திருமணமாகி சில மாதங்களே ஆன ஒரு இளம்பெண், தனது திருமண வாழ்க்கை எதிர்பார்த்த மாதிரி இல்லை என்றும் இந்த திருமணத்தை Undo செய்ய விரும்புவதாகவும் சமூக வலைதளமான ரெடிட்டில் அவர் பகிர்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே, தனது கணவரிடம் இருந்து உணர்வுபூர்வமான அன்பு இல்லை என்பதை உணர்வதாக அந்த பெண் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலை, அவரது கணவர் ஒரு பணி நிமித்தமாக வெளியூர் சென்றபோது மேலும் மோசமடைந்துள்ளதாகவும், தான் மிகவும் வருத்தமாக இருப்பதாக கூறியுள்ளார்.
கணவரிடம் போனில் பேசினால் அவரோ, சில வார்த்தைகளை மட்டும் கூறிவிட்டு, தான் சோர்வாக இருப்பதாகவும், ஓய்வெடுக்க செல்வதாகவும் கூறி அழைப்பை துண்டித்துள்ளதாகவும் வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார். சில மணி நேரம் கழித்து, மீண்டும் மனம்விட்டுப் பேசலாம் என நினைத்து, “நீங்கள் விழித்திருக்கிறீர்களா?” என்று குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், ஒரு மணி நேரத்திற்கு பிறகு, கணவர் பதிலுக்கு அனுப்பிய புகைப்படத்தில், அவர் தனது நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்ததை பார்த்து கோபமாக இருந்தது என்றும் பதிவு செய்துள்ளார்.
திருமணத்திற்குப் பிறகு மாதந்தோறும் திருமண நாளை கொண்டாடவும், பரிசுகள் கொடுக்கவும் விரும்பியதாகவும், பெரிய விலை உயர்ந்த பரிசுகள் கூட வேண்டாம், ஒரு ரோஜா அல்லது ஒரு வாழ்த்து செய்தி கிடைத்தால் போதும்” என்று கூறியபோதும், அதை தனது கிண்டல் செய்து, யாராவது மாதாமாதம் திருமண நாளை கொண்டாடுவார்களா? என எனது ஐடியாவை கிண்டல் செய்ததாகவும் அவர் பதிவு செய்துள்ளார்.
எனவே தான் எடுத்த திருமண முடிவு தவறு என எண்ணுவதாகவும், இந்த திருமணத்தை Undo செய்யலாமா? அல்லது சகித்து கொண்டு திருமண வாழ்க்கையில் தொடர்வது சரியாக இருக்குமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த பதிவுக்கு பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர். ஒரு பயனர், “சில ஆண்கள் சமூகத்தின் பார்வைக்காக மட்டுமே திருமணம் செய்துகொள்கிறார்கள். நீங்கள் திருமணமானவர் என்று சமூகத்திற்கு தெரியப்படுத்த, ஒரு மனைவியை மட்டுமே அவர்கள் விரும்புகிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பயனர், “சிலருக்கு உணர்ச்சிபூர்வமான விஷயங்கள் புரியாது. அவர்கள் நடைமுறை வாழ்க்கையை மட்டுமே வாழ்கிறார்கள். இந்த விஷயத்தில் நீங்கள் இருவரும் மனநல ஆலோசனைக்கு செல்லலாம்” என்று அறிவுறுத்தியுள்ளார்.
சிலர், அந்தப் பெண்ணின் கணவருக்கு அன்பை வெளியே காட்ட தெரியாமல் இருக்கலாம், ஆனால் உண்மையில் அவர்கள் தன் மனைவியின் மீது மனதிற்குள் மிகுந்த அன்ப் வைத்திருப்பார்கள் என்றும், எனவே அவசரப்பட்டு தவறான முடிவு எடுக்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

