தொழில்நுட்ப வளர்ச்சியானது அனைத்து துறைகளிலும் மிகப்பெரிய வரமாக அமைந்துள்ளது. பல்வேறு நன்மைகளை உள்ளடக்கிய இந்த தொழில்நுட்ப வளர்ச்சிகளில் சில ஆபத்துகளும் உள்ளது. இப்படி நன்மையும் தீமையும் கலந்த ஒரு தொழில்நுட்ப வளர்ச்சி தான் மொபைல் போன். இன்று குழந்தைகள் முதல் பெரியவர் வரை கையில் மொபைல் இல்லாத ஆட்களே இல்லை என்று சொல்லலாம்.
இந்த மொபைலை கர்ப்ப காலத்தில் உள்ள பெண்மணிகள் அதிக அளவு பயன்படுத்துவது எந்த அளவு ஆபத்தானது என்பது பலருக்கு தெரிவதே இல்லை. கர்ப்ப காலம் என்பது பெண்ணிற்கும் வாழ்வில் ஒரு முக்கியமான பகுதியாகும். தாய் மற்றும் குழந்தை இருவரின் நலனையும் இந்த காலத்தில் ஒருசேர பராமரிக்க வேண்டியது அவசியம் ஆகிறது.
நல்ல ஆரோக்கியமான உணவினை உண்பது, மகிழ்ச்சி தரும் விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்துவது என கர்ப்பிணிப் பெண்களை நேர்மறையானவற்றில் மட்டும் ஈடுபட சொல்வதற்கு காரணம் அது தாய் மற்றும் குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
இப்படிப்பட்ட முக்கியமான காலகட்டத்தில் பெண்களுக்கு அதிக அளவு ஓய்வு தேவைப்படுகிறது. ஓய்வு நேரங்களில் பெரும்பாலான பெண்கள் மொபைலில் அதிக நேரம் செலவிடுவது உண்டு. ஆனால் அளவுக்கு அதிகமாக இந்த மொபைலை கர்ப்ப காலத்தில் பயன்படுத்துவதால் பல்வேறு பிரச்சனைகள் வர வாய்ப்பு உண்டு.
மொபைல் போனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு வளரும் கருவினை பாதிக்க வாய்ப்புண்டு. குறைந்த அளவிலான கதிர்வீச்சு ஏற்புடையது தான் என்றாலும் அது அளவினை மீறும் பொழுது குழந்தையின் ஆரம்பகால வளர்ச்சியில் சில சிக்கல்களை உண்டாக்கும். குறிப்பாக கருத்தரித்து இரண்டு முதல் 18 வாரங்கள் வரை பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்த பாதிப்பானது வெளியாக கூடிய கதிர்வீச்சின் அளவு , நேரம் மற்றும் வளரும் கருவின் கர்ப்ப காலம் ஆகியவற்றை பொறுத்தது.
அளவுக்கு அதிகமான மொபைல் பயன்பாடு தூக்கமின்மைக்கு வழி வகுப்பதால் குழந்தையின் மூளை மற்றும் எலும்பு வளர்ச்சியை பாதிக்கும். இப்படி மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படக்கூடிய குழந்தைகள் பின்னாலே உயர் செயல் திறன் மிக்கவர்களாக இருப்பார்.
உலகளாவிய ஆராய்ச்சி படி அளவுக்கு அதிகமான மொபைல் போனானது நீண்ட கதிர்வீச்சினை வெளிப்படுத்துவதால் கர்ப்பிணிப் பெண்களின் மைட்டோகாண்ட்ரியாவில் மரபணு வரிசையை மாற்ற வாய்ப்பு உண்டு இது தாயின் வழி குழந்தைக்கு ஏற்படும். குழந்தையின் மரபணு வளர்ச்சியை இது சிதைக்க வாய்ப்பு உண்டு.
கர்ப்பகால அளவுக்கதிகமான மொபைல் பயன்பாடு ஞாபகத்திறன் இழப்பு, தூங்குவதில் பிரச்சனை, பதட்டம், மனச்சோர்வு, மூளை செயல்பாடு பாதிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும்.
எனவே கர்ப்ப காலத்தில் முடிந்தவரை மொபைல் பயன்பாட்டினை பெண்கள் கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.