உங்கள் குழந்தையை ஆச்சரியமூட்டும் ஒரு லஞ்ச் பாக்ஸ் ரெசிபி…! பீட்ரூட் சப்பாத்தி ரோல்!

By Sowmiya

Published:

பள்ளி செல்லும் குழந்தைகளின் பெரும்பாலான பெற்றோர்களின் எதிர்பார்ப்பு படிப்பையும் தாண்டி அவர்கள் வீடு திரும்பும் பொழுது அவர்களுடைய லஞ்ச் பாக்ஸ் காலியாக இருக்க வேண்டும் என்பதுதான்.

குழந்தைகளுக்கு சாதம் சாம்பார்,  ரசம் சாதம், லெமன் சாதம் என்று சாப்பிடுவதை விட ஏதேனும் வித்தியாசமாக இருந்தால் விரும்பி சாப்பிடுவர்.

காய்கறி என்றாலே பல மைல் தூரம் ஓடும் குழந்தைகள் கூட அந்த காய்கறிகளில் ஏதேனும் வித்தியாசம் இருந்தால் அதை ஆர்வத்துடன் சாப்பிட்டு பார்ப்பார்கள்.

இப்படி அனைத்து காய்கறிகளின் சத்துக்களும் நிறைந்த சுவையான சத்தான ஒரு லஞ்ச் பாக்ஸ் ரெசிபி தான் பீட்ரூட் சப்பாத்தி ரோல்.

beetroot chapathi

பீட்ரூட் சப்பாத்தி ரோல் செய்ய தேவையான பொருட்கள்:

  • பீட்ரூட் – 1
  • கோதுமை மாவு – ஒன்றரை கப்
  • உப்பு – தேவையான அளவு
  • ஓமம் – சிறிதளவு
  • பூண்டு – 6 பல்
  • குடைமிளகாய் – 1
  • கேரட் – 2
  • வெங்காயம் – 1
  • முட்டைக்கோஸ் துருவல் – அரை கப்
  • சோளம் – கால் கப்
  • சீஸ் அல்லது பன்னீர் – 1/2 கப்
  • தக்காளி மற்றும் மிளகாய் ‌‌‌‌‌‌சாஸ்
  • எண்ணெய் – சிறிதளவு

பீட்ரூட் சப்பாத்தி ரோலின் செய்முறை:

  • முதலில் பீட்ரூட்டை நன்கு கழுவி துண்டு துண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
  • நறுக்கிய பீட்ரூட்டை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு மை போல அரைத்துக் கொள்ள வேண்டும். பீட்ரூட் கட்டிகள் ஏதும் இல்லாதவாறு அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த பீட்ரூட் ப்யூரியை கோதுமை மாவுடன் சேர்த்து சிறிதளவு உப்பு மற்றும் ஓமம் சேர்த்து வழக்கமாய் சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் பிசைந்து கொள்ளவும். (வெண்ணெய் சேர்த்து பிசைந்தால் நன்றாக இருக்கும்)
  • பீட்ரூட் சேர்த்த சப்பாத்தி மாவினை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து சப்பாத்தி போல் தேய்த்து தோசை கல்லில் போட்டு எடுக்கவும்.
  • இப்பொழுது பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். கேரட் குடைமிளகாய் ஆகியவற்றை பொடி பொடியாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் சில துளி எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் பொடி பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் தயாராக வைத்திருக்கும் அனைத்து காய்கறிகளையும் சேர்த்து வதக்கவும்.
  • காய்கறிகள் மிக அதிகமாக வதக்கி அதன் தன்மையை மாற்றி குழைத்து விடக்கூடாது மிக மிகக் குறைவாக வதக்கினால் போதும். வாயில் கடிபடும் அளவிற்கு இருக்க வேண்டும்.
  • ஏற்கனவே தயார் செய்து வைத்த பீட்ரூட் சப்பாத்திகள் மேல் சிறிதளவு தக்காளி சாஸினை தடவி நடுப்பகுதியில் காய்கறிகளை பரப்பி வைக்கவும்.
  • சிறிதளவு மிளகாய் சாஸினை வைத்து ரோல் போல் சப்பாத்தியை மடக்கி வைக்கவும்.
  • இதை அலுமினிய பேப்பர்களில் வைத்தும் டிபன் பாக்ஸில் வைக்கலாம்.
  • குழந்தைகளுக்கு விருப்பப்பட்ட காய்கறிகளை சேர்த்து செய்யலாம். பீட்ரூட் சேர்க்காமல் வெறும் சப்பாத்தியிலும் இந்த ரோலினை செய்து கொடுக்கலாம்.