பெரிய நிறுவனங்களுக்கு வீடியோ தயாரித்து கொடுக்கும் ஒரு நிறுவனத்தை தொடங்கி, கோடி கணக்கில் இரண்டு சகோதரர்கள் சம்பாதித்து வரும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாக்ஸ்வெல் மற்றும் டெனிஸ் நாக்பால் ஆகிய இரண்டு சகோதரர்கள் மீடியா மற்றும் பொழுதுபோக்கு துறையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருந்த நிலையில், அவர்கள் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் Good Vibes Entertainment LLP என்ற நிறுவனத்தை தொடங்கினர்.
2016-ஆம் ஆண்டு, வெறும் 3 லட்சம் ரூபாய் முதலீட்டில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. டெல்லியை தலைமை இடமாகக் கொண்டு, ஒரு சிறிய இடத்தில் வாடகைக்கு அலுவலகத்தை அமைத்து நிறுவனம் தொடங்கப்பட்டது.
ஆரம்ப காலம் இவர்களுக்கு பெரும் சோதனையாக இருந்தது. மீடியா துறையில் இருந்ததால் பலருடன் தொடர்புகள் இருந்தாலும், இளைஞர்களை நம்பி பெரிய வீடியோக்கள் தயாரித்து கொடுக்கும் பொறுப்பை ஒப்படைக்க பல நிறுவனங்கள் தயங்கின. ஆனாலும், ஒன்றை மட்டும் அவர்கள் உறுதியோடு வைத்திருந்தனர். சிறிய வீடியோவாக இருந்தாலும் சரி, சர்வதேச தரத்துடன் செய்து கொடுக்க வேண்டும் என்பதே அவர்களது கொள்கை.
இதனை அடுத்து, சில தயாரிப்பு நிறுவனங்கள், விளம்பர நிறுவனங்கள் மற்றும் தொலைக்காட்சி நெட்வொர்க்குகள் இவர்களை நம்பி சில ப்ராஜெக்ட்களை ஒப்படைத்தன. அந்த ப்ராஜெக்ட்கள் மிகவும் சிறப்பாக செய்து கொடுக்கப்பட்டதை அடுத்து, “வெர்டு ஆஃப் மவுத்” மூலம் இவர்களது புகழ் பரவத் தொடங்கியது.
இதன் பிறகு, இந்தியாவில் இருந்து மட்டும் இல்லை, உலகின் முன்னணி தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான ஆட்கள் தேர்வு செய்து அனுப்பும் பொறுப்பும் இவர்களுக்கு கிடைத்தது.
கொரோனா காலத்தில், இவர்களுடைய நிறுவனம் சில சவால்களை சந்தித்தாலும், தற்போது மீண்டும் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. “சர்வதேச தரத்திற்கு இணையான கலைநயத்துடன், சரியான நேரத்தில் எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை முழுமையாக வழங்க வேண்டும்” என்ற கொள்கையை கடைப்பிடித்ததால், இன்று நாங்கள் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளோம் என டெனிஸ் நாக்பால் தெரிவித்துள்ளார்.
வீடியோ தயாரிப்பு சேவை தொடங்கிய முதல் ஆண்டிலேயே, சுமார் ஒன்றரை கோடி ரூபாய் லாபம் கிடைத்தது. தற்போது அமேசான் உள்பட பல முக்கிய நிறுவனங்கள் இந்நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக விவோ மொபைல்ஸ், டிக் டாக் நிறுவனத்தை வைத்திருக்கும் பைடான்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளுக்கு இந்த நிறுவனத்தை அணுகியுள்ளன.
இதனை ஒரு நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொண்ட இந்நிறுவனம், தற்போது மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. கடின உழைப்பு, உறுதிப்பாடு, தொழில் துறையின் நுட்பங்களை புரிந்து கொண்டு அதை சரியாக பயன்படுத்தினால் மிகப்பெரிய அளவில் உயர்ந்து விடலாம் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக இந்த சகோதரர்கள் உள்ளனர்.