சிவ அம்சம்ன்னு சொல்லப்படும் ருத்ராட்சம் என்பது சிவ பக்தர்கள் விரும்பி அணியும் ஒரு ஆன்மீக அடையாளம். உருண்டை வடிவத்தில் மணி போல் அதேநேரத்தில் ஒழுங்கற்று இருக்கும். ருத்ரன் என்பது சிவபெருமானை ஆதி வடிவமாகும். அவரின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியதே இந்த ருத்ராட்சை. ருத்ராட்சையில் பலவகை இருக்கின்றது. ஒரு முகம், இரண்டு முகம் எனத்தொடங்கி 21 முகம் வரை இந்த ருத்ராட்சம் இருப்பதாக சொல்கின்றனர். இதில் 14 முகம்வரை சாதாரண மனிதர்கள் அணியலாம். அதன்பிறகு வருபவையெல்லாம் குரு ஸ்தானத்தில் இருப்பவர்களும், இறைமூர்த்தங்களுக்கு அணியப்படுபவை.
உலகில் விளையும் ருத்ராட்சையில் 50%க்கு மேல் 5முக ருத்ராட்சமே ஆகும். இதுதான் ஆன்மீகத்துக்கு உகந்தது. இந்த 5 முக ருத்ராட்சத்திற்கு பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருக்கின்றன. இந்த ருத்ராட்சம் சிவபெருமானால் ஆசிர்வதிக்கப்பட்ட ஒன்று என பக்தர்களால் நம்பப்படுகிறது. இந்த ருத்ராட்சத்தை ஒருவர் பக்தி சிரத்தையோடு அணிவதால் அவருடைய பாவங்கள் அழிக்கப்படும். நவகிரகத்தில் குருவின் கட்டுபாட்டில் இயங்கும் இந்த ருத்ராட்சம் தேவகுரு என அழைக்கப்படுகிறது. தேவர்களுக்கெல்லாம் குரு என்பதே இதன் பொருளாகும்.
ருத்ராட்சம் தோன்றிய கதை..
முன்னொரு காலத்தில் நாரத முனிவருக்கு ஒரு பழம் கிடைத்தது. அப்பழத்தை அவர் மகாவிஷ்ணுவிடம் காண்பித்து, இது என்ன பழம்?! இப்பழத்தை இதுவரை நான் பார்த்ததில்லையே எனக் கேட்டார். அதற்கு மகாவிஷ்ணு நாரதா ஆதிகாலத்தில் திரிபுராசுரன் என்ற அரக்கன் இருந்தான். அவன் சர்வ வல்லமை படைத்தவனாகவும்,பிரம்மனிடம் வரம் பெற்றவனாகவும் இருந்தான்.அந்த கர்வத்தினால் சர்வ தேவர்களையும் துன்புறுத்தினான். அப்பொழுது தேவர்கள் அனைவரும் என்னிடம் வந்து அந்த அரக்கனை அழிக்குமாறு வேண்டினார்கள். நான் அனைவரையும் அழைத்துக் கொண்டு சிவபெருமானிடம் முறையிட்டோம்.அப்பொழுது சிவபெருமான் தேவர்கள் அனைவரின் சக்தியையும் ஒரேசக்தியாக மாற்றி ஒரு வல்லமை படைத்த ஆயுதம் ஒன்றை உண்டாக்கினார். அந்த ஆயுதத்தின் பெயர் அகோரம் ஆகும். தேவர்களை காக்க திரிபுராசுரனை அழிக்க கண்களை மூடாமல் பல ஆயிரம் வருடம் அகோர அஸ்தர நிர்மாணத்திற்காக சிவபெருமான் சிந்தனையில் ஆழ்ந்தார்.
அப்போது மூன்று கண்களையும் அவர் மூடும்போது, பல ஆண்டுகள் மூடாமல் இருந்து மூடுவதால் மூன்று கண்களில் இருந்தும் கண்ணீர் சிந்தியது. அந்த கண்ணீர் பூமியில் விழுந்து ருத்ரட்ச மரமாக உண்டானது. அந்த ருத்ராட்ச மரத்தில் இருந்து விழுந்த பழம்தான் இது, என மகாவிஷ்ணு நாரதரிடம் கூறினார். அதை அணிபவரை அவர் கண்போலக் காப்பாற்றுவார். எனவே அனைவரும் கண்டிப்பாக ஐந்து முகத்திலான ஒரு ருத்ராட்சமாவது எப்போதும் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டுமென விஷ்ணு கூறியதாய் புராணங்கள் சொல்கின்றது.
எத்தனை முகமென எப்படி கண்டுபிடிப்பது?!
ருத்ராட்சத்தின் குறுக்கே அழுத்தமான கோடுகளை பார்க்கலாம். இதற்குத்தான் முகம் எனப்பெயர். ஐந்து கோடுகள் இருந்தால் ஐந்து முகம். ஆறு கோடுகள் இருந்தால் ஆறு முகம் என இப்படியே கணக்கிட வேண்டியதுதான். ருத்ராட்சத்தினை ஆண், பெண், ஜாதி, மதம் பேதமின்றி யார் வேண்டுமானாலும் அணியலாம். மன,உடல் சுத்தத்தோடு அணிய வேண்டுமென்ற நியதிலாம் கிடையாது. ருத்ராட்சத்தினை அணிந்தால் உடல், மன சுத்தம் தானாய் வந்து சேரும். ருத்ராட்சம் அணிவதால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். நீராடும்போது ருத்ராட்சத்தினை அணிந்திருந்தால் கங்கையில் குளித்த புண்ணியம் கிடைக்கும் என்கின்றது புராணங்கள். இதய தொடர்பான பிரச்சனைகள், ரத்த அழுத்தம் மாதிரியான நோய்களி நீங்கும். ருத்ராட்சத்தினை காதணி, பிரேஸ்லெட், வளையல், நெத்திச்சுட்டி என பல்வேறு ஆபரணமாய் அணிந்தாலும் கழுத்து செயினாய் அணிவதே அதிகம் நன்மை பயக்கும்.
இந்த ருத்ராட்சத்தினை திங்கள் அல்லது வியாழன் அன்று வரும் சுபமுகூர்த்தத்தில் தாய், தந்தை அல்லது குரு அல்லது கோவில் அர்ச்சகரிடமிருந்து அணிந்து கொள்ளலாம். ருத்ராடத்தினை அணீய முடியாதவர்கள் ஒரு பெட்டியில் ருத்ராட்சத்தினை வைத்து அதை பூஜை அறையில் வைத்து தினமும் பூஜிக்க வேண்டும். பெட்டியில் வைத்திருக்கும் ருத்ராட்சத்தினை அடிக்கடி எண்ணெய் பூசி வைக்கவேண்டும்,. கழுத்தில் அணியும் ருத்ராட்சம் எக்காரணம் கொண்டும் கீழே விழாதவாறு கவனமாய் இருக்க வேண்டும். இறப்பு, பூப்படைந்த பெண் அல்லது மாதவிலக்கான பெண் இருக்கும் வீடு, குழந்தை பிறந்த வீடுகளுக்கு போகும்போது சிலர் ருத்ராட்சத்தினை கழட்டி வைத்து செல்வர். இது தேவையற்றது. ருத்ராட்சத்தினை அணிந்தபின் மது, மாமிசம், புகையினை தவிர்க்கவேண்டும். கணவன், மனைவிகளின் கடமையான இல்லற சுகத்தை அனுபவிக்கலாம். ஆனால், முறைதவறிய உறவு மட்டும் கூடவே கூடாது.
இத்தனை வழிமுறைகளையும் சரிவர கடைபிடித்து சிவசிந்தனையோடு ருத்ராட்சத்தினை அணிந்து வந்தால் சகல நன்மைகளும் கிட்டும்.
ஓம் நமச்சிவாய! சிவாய நமஓம்!