திடீரென ராஜினாமா செய்த துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர்.. 60 நாட்களுக்குள் தேர்தல்.. என்ன நடக்கும்?

இந்தியத் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், உடல்நல காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் அவர் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். “உடல்நலத்திற்கு முன்னுரிமை அளித்து, மருத்துவ ஆலோசனையை…

vice president

இந்தியத் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், உடல்நல காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் அவர் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.

“உடல்நலத்திற்கு முன்னுரிமை அளித்து, மருத்துவ ஆலோசனையை பின்பற்றி, இந்திய அரசியலமைப்பின் 67(a) பிரிவின்படி, நான் இந்தியத் துணை ஜனாதிபதி பதவியை உடனடியாக ராஜினாமா செய்கிறேன்” என்று தன்கர் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

74 வயதான தன்கர், இந்த முக்கிய காலகட்டத்தில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றம் மற்றும் முன்னோடியில்லாத அசுர வளர்ச்சிக்கு உதவியாக இருந்து, அதில் பங்கேற்றது ஒரு சிறப்புமிக்க அனுபவம் என்றும் திருப்தி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். நாட்டின் வரலாற்றில் இந்த மாற்றத்திற்கான சகாப்தத்தில் பணியாற்றியது உண்மையான கவுரவம் என்றும் அவர் கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சரவைக்கும் தனது ஆழ்ந்த நன்றியை துணை ஜனாதிபதி தெரிவித்துள்ளார். “பிரதமரின் ஒத்துழைப்பும் ஆதரவும் அளப்பரியது, எனது பதவி காலத்தில் நான் நிறைய கற்றுக்கொண்டேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரிடம் இருந்தும் தனக்கு கிடைத்த அன்பு, நம்பிக்கை மற்றும் பாசம் எப்போதும் நினைவில் நிற்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

தன்கர் 2022 ஆகஸ்ட் மாதம் இந்தியத் துணை ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டார். இந்த ஆண்டு மார்ச் மாதம் இதய பிரச்சனை காரணமாக அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நான்கு நாட்கள் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அடுத்து என்ன நடக்கும்?

துணை ஜனாதிபதி பதவி காலியாகும் பட்சத்தில், ராஜினாமா செய்த 60 நாட்களுக்குள் அந்த இடத்தை நிரப்ப ஒரு முறைப்படியான தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்த தேர்தலில் பாராளுமன்றத்தின் இரு அவைகளின் அனைத்து உறுப்பினர்களும் விகிதாசார பிரதிநிதித்துவ முறைப்படி ஒற்றை மாற்று வாக்கு மூலம் வாக்களிப்பார்கள்.

அரசியலமைப்பின்படி, துணை ஜனாதிபதி பதவி காலியாகும்போது, மாநிலங்களவையின் துணைத் தலைவர் மேல்சபையின் தற்காலிகத் தலைவராக பொறுப்பேற்பார். தற்போது, அந்த பதவியை ஹரிவன்ஷ் நாராயண் சிங் வகித்து வருகிறார். இவர் தற்காலிகமாக இந்த பொறுப்பை நிறைவேற்றுவார்.

1951 ஆம் ஆண்டு பிறந்த தன்கர், 1989 இல் ஜுன்ஜுனு பாராளுமன்ற தொகுதியிலிருந்து 9வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1990 இல் பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய இணை அமைச்சராகவும் பணியாற்றினார். பின்னர், 1993-1998 காலகட்டத்தில் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள கிஷன்கர் தொகுதியிலிருந்து ராஜஸ்தான் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தன்கர் 2019 ஜூலை 30 முதல் 2022 ஜூலை 18 வரை மேற்கு வங்காள கவர்னராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.