கார் ஓட்டும் போது ஆடியோ வடிவில் பாடல் கேட்பது என்பது, டிரைவர்களுக்கு தூக்கம் வராமல் இருப்பதற்கான ஒரு வழி என்பதில் அனைவரும் ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம். ஆனால், கார் அல்லது பேருந்து ஓட்டும் போது வீடியோ பார்ப்பது என்பது, அந்தக் காரில் அல்லது பேருந்தில் பயணம் செய்பவர்களின் உயிரை ஆபத்தில் விடுவது போன்றதாகும்.
இந்த வகையில், ரெடிட் பயனர் ஒருவர், தான் உபேர் காரில் பயணம் செய்த போது, அதன் டிரைவர் மொபைல் போனில் அனிமேஷன் படம் பார்த்துக்கொண்டு சென்றதாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புகைப்படம் எந்த அளவுக்கு உண்மையானது என்பதை உறுதியாக கூற முடியாது. என்றாலும், அந்தக் கார் டிரைவரின் செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்தும் பதிவு செய்தும் வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கும் நிலையில், “கார் ஓட்டும் போது வீடியோக்கள் பார்ப்பது, அந்தக் காரில் பயணம் செய்பவர்களுக்கு எவ்வளவு ஆபத்தானது என்பதை டிரைவர்கள் உணர வேண்டும்” என பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், “அந்த கார் டிரைவர் மீது காவல்துறையில் புகார் கொடுங்கள்; சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் போட்டு லைக்ஸ் பெறுவதை மட்டுமே குறிக்கோளாக செய்ய வேண்டாம். இது உண்மையாக இருந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சிலர் கருத்து பதிவு செய்து வருகின்றனர்.