பவர்களின் கண்களை கவரக்கூடிய வகையில் உள்ள பட்டுப் புடவைகள் காஞ்சி பட்டு புடவைகள். பெரும்பாலும் திருமணங்களில் மணப்பெண்களின் அடையாளமாக திகழக்கூடியது இந்த காஞ்சி பட்டு.

போச்சம்பள்ளி பட்டுப் புடவைகள்

pochampalli

போச்சம்பள்ளி புடவைகள் என்பது தெலுங்கானாவில் போச்சம்பள்ளி நகரத்தில் உருவாக்கக்கூடிய புடவைகள் ஆகும். பார்ப்பவரை வியக்க வைக்கும் அழகில் உள்ள இந்த புடவைகள் மிகவும் இலகுவானதாக இருக்கும். எங்கும் எடுத்துச் செல்வதற்கு எளிதானதாகவும் இருக்கும். திருமணங்கள் விழாக்கள் விருந்துகள் போன்ற நிகழ்வுக்கு உடுத்திக் கொள்ள வசதியான ஒரு புடவை.

ஆரணி பட்டுப் புடவைகள்

arani

ஆரணி பட்டுப்புடவைகளும்  பெரும்பாலான மக்களால் விரும்பப்படக்கூடிய ஒரு பட்டுப் புடவையாகும். இந்தப் புடவைகளில் அரை கிலோ வரை சரிகைகள் பயன்படுத்தப்படுகிறது. கைத்தறி நெசவு மூலம் ஒரு சேலையை நெய்து முடிக்க பத்து முதல் 15 நாட்கள் ஆகும். இந்த சேலைகளும்  மிகவும் சிறப்பு பெற்றவை.

திருபுவனம் பட்டுப் புடவைகள்

Thirubuvanam

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தெற்கு அருகில் உள்ள திருபுவனம் பட்டுப் புடவைகளுக்கு மிகவும் பெயர் போன ஊர். வெளிநாட்டில் இருந்தும் இங்கு புடவைகள் வாங்கிட வருவது உண்டு. இந்த புடவைகளில் உயர்தரமான பட்டு நூல்கள், தங்க முலாம் பூசிய வெள்ளி ஜரிகைகளை பயன்படுத்தி கண் கவரும் பட்டுப் புடவைகளை இங்குள்ள கைத்தறி நெசவாளர்கள் தயாரித்து வருகிறார்கள்.

பனாரஸ் பட்டு புடவைகள் 

banaras

காசி பட்டு என்று அழைக்கக்கூடிய பனாரஸ் பட்டானது பலராலும் விரும்பி அணியக்கூடிய ஒரு புடவை ஆகும். இந்தப் பட்டானது அணிபவர்களுக்கு கூடுதல் மதிப்பையும் அழகையும் தரும்.