மத்திய கிழக்கு ஆசியாவில் தற்போது நிலவி வரும் போர்ச் சூழலில், உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நோக்கி திரும்புவது சர்வதேச அரசியலில் இந்தியாவின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை காட்டுகிறது. அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் போன்ற நாடுகளுக்கு இடையே மோதல் முற்றியுள்ள நிலையில், அமெரிக்காவின் பேச்சை ஈரான் கேட்க தயாராக இல்லை. அதேபோல் ரஷ்யாவும் அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு பணியவில்லை. இத்தகைய இக்கட்டான சூழலில், ஈரானுடனும் ரஷ்யாவுடனும் சுமுகமான உறவை பேணி வரும் ஒரே தலைவராக மோடி இருப்பதால், அமைதி பேச்சுவார்த்தைக்கு அவர் ஒரு பாலமாக இருப்பார் என்று உலக நாடுகள் நம்புகின்றன.
ஈரான் இந்த முறை தனது தாக்குதலை இஸ்ரேல் அல்லது அமெரிக்காவுடன் மட்டும் நிறுத்தி கொள்ளாமல், அதனை வளைகுடா நாடுகளுக்கும் விரிவுபடுத்தியுள்ளது. அதாவது, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் போன்ற அண்டை நாடுகளின் எரிசக்தி உள்கட்டமைப்புகளை ஈரான் தாக்கியுள்ளது. இதனால் கத்தாரின் எரிவாயு உற்பத்தி முடங்கியதோடு, அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ‘ஹீலியம்’ வாயுவிற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஹீலியம் என்பது எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரங்கள் மற்றும் செமிகண்டக்டர் தயாரிப்பில் குளிரூட்டியாக பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான பொருள் என்பதால், இந்த தாக்குதல் உலகளாவிய மருத்துவ மற்றும் தொழில்நுட்ப துறைகளை பாதிக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.
ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியாக செல்லும் உலகளாவிய இணைய போக்குவரத்து மற்றும் எரிசக்தி விநியோகம் ஈரானின் கட்டுப்பாட்டில் சிக்கியுள்ளது. இந்த நீர்ச்சந்தி வழியாகத்தான் உலக இணைய போக்குவரத்தில் 30 சதவீதத்தை சுமந்து செல்லும் 20க்கும் மேற்பட்ட கடலுக்கடியிலான ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் செல்கின்றன. ஈரான் இவற்றை குறிவைத்தால் உலகமே இணைய தொடர்பின்றி முடங்கும் அபாயம் உள்ளது. இதனால்தான் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் தற்போது ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவை நாடுகின்றன. ஈரானும் தனது தாக்குதல்களில் இருந்து இந்திய மற்றும் சீன கப்பல்களை விலக்கி வைத்திருப்பது இந்தியாவின் வெளியுறவு கொள்கைக்கு கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் தற்போதைய நிலைப்பாடு மிகவும் விசித்திரமாக உள்ளது. ஒருபுறம் ஈரானை எதிர்த்து போரிட்டாலும், மறுபுறம் அரபு நாடுகளின் எரிசக்தி தளங்கள் தாக்கப்படுவதை தடுக்க, ஈரானின் எண்ணெய் மீதான தடைகளை அமெரிக்கா ரகசியமாக தளர்த்தியுள்ளது. இதன் மூலம் ஈரான் தனது எண்ணெய்யை விற்று பணம் ஈட்டவும், அந்த பணத்தைக் கொண்டே அமெரிக்காவிற்கு எதிராக போரிடவும் அமெரிக்காவே வழிவகை செய்துள்ளது. இது ஒரு முரண்பாடான ராஜதந்திரம் என்றாலும், உலக எரிசக்தி விலைகள் உயர்ந்து அமெரிக்காவின் உள்நாட்டு அரசியலை பாதிக்காமல் இருக்க டிரம்ப் நிர்வாகம் எடுக்கும் ஒரு தற்காப்பு நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
இந்தியாவை இந்த போருக்குள் இழுக்க பல சதித்திட்டங்கள் தீட்டப்பட்டன. குறிப்பாக, ஈரானிய தளபதி ஒருவரின் இருப்பிடத்தை இந்தியாதான் காட்டி கொடுத்தது போன்ற வதந்திகள் பரப்பப்பட்டன. ஆனால், ஈரான் இந்த சதிவலைக்குள் சிக்காமல் இந்தியாவுடனான தனது உறவை தக்கவைத்து கொண்டுள்ளது. இந்திய கப்பல்கள் எவ்வித தடையுமின்றி ஹார்முஸ் நீர்ச்சந்தையைக் கடக்க ஈரான் அனுமதித்துள்ளது. இது இந்தியாவின் வெளியுறவு கொள்கை எவ்வளவு முதிர்ச்சியடைந்துள்ளது என்பதை காட்டுகிறது. போர் சூழலில் மற்ற நாடுகள் தடுமாறும்போது, இந்தியா தனது சொந்த நலன்களையும் உலக அமைதியையும் சமநிலையில் கையாள்கிறது.
இறுதியாக, மத்திய கிழக்கு ஆசியாவில் நிலவும் சிக்கலான சூழலில் இருந்து வெளியேற இந்தியா ஒரு வலுவான நடுநிலையாளராக உருவெடுத்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் போரின்போதும் மோடி எடுத்த “இது போருக்கான காலம் அல்ல” என்ற நிலைப்பாடு இப்போது மீண்டும் எதிரொலிக்கிறது. லாயிட்ஸ் ஆஃப் லண்டன் போன்ற சர்வதேச காப்பீட்டு நிறுவனங்கள் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, இந்தியாவின் பாதுகாப்பு பிம்பத்தை உயர்த்தியுள்ளது. ஒருவேளை வருங்காலத்தில் அமெரிக்கக்கப்பல்கள் கூட இந்திய கொடியை ஏந்திக்கொண்டு இந்த பகுதியை கடக்கும் நிலை ஏற்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இது இந்தியாவின் வளர்ந்து வரும் விஸ்வகுரு பிம்பத்திற்கு சான்றாகும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
