11 லட்சத்துக்கு திருமண அழைப்பிதழ்.. பிரபல தொழிலதிபரின் வினோத ஐடியாவால் படையெடுக்கும் புது ஜோடிகள்..

By Ajith V

Published:

பல ஆண்டுகளாகவே திருமண நிகழ்வு என்பது ஒரு குடும்பத்தில் நடக்கும் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதனால் திருமணத்தை சுற்றி ஒவ்வொரு விஷயங்களையும் பார்த்து பார்த்து மிக கவனமாக மணமக்களின் குடும்பத்தினர் செய்வார்கள். பெண் பார்ப்பது, அதன் பின்னர் நிச்சயதார்த்தம், பின்னர் திருமண பத்திரிக்கை அடிப்பது, உறவினர்களை அழைப்பது, திருமண மண்டபத்தை தேர்ந்தெடுப்பது தொடங்கி உடைகள் வாங்குவது என அனைத்திலும் குடும்பத்தினரின் அக்கறை மிக மிக அதிகமாக இருக்கும்.

அடுத்து பல ஆண்டுகள் ஒன்றாக இணைந்து வாழ போகும் தம்பதியினரின் வாழ்க்கை தொடங்கும் இடம் எந்தவிதத்திலும் குறைகளின்றி, யாரும் எதுவும் சொல்லாத அளவுக்கு சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் தான் கவனம் இருக்கும். அப்படிப்பட்ட இந்த திருமண நிகழ்வில் திருமண பத்திரிக்கை என்பது மிக முக்கியமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. முன்பெல்லாம் திருமண பத்திரிகைகள் மிக சாதாரணமாக அச்சடிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மிகவும் வினோதமான புதுமைகள் புகுத்தி அதனை தயார் செய்கிறார்கள்.

அந்த வகையில் தான் தற்போது உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஒருவர் சுமார் 11 லட்சம் மதிப்புள்ள திருமண அழைப்பிதழை தயார் செய்துள்ளது அனைவரது மத்தியிலும் கவனம் பெற்று வருகிறது. உத்திரபிரதேச மாநிலம் பிரோஸாபாத் பகுதியில் நகைக்கடை ஒன்றை நடத்தி வருபவர் தான் லக்கி ஜிண்டால். இவர் தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலை மதிப்புள்ள பொருட்களை சேர்த்து சுமார் 10,000 தொடங்கி 11 லட்சம் வரை மதிப்புள்ள திருமண அழைப்பிதழ்களை தயார் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பேசும் லக்கி ஜிண்டால், திருமண பத்திரிக்கையை குறிப்பிட்ட திருமணம் முடிந்ததும் அதனை எங்கேயாவது தூக்கி வீசிவிடுவார்கள் என்றும் அப்படி போடாமல் அது மதிப்புடன் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக தான் இப்படி ஒரு புதுமையான முயற்சியை கையில் எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த தம்பதிகள் தங்களின் வாழ்நாள் முழுக்க திருமண அழைப்பிதழை ஒரு முக்கியமான ஒரு அங்கமாக பார்க்க வேண்டும் என்பதற்காக இப்படி விலைமதிப்புடன் செய்தால் அது என்றென்றைக்கும் அங்கே வீட்டில் இருக்கும் என்றும் அவர் கூறுகிறார். திருமண அழைப்பிதழுக்கு இது அதிகம் என பலர் கூறினாலும் இன்னொரு பக்கம் இந்த புதுமையான திருமண அழைப்பிதழ்களுக்காக பலரும் லக்கி ஜிண்டாலின் நகைக்கடையை அணுகி வருவதாகவும் கூறப்படுகிறது.

வெறுமென தாள்களாக திருமண அழைப்பிதழ்கள் இருந்து விடாமல் விலை மதிப்புள்ளதாக இருக்க வேண்டும் என்பதற்காக பலரும் அந்த கடையை நாடி வருவதாக தெரிகிறது.