ஆறு, ஏரி, குளம் ஆகியவற்றின் மீது படிந்திருக்கும் நீர்ப்பாசி, ஒன்றுக்கும் உதவாத கழிவுகள் என்று உலகில் உள்ள 99% மக்கள் நினைத்தபோதிலும், ஒரே ஒரு இளைஞர் மட்டும் அதன் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்ற உண்மையை கண்டுபிடித்துள்ளார். இன்று வெற்றிகரமாக ஒரு தொழிற்சாலையும் நடத்தி வருகிறார். அவர்தான் ஜாம்ஷெட்பூரை சேர்ந்த கௌரவ் ஆனந்த்.
இவர் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் துணை நிறுவனத்தில் என்ஜினியராக பணியாற்றிக்கொண்டிருந்தார். வார இறுதி நாட்களில் ஆறுகளை சுத்தப்படுத்தும் தன்னார்வ பணியில் ஈடுபட்டிருந்த அவர், அப்போது ஆறுகளை மூடியிருக்கும் நீர்ப்பாசி சுற்றுச்சூழலுக்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கிறது என்பதை கவனித்தார். பலரும் அதை ஒரு நீர் கழிவாக நினைத்த நிலையில், கௌரவ் ஆனந்த் அதை ஆய்வு செய்து, அதன் மூலம் சில பொருட்களை தயாரிக்கலாம் என்று கண்டுபிடித்தார்.
நீர்ப்பாசியின் உள்ளமைப்பை பகுத்து ஆராய்ந்த பிறகு, அதிலிருந்து சேலைகள், பாய்கள், காகிதங்கள் மற்றும் கைவினைப் பொருட்களை தயாரிக்கலாம் என்பதை அவர் கண்டுபிடித்தார். இதனையடுத்து, தனது நிறுவன வேலைக்கு ராஜினாமா செய்துவிட்டு தனியாக ஒரு நிறுவனம் தொடங்கினார். கழிவுகளை வளமாக மாற்றும் மாயாஜாலத்தை நிரூபித்தார்.
நீர்ப்பாசி எளிதில் கிடைக்கக்கூடியது என்பதால், பலரும் அதை ஒரு தொல்லையாகவே நினைத்திருந்தனர். ஆனால், அதில் உள்ள மூலப்பொருள்களை பிரித்து பயனுள்ள பொருள்களாக மாற்றலாம் என்பதை அவர் நிரூபித்தார். மேலும், ஏராளமான பெண்களுக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகிறார்.
தனது நிறுவனத்தை தொடங்கி மூன்று ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது அவருடைய ஆண்டு வருமானம் ஒரு கோடியை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வருமானம் ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் ஏற்படுத்தும் தொழிலை கண்டுபிடித்ததால், பலரும் அவரை ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.
கழிவுகளிலிருந்தே கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்ற அவரது மாற்றுச் சிந்தனை இன்று அவரை கோடீஸ்வரராக மாற்றியிருக்கிறது!