அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா மீது 50% வரி விதித்ததற்கு, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதை காரணமாக கூறினார். ஆனால், இதன் பின்னணியில் டிரம்ப்பின் தனிப்பட்ட கோபம் மற்றும் அரசியல் தந்திரங்களே முக்கிய காரணங்களாக இருந்ததாக தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக பற்றாக்குறை மற்றும் டிரம்ப்பின் உலக அரசியல் மேலாதிக்க கனவுகளுக்கு இந்தியா துணைபோக மறுத்ததுமே உண்மையான காரணங்கள் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
வர்த்தகப் பற்றாக்குறையும் டிரம்ப்பின் நிபந்தனைகளும்
இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பு, அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பை விட இரு மடங்காக உள்ளது. இந்த வர்த்தக பற்றாக்குறை டிரம்ப்பின் கோபத்திற்கு ஒரு முக்கிய காரணம். இந்த பற்றாக்குறையை சரிசெய்ய, அமெரிக்காவில் மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் பொருட்களை இறக்குமதி வரியே இல்லாமல் இந்தியா வாங்க வேண்டும் என்று டிரம்ப் நிபந்தனை விதித்தார்.
ஆனால், இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட கடுகு போன்ற பொருட்களுக்கே அனுமதி வழங்கப்படாத நிலையில், அமெரிக்காவின் மரபணு மாற்றப்பட்ட விவசாய பொருட்களை இறக்குமதி செய்வது சாத்தியமற்றது. மேலும், இது இந்திய விவசாயிகள் மற்றும் பால் பண்ணையாளர்களை கடுமையாக பாதிக்கும் என்பதால், பிரதமர் மோடி டிரம்ப்பின் நிபந்தனையை ஏற்க மறுத்துவிட்டார். இந்த மறுப்பு, டிரம்ப்பை மேலும் அதிருப்தியடையச் செய்தது.
டிரம்ப்பின் சமாதான நோபல் பரிசு கனவு
அமெரிக்காவின் ஒரு முன்னணி புலனாய்வு பொருளாதார ஊடகம் வெளியிட்ட ஆய்வின்படி, டிரம்ப்பின் கோபத்திற்கு உண்மையான காரணம் வேறு ஒரு நிகழ்வுதான். பாகிஸ்தான்-இந்தியா போர் நடந்தபோது, “நான்தான் போரை நிறுத்தினேன்” என்று டிரம்ப் பல இடங்களில் கூறி வந்தார். ஆனால், பாகிஸ்தான் கெஞ்சி கேட்டுக்கொண்டதால் மட்டுமே போர் நிறுத்தப்பட்டதாகவும், மூன்றாவது நாட்டின் தலையீட்டால் அல்ல என்றும் இந்தியா அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்த நிகழ்வு டிரம்ப்பிற்கு ஒரு சிறிய பின்னடைவாக அமைந்தது.
இதற்கு பிறகு, டிரம்ப் தனது இமேஜை மீட்டெடுக்க ஒரு தந்திரமான திட்டத்தை வகுத்தார். ஜி5 மாநாட்டிற்காக கனடாவுக்கு வந்திருந்த பிரதமர் மோடியை, அமெரிக்காவுக்கு அழைத்து பாகிஸ்தான் ராணுவ தளபதியுடன் சேர்த்து பேச வைத்தால், உலக அமைதிக்காக நான் பாடுபட்டேன் என்ற பெருமையுடன், அமைதிக்கான நோபல் பரிசையும் பெறலாம் என்று அவர் கனவு கண்டார்.
மோடியின் மறுப்பு: டிரம்ப்பின் இந்த உள்நோக்கத்தை அறிந்த பிரதமர் மோடி, அவரது கோரிக்கையை நிராகரித்தார். “ஜி 5 மாநாட்டை முடித்துவிட்டு, நான் குரோஷியா செல்வதாக ஏற்கனவே உறுதியளித்துவிட்டேன். இன்னொரு முறை அமெரிக்கா வருகிறேன்,” என்று கூறி டிரம்ப்பின் திட்டத்தை முறியடித்தார்.
அதே தொலைபேசி உரையாடலில், “நான் தான் போரை நிறுத்தினேன்” என்று டிரம்ப் மீண்டும் கூறியபோது, பிரதமர் மோடி அவரிடமே, “போர் உங்களால் நிறுத்தப்படவில்லை; பாகிஸ்தான் கெஞ்சி கேட்டுக்கொண்டதால் நாங்கள் தான் நிறுத்தினோம்” என்று நேரடியாக பதிலளித்தார். மோடியின் இந்த நேர்மையான மற்றும் உறுதியான பதில், டிரம்ப்பின் கனவுகளை சிதைத்து, அவரை மிகவும் கோபப்படுத்தியது.
டிரம்ப்பின் பழிவாங்கும் எண்ணம்
இந்த நிகழ்வுகளுக்கு பிறகுதான், ‘என் நெருங்கிய நண்பர் மோடி’ என்று அடிக்கடி கூறி வந்த டிரம்ப்பின் மனநிலை மாறியது. இந்தியா மீது வரி விதிப்பதன் மூலம் தனது கோபத்தை வெளிப்படுத்த முடிவு செய்தார். அப்போது நடைபெற்று வந்த வர்த்தக பேச்சுவார்த்தையைப் பயன்படுத்தி, “ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கு கூடுதல் வரி” என்ற ஒரு ஒப்புக்கு சார்பான காரணத்தை கூறி, 50% வரியை விதித்தார்.
ஆனால், இந்த வரி விதிப்பின் உண்மையான காரணம், டிரம்ப்பின் எந்தவொரு நிபந்தனைக்கும் இந்தியா பணியவில்லை என்பதுதான். இந்தியாவில் வேறு ஒரு கட்சியின் ஆட்சி நடந்திருந்தால், டிரம்ப்பின் அழுத்தத்திற்கு பணிந்திருக்கும். ஆனால், இந்திய விவசாயிகளை பாதுகாக்க எந்த விலை கொடுக்கவும் தயார் என்று மோடி உறுதியளித்தது, டிரம்ப்பிற்கு அதிர்ச்சியளித்தது. ஒரு உலக வல்லரசு நாட்டின் அதிபரின் நிபந்தனையை ஏற்க முடியாது என்று நேரடியாக கூறிய மோடியின் இந்த உறுதியான நிலைப்பாடு, டிரம்ப்பின் கோபத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
