சமையல் செய்து விட்டேன், சாப்பிடுங்கள் என தனது கணவருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு, ஒரு பெண் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் அன்விதா என்ற பெண், கடந்த 2019ஆம் ஆண்டு கௌரவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு, தனது கணவர் தன்னை மதிக்கவில்லை என்றும், தன்னுடைய சம்பளம், பேங்க் பாஸ்புக், ஏடிஎம் கார்டு உள்ளிட்ட அனைத்தையும் அவர் வாங்கி வைத்துக் கொண்டதாகவும், தனது தற்கொலை குறிப்பில் எழுதியுள்ளார்.
மேலும், “தன்னை தனது கணவர் தொடர்ந்து கேலி செய்து வந்தார். வீட்டில் எவ்வளவு வேலை செய்தாலும் ஒரு பாராட்டு கூட கிடைக்காது. கணவர், மாமனார், மாமியாருக்கு நான் ஒரு வேலைக்காரியாகவே தெரிகிறேன். ஒரு மனுஷியாகவும் மதிக்கவில்லை” எனவும் குறிப்பில் எழுதி வைத்துள்ளார்.
இந்த குறிப்புகளை தனது பெற்றோருக்கு WhatsApp மூலம் அனுப்பிவிட்டு, “தயவு செய்து எனது மகனை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். அவன் தந்தையைப் போல் ஒரு நாளும் மாறக்கூடாது. நான் என் மகனை மிகவும் நேசிக்கிறேன்” என எழுதி வைத்துவிட்டு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு முன், தனது கணவருக்கும் “உங்களுக்கு தேவையானதை சமைத்து விட்டேன், சாப்பிடுங்கள்” என மெசேஜ் அனுப்பியுள்ளார். இந்த மெசேஜ் பார்த்ததும், அன்விதா பெற்றோர் அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, காவல்துறையினர் அன்விதாவின் கணவர், மாமனார், மாமியார் ஆகியோருக்கு எதிராக வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.