ஈரானிய அரசாங்கம் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கான விசா இல்லாமல் நாட்டிற்கு வருகை தரும் வசதியை நவம்பர் 22, முதல் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. குற்றவியல் குழுக்கள் இந்த வசதியை முறைகேடாக பயன்படுத்தியதாலும், இந்தியர்கள் ஆள் கடத்தல் மோசடிக்கு ஆளானதாலும் இந்த திடீர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இது தொடர்பாக ஒரு வலுவான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. ஈரானின் இந்த முடிவு, சுற்றுலா நோக்கங்களுக்காகவும், இருதரப்பு உறவுகளை மேம்படுத்தவும் உருவாக்கப்பட்ட ஒரு வசதி, எவ்வாறு கிரிமினல் கும்பலால் தவறாக பயன்படுத்தப்பட்டது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
ஈரான் அரசு விசா இல்லாத நுழைவு வசதியை ரத்து செய்வதற்கு, இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் சுட்டிக்காட்டிய முக்கிய மூன்று காரணங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
இந்தியாவில் உள்ள நேர்மையற்ற முகவர்களுடன் கூட்டு சேர்ந்து செயல்படும் குற்றவியல் குழுக்கள், இந்தியர்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு, வெளிநாடுகளில் அதிக ஊதியம் தரும் வேலைகள் பற்றிய பொய்யான வாக்குறுதிகளை அளித்து அவர்களை ஈரானுக்கு வரவழைத்தனர்.
விசா தள்ளுபடி வசதியை பயன்படுத்தி இந்தியர்கள் ஈரானுக்கு பயணம் செய்ய தூண்டப்பட்டனர். ஆனால், விசா தள்ளுபடி என்பது சுற்றுலா நோக்கங்களுக்காக 15 நாட்களுக்கு மட்டுமே பொருந்தும், இது வேலைவாய்ப்புக்குப் பொருந்தாது.
இந்தியர்களுக்கு பெரும்பாலும் ஈரான் என்பது ஒரு இடைப்பட்ட நாடு தான்.. அதாவது இந்தியாவில் இருந்து ஐரோப்பா, ஆஸ்திரேலியா அல்லது மத்திய ஆசியா போன்ற மூன்றாம் நாடுகளுக்கு செல்ல ஈரான் சென்று அங்கிருந்து தங்கள் விருப்பத்திற்கு உரிய நாட்டிற்கு செல்லலாம்.. ஆனால் இதை சில மோசடியாளர்கள் ஈரானுக்கு விசா இல்லாமல் இந்தியர்களை அனுப்பி வைத்து, அங்கிருந்து மற்ற நாடுகளுக்கு முறைகேடாக அனுப்பி வைக்கப்படுவார்கள்” என்ற பொய்யான வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டனர். இந்த வழித்தடங்களை ஆள் கடத்தல் வலையமைப்புகள் பயன்படுத்தி வருகின்றன.
ஈரான் சென்றடைந்த இந்தியர்கள் பலர், குற்றவியல் கும்பலால் கடத்தப்பட்டு, பணய கைதிகளாக வைக்கப்பட்டனர். இந்த கும்பல்கள், கடத்தப்பட்ட இந்தியர்களின் குடும்பங்களிடமிருந்து பணம் கேட்டு மிரட்டியுள்ளன. இந்த சம்பவங்கள் தூதரக மட்டத்தில் கவலையை ஏற்படுத்தியதால், ஈரான் இந்த வசதியை நிறுத்த முடிவெடுத்தது.
எனவே நவம்பர் 22 முதல் சாதாரண பாஸ்போர்ட் வைத்திருக்கும் இந்தியர்கள் அனைவரும் ஈரானுக்குள் நுழைய முடியாது, விசா பெறுவது கட்டாயமாகிறது. இந்த நிலையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் பின்வரும் முக்கியமான அறிவுரைகளை வழங்கியுள்ளது:
ஈரானுக்கு பயணம் செய்யத் திட்டமிடும் இந்தியர்கள் அனைவரும் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். விசா இல்லாத பயணம் அல்லது ஈரான் வழியாக மூன்றாம் நாடுகளுக்கு பயணிக்க உதவுவதாக உறுதியளிக்கும் எந்தவொரு முகவர்களையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். பயணிகளின் விசா நிலையை சரிபார்க்குமாறு விமான நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைகள் தொடர்பான விளம்பரங்களை இந்தியர்கள் அதிகபட்ச எச்சரிக்கையுடன் அணுக வேண்டும். அங்கீகரிக்கப்படாத முகவர்களால் ஏமாற்றப்படாமல் இருக்குமாறும் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
