Uber நிறுவனம், இந்தியாவில் டிரைவரில்லா டாக்ஸி சேவையை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Uber நிறுவனம், கூகுள் நிறுவனத்தின் Waymo-வுடன் கூட்டணி அமைத்துள்ளதாகவும், அண்மையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் டிரைவர் இல்லாத டாக்சிகளை அறிமுகப்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Uber நிறுவனம் டிரைவர் இல்லா டாக்சி துறையில் மிகப்பெரிய முதலீடு செய்து வருவதுடன், இந்த சேவைகளை அமெரிக்கா முழுவதும் மட்டுமின்றி இந்தியா உள்ளிட்ட முக்கிய நாடுகளில் விரிவுபடுத்த உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது, Uber தனது டிரைவர் இல்லா டாக்சி சேவைகளை இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கு விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் குறித்து உறுதியான தகவல்களை வெளியிடவில்லை. எனினும், Uber நிறுவனம் Waymo மட்டுமல்லாமல், WeRide, Waabi, Motional, Aurora, Nuro போன்ற முன்னணி நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்துள்ளதால், விரைவில் இந்த சேவையை அமெரிக்கா மற்றும் உலகின் பல பகுதிகளுக்கும் விரிவுபடுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன், Uber நிறுவனம் விரைவில் அமெரிக்காவின் அட்லான்டா , பீனிக்ஸ் போன்ற நகரங்களிலும், டிரைவரில்லா டாக்சிகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
டிரைவர் இல்லாத டாக்சி சேவை என்பது மனிதர்கள் இல்லாமல் தானாக இயங்கும் திறன் கொண்டவை. இவை மேம்பட்ட சென்சார்கள், கேமராக்கள், செயற்கை நுண்ணறிவு ரேடார் மற்றும் GPS ஆகிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, சுற்றுச்சூழலை வரைபடம் உருவாக்கி கார்களை எப்படி இயக்க வேண்டும் என்ற முடிவுகளை எடுக்கின்றன.
இந்த வாகனங்கள் சாலை மற்றும் போக்குவரத்து சூழ்நிலைக்கு ஏற்ப மேம்பட்ட மென்பொருள் மற்றும் சாதனங்களை பயன்படுத்தி இயங்குவதால், மனிதர்கள் இல்லாமல் செயல்படும் திறன் பெற்றதாக இருக்கும்.
டிரைவரில்லா டாக்ஸிகள் பொதுவாக, வழக்கமான டாக்சிகளை விட மிகவும் கட்டணம் குறைவாக இருக்கும். எடுத்துக்காட்டாக, சாதாரண டாக்சிகள் ஒரு மைல் பயணத்திற்கு சுமார் $2 வசூலிக்கின்றன என்றால் டிரைவர் இல்லாத டாக்சி அதே தொலைவுக்கு $1-க்கும் குறைவாக கட்டணத்தை மட்டுமே வசூலிக்கிறது.
டிரைவர் இல்லாத டாக்ஸி சேவை அமலுக்கு வந்தால் மொபைல் செயலியில் காட்டும் தொகையை விட அதிகமாக வேண்டும் என்று டிரைவர் கேட்க மாட்டார் என்பதும் டிரைவரிடம் வாக்குவாதம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.