வேலை முடிந்த அடுத்த நிமிடமே செல்போன் சுவிட்ச் ஆப்.. Gen-Z தலைமுறையினரின் அசத்தல் ஐடியா.. ஆனால் எல்லோருக்கும் வொர்க் அவுட் ஆகுமா?

வேலை அழுத்தம், மன உளைச்சல் மற்றும் பதற்றம் போன்றவை நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பெருமளவு பாதிக்கின்றன. பணிக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையே சமநிலை காண்பது என்பது ஒரு பெரிய சவாலாக உள்ளது.…

mobile

வேலை அழுத்தம், மன உளைச்சல் மற்றும் பதற்றம் போன்றவை நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பெருமளவு பாதிக்கின்றன. பணிக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையே சமநிலை காண்பது என்பது ஒரு பெரிய சவாலாக உள்ளது. இந்த சிக்கலைத் தீர்க்க ஒரு பணியாளர், Gen-Z தலைமுறையினரின் அணுகுமுறையை பின்பற்றி, தனது வாழ்க்கையில் நிம்மதியை கொண்டுவந்துள்ளார். அவர் தனது அனுபவத்தை ரெடிட் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

இரண்டு செல்போன்கள்: ஒரு புதிய அணுகுமுறை

“கடந்த ஆண்டு நான் கடுமையான மன உளைச்சல் மற்றும் மனச்சோர்வில் மூழ்கியிருந்தேன். அப்போது என் வாழ்க்கையை மாற்ற ஒரு முடிவெடுத்தேன்,” என்று அவர் தனது பதிவை தொடங்கினார். “என் பழைய செல்போன் எண்ணை அலுவலக பயன்பாட்டிற்காக மட்டும் வைத்துக்கொண்டேன். அதற்கென ஒரு மலிவு விலை ஸ்மார்ட்போனையும் வாங்கினேன். பிறகு, தனிப்பட்ட பயன்பாட்டிற்காக புதிய எண்ணுடன் இன்னொரு செல்போனை வாங்கிக்கொண்டேன்,” என்று அவர் விவரித்தார்.

எல்லைகளை அமைத்தல்:

அலுவலக நேரம் முடிந்தவுடன், அவர் தனது வேலைக்கான செல்போனை தானாகவே அணைத்துவிடுகிறார். வீட்டிற்கு வந்ததும், அந்த செல்போனை தனது அலுவலக பைக்குள் வைத்து, “கண்ணுக்குத் தெரியாதவாறு, கைக்கு எட்டாதவாறு” ஒரு அலமாரியில் வைத்துவிடுகிறார். அவரது லிங்க்ட்இன் கணக்கு மற்றும் அலுவலக மின்னஞ்சல்கள் அனைத்தும் வேலைக்கான போனில் மட்டுமே இருக்கும்.

அலுவலக நேரம் முடிந்தபின், அவர் வேலை சம்பந்தமான எந்த அழைப்புகள், வாட்ஸ்அப் அல்லது மின்னஞ்சல்களை பார்ப்பதில்லை. “நான் நகரத்திற்கு வெளியே வசிப்பதால், நெட்வொர்க் சரியில்லை என்று அலுவலகத்தில் கூறிவிட்டேன். இதனால் யாராவது தொடர்பு கொள்ள முயன்றாலும், ‘கவரேஜ் பகுதிக்கு வெளியே’ என்றே கேட்கும்,” என்று அவர் கூறியுள்ளார்.

இந்த எளிய, ஆனால் புத்திசாலித்தனமான அணுகுமுறை தனது மன ஆரோக்கியத்தை மேம்படுத்தியதாக அவர் தெரிவித்தார். “சில சமயங்களில், Gen-Z தலைமுறையினரிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். எல்லைகளை வகுப்பதில் அவர்கள் நம்மை விடச் சிறந்தவர்கள்,” என்று அவர் தனது பதிவை முடித்தார்.

இந்த பதிவுக்குப் பல்வேறு பயனர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர்:

ஒரு பயனர், “என் சக ஊழியர் இதேபோல செய்தார். ஆனால் எங்கள் மேலாளருக்கு தெரிந்து, அனைவர் முன்னிலையிலும் அவரை திட்டிவிட்டார். பணிக்கு முன்னுரிமை அளிக்கவில்லை என்று கூறி, அவரது தற்காலிகப் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. கடைசியில் அவர் ராஜினாமா செய்யும்படி ஆனது,” என்று தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.

மற்றொருவர், “அருமை! இதை நீங்கள் ஒரு நல்ல வாழ்க்கை அறிவுரையாக மாற்றலாம்,” என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டார்.

“இரண்டு போன்கள் தேவையில்லை. ஆண்ட்ராய்டில் வேலை சுயவிவரங்கள் (work profiles) என்ற அம்சம் உள்ளது,” என்று ஒருவர் யோசனை தெரிவித்தார்.

“இது மேலாளர்களுடன் உள்ள உறவைப் பாதிக்காதா?” என்று இன்னொருவர் சந்தேகம் எழுப்பினார்.