அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய நிபுணர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதை தடுக்க எல்லா வழிகளையும் மூடிய நிலையில், உலகின் மற்ற நாடுகள் இப்போது இந்திய திறமையாளர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கின்றன. ஜெர்மனி, பிரிட்டன், கனடா, சீனா என வரிசையாக, “எங்களிடம் வாருங்கள், நீங்கள் எங்களுக்கு தேவை” என்று புதிய திட்டங்களை அறிவித்து வருகின்றன.
இந்திய திறமைகளுக்கான உலகளாவிய போட்டி அதிகாரப்பூர்வமாக தொடங்கிவிட்டது. பிரிட்டன் விசா கட்டணங்களை குறைத்துள்ளது, கனடா அதன் பழைய குடிவரவு திட்டத்தை மீண்டும் விரிவுபடுத்தியுள்ளது. இந்தியர்களை தடுத்து நிறுத்துவதன் மூலம் பெரிய அரசியல் நகர்வை மேற்கொள்ள நினைத்த டிரம்ப்பின் திட்டம் இன்று முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது என்று நிரூபணமாகியுள்ளது.
இந்திய நிபுணர்கள் அமெரிக்க நிறுவனங்களில் சேருவதை தடுக்க டிரம்ப் பல நடவடிக்கைகளை எடுத்தார். அமெரிக்க நிறுவனங்கள் இந்தியர்களை வேலைக்கு அமர்த்தினால் வரிச்சலுகை கிடைக்காது என்று எச்சரித்தார். மேலும், H-1B விசா கட்டணத்தை $6,000-லிருந்து $100,000-ஆக உயர்த்தினார். இதனால் அமெரிக்க நிறுவனங்கள் இந்திய ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக மாறியது.
அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்தது. குறிப்பாக STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் மருத்துவம்) துறையை சேர்ந்த சுமார் ஒரு லட்சம் இந்தியர்கள் இதனால் பாதிக்கப்பட்டு, அமெரிக்க கனவு சிதைந்து நின்றனர்.
ஆனால், இப்போது டிரம்ப்பின் திட்டம் வீழ்ச்சியடைய காரணம், உலகின் மற்ற நாடுகள் இதே நிபுணர்களை கைகூப்பி வரவேற்க தொடங்கிவிட்டன.
சமீபத்தில் இந்தியாவுக்குப் பெரிய அளவில் இணக்கமாக இல்லாததாக கருதப்பட்ட கனடா கூட, “எங்கள் நாட்டிற்கு வாருங்கள், நீங்கள் எங்களுக்கு தேவை” என்று அழைக்கிறது.
கனடாவின் பிரதமர் மார்க் கார்னி சமீபத்தில் பேசுகையில், “அமெரிக்காவில் H-1B விசாவுக்கு விண்ணப்பித்து, விசா கிடைக்காதவர்கள் அனைவரும் திறமையானவர்கள். அது கனடாவுக்கு ஒரு வாய்ப்பு. அவர்களுக்காக விரைவில் ஒரு புதிய திட்டத்தை நாங்கள் கொண்டு வருவோம்” என்று அறிவித்தார். சுருக்கமாக சொன்னால், “அமெரிக்காவுக்கு நீங்கள் தேவையில்லையென்றால், கவலை வேண்டாம், கனடா உங்களை ஏற்று கொள்ளும்” என்பதே அவரது செய்தி.
உண்மையில், 2023-லேயே கனடா ஒரு சிறப்பு விசா திட்டத்தைக் கொண்டு வந்தது. இது H-1B வைத்திருப்பவர்கள் கனடாவிற்கு சுதந்திரமாக செல்ல அனுமதித்தது. இது ஒரு திறந்த பணி அனுமதி என்பதால், கனடாவில் வேலை உறுதியுடன் நுழைய வேண்டிய அவசியம் இல்லை; முதலில் அங்கு சென்று பின்னர் வேலை தேடி கொள்ளலாம். அந்த ஆண்டே, சுமார் 10,000 H-1B விசா வைத்திருப்பவர்கள் கனடாவுக்கு குடிபெயர்ந்தனர். இப்போது அந்த திட்டம் மேலும் விரிவாக்கப்பட உள்ளது.
கனடா மட்டுமல்ல, ஜெர்மனியும் இந்தியர்களை இருகரம் கூப்பி அழைக்கிறது. ஜெர்மனியின் தூதர் பிலிப் ஆக்கர்மேன் டிரம்ப்பை மறைமுகமாக கிண்டலடித்து ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், “ஜெர்மனியில் பணிபுரியும் இந்தியர்களை பற்றி பேச இதுவே சரியான நேரம். இங்குள்ள இந்தியர்கள் அதிக சம்பளம் வாங்குபவர்களில் உள்ளனர். உண்மையில், அவர்கள் சராசரி ஜெர்மானிய குடிமகனை விட அதிகமாக சம்பாதிக்கிறார்கள். இது மோசமானதல்ல, மாறாக இது அவர்கள் எங்கள் சமூகத்திற்கு வலிமையாக பங்களிக்கிறார்கள் என்பதை காட்டுகிறது” என்றார். இது, டிரம்ப்பின் குடியேற்ற எதிர்ப்பு கொள்கைக்கு நேரடியான பதிலடியாக இருந்தது.
இதற்கிடையில், பிரிட்டன் பிரதமரும் விசா கட்டணங்களை ரத்து செய்ய திட்டமிடுவதாக கூறப்படுகிறது. பிரிட்டன் “குளோபல் டேலண்ட் டாஸ்க் ஃபோர்ஸ்” என்ற புதிய பிரிவை உருவாக்கியுள்ளது. இது இந்திய விஞ்ஞானிகள் மற்றும் டிஜிட்டல் நிபுணர்களை ஈர்ப்பதற்கான புதிய திட்டங்களை வகுத்து வருவதாக ஃபைனான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
அதிர்ச்சியூட்டும் விதமாக, இந்தியாவின் போட்டி நாடான சீனா கூட இந்த போட்டியில் இணைந்துள்ளது. அமெரிக்காவின் H-1B விசா நிராகரிப்புக்கு நேரடி போட்டியாக, சீனா K விசா திட்டத்தை அக்டோபர் 1-ம் தேதி தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தில், வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு நிறுவனங்கள் கூடுதல் பணம் செலுத்த வேண்டியதில்லை. தென் கொரியா கூட இந்திய நிபுணர்களை ஈர்க்க சிறப்பு விசா திட்டங்களை வடிவமைக்க அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. மொத்தத்தில் ஐரோப்பா முதல் கிழக்கு ஆசியா வரை, வளர்ந்த நாடுகள் இந்திய திறமைகளை கவர போட்டியிடுகின்றன.
மேற்கண்ட நாடுகள் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன. பொருளாதார வளர்ச்சிக்கு திறமையான, உழைக்கும் வயதுடைய மக்கள் தேவை. ஆனால், இங்கு மக்கள் ஓய்வு பெற்று பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதற்கு பதிலாக, சுகாதார பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்புச் செலவினங்களை அதிகரிக்கிறார்கள். இதனால் வளர்ச்சி குறைகிறது
இந்தியாவிலோ, மக்கள் தொகையில் பெரும் சதவிகிதத்தினர் இளைஞர்களாக உள்ளனர். இந்த இளம், திறமையான இந்தியர்களை அழைத்து, தங்கள் பொருளாதாரத்திற்கு பங்களிக்க செய்வதை இந்த நாடுகள் ஒரு நிலையான தீர்வாக பார்க்கின்றன.
இந்தியாவிற்கு இது நல்லதா, கெட்டதா? ‘திறமை இழப்பை’ எப்படிப் பயன்படுத்துவது? ஒரு நாட்டின் சிறந்த திறமைகள் வெளிநாடுகளுக்கு செல்வது நாட்டின் வளர்ச்சிக்கு ஒருபோதும் நல்லதல்ல.
வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் அனுப்பும் பணம் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 3%-க்கு பங்களிக்கிறது. அமெரிக்கா கதவுகளை மூடியபோது இந்த நிதி வரத்து குறைந்தது. இப்போது கனடா, ஜெர்மனி போன்ற நாடுகள் அழைப்பதால், அந்த நிதி வரத்து மீண்டும் அதிகரிக்கும்.
எனினும், இதனால் ஏற்படும் அறிவுசார் இழப்பு மிகப் பெரியது. இந்தியாவில் நடந்திருக்க வேண்டிய ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் உயர் திறன் வேலைகள் இப்போது வெளிநாடுகளில் நடக்கின்றன.
இந்தியா தனது திறமையாளர்களுக்கு நல்ல வாய்ப்புகளையும், ஊதியத்தையும் வழங்கினால், அவர்கள் நாட்டிலேயே இருப்பார்கள். இல்லையெனில், அவர்களின் திறமை மதிக்கப்படும் இடத்தை தேடிச் செல்வார்கள். எனவே, இந்தியா தனது சொந்த திறமைகளை போற்றி பாதுகாக்கும் அளவுக்கு வலிமை பெற வேண்டும்.
உலகமே நம்முடைய திறமைகளை தேடும்போது, “யார் நம்மை அதிகம் நாடுகிறார்கள்” என்பது கேள்வியல்ல; “நமது சிறந்த மனம் இந்திய எதிர்காலத்தையும் கட்டியெழுப்ப உதவுகிறதா” என்பதே உண்மையான கேள்வி.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
