அமெரிக்கா நம்பியிருந்த இந்தியா, தற்போது சீனாவை நோக்கி நெருங்குவதாக பரவும் தகவல்கள், உலக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தவறான, ஒருதலைபட்சமான வரிவிதிப்பின் போக்கு, இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அவரது இந்த நடவடிக்கை, பல ஆண்டுகளாக அமெரிக்க அரசுகளால் ஆதரிக்கப்பட்ட கொள்கைகளை தலைகீழாக மாற்றுவதுடன், ட்ரம்ப் தனது ஆட்சிக்காலத்தில் செய்த மிகப்பெரிய தவறாக அமையலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
டொனால்ட் ட்ரம்ப் தனது வெளியுறவு கொள்கையை, வர்த்தக தடைகள் மூலம் எதிரிகளையும் நட்பு நாடுகளையும் ஒரே நேரத்தில் அழுத்துவதன் மூலம் கட்டமைத்துள்ளார். இதன் மூலம், சீனா தனிமைப்படுத்தப்படும் என்று அவர் நம்பினார். ஆனால், ட்ரம்ப் தனது அமெரிக்க வெற்றியை பிரகடனப்படுத்தி கொண்டிருக்கும்போதே, சீனா அதற்கு நேர்மாறாக ஒரு மாபெரும் பொருளாதார வலையமைப்பை உலகளாவிய தெற்கு நாடுகள் முழுவதும் கட்டமைத்து வருகிறது.
இன்று, வளரும் நாடுகளுக்கு சீனாவின் ஏற்றுமதிகள் ஆண்டுக்கு 1 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளன. லத்தீன் அமெரிக்கா முதல் தென்கிழக்கு ஆசியா வரை, சீன தயாரிப்புகள், முதலீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் பொருளாதார வளர்ச்சியின் தூண்களாக மாறியுள்ளன. சீனா வெறும் பொருட்களை ஏற்றுமதி செய்வதை நிறுத்திவிட்டு, எதிர்காலத்திற்கான தனது தொழில்நுட்ப வரைபடத்தையும் ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளது.
இந்தியா சீனாவுடன் நெருங்குவதும், வளரும் நாடுகள் ஏற்கெனவே பெய்ஜிங்கை நோக்கி சாய்வதும், உலகத் தலைவர் என்று தன்னைத்தானே அமெரிக்காவுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக இந்தியாவுக்கு வந்துள்ளதன் பின்னணியில், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் முக்கியத்துவம் வாய்ந்தது. 1962 போர், 2020 எல்லை மோதல் போன்ற கசப்பான வரலாற்றை இரு நாடுகளும் கொண்டுள்ளன. சமீபகாலமாக, இந்தியா சீன செயலிகளுக்கு தடை விதித்தது, முதலீடுகளை கட்டுப்படுத்தியது, மற்றும் அமெரிக்காவுடன் நெருக்கமாக செயல்பட்டு வந்தது.
ஆனால், வாங் யீயின் வருகை, இரு நாடுகளும் மீண்டும் உறவுகளை புதுப்பிக்க விரும்புவதை காட்டுகிறது. இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமானங்கள் மீண்டும் தொடங்கப்பட உள்ளன. உர தயாரிப்புக்கான முக்கிய பொருட்களின் ஏற்றுமதி தடைகளை சீனா தளர்த்தியுள்ளது. எல்லையோர வர்த்தக பாதைகளை திறப்பது குறித்து மீண்டும் விவாதிக்க இரு நாடுகளும் தயாராக உள்ளன.
இந்த உறவு மாற்றத்திற்கு முக்கிய காரணம், அமெரிக்காவின் கொள்கைகள்தான். ட்ரம்ப்பின் அரசாங்கம், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று வற்புறுத்தியது. ஆனால், இந்தியா தனது எரிசக்திப் பாதுகாப்பை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. மலிவான ரஷ்ய எண்ணெய், கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவியது.
இந்தியாவை ஒரு சமமான சக்தியாக நடத்தாமல், மிரட்டல்களையும், எச்சரிக்கைகளையும் விடுத்தது அமெரிக்கா. இது, ஒரு சுதந்திரமான சக்தியாக அங்கீகரிக்கப்பட விரும்பும் இந்தியாவுக்கு தாங்க முடியாததாக இருந்தது. இந்த சூழ்நிலையைச் சீனா விரைவாக பயன்படுத்திக்கொண்டது. வாங் யீயின் வருகை, இந்திய, சீன உறவை மீண்டும் புதுப்பித்தது. இது, இந்தியா அமெரிக்காவின் விருப்பங்களை நிறைவேற்றும் ஒரு கருவியாக மட்டும் இருக்க விரும்பவில்லை என்பதை காட்டுகிறது.
இந்தியா, சீனா நெருங்கி வருவது பிரிக்ஸ் கூட்டமைப்புக்கு ஒரு புதிய பலத்தை அளிக்கலாம். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய பிரிக்ஸ், இந்தியா-சீனா இடையிலான கருத்துவேறுபாடு காரணமாக இதுவரை முழுமையாக செயல்படாமல் இருந்தது. ஆனால், இந்த இரண்டு நாடுகளும் தங்கள் மோதல்களை புறந்தள்ளி செயல்பட தொடங்கினால், அது மேற்கத்திய நாடுகளின் G7 கூட்டமைப்புக்கு ஒரு பெரும் சவாலாக மாறும்.
இந்திய-சீன வர்த்தகம் ஏற்கனவே $135 பில்லியனை தாண்டியுள்ளது. வர்த்தக தடைகள் நீக்கப்பட்டால், இந்த எண்ணிக்கை பல மடங்கு உயரும். ட்ரம்பின் கொள்கைகள், சீனாவை தனிமைப்படுத்துவதற்கு பதிலாக, அது வளரும் நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்க தூண்டியது. குறிப்பாக, எலக்ட்ரிக் வாகன துறையில், சீனா இன்று உலகிலேயே மிகப்பெரிய உற்பத்தியாளராக உருவெடுத்துள்ளது.
வாங் யீயின் வருகை, இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் குறைகிறது என்பதற்கான அறிகுறி மட்டுமல்ல. இது உலக அரசியல் அதிகாரத்தில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
சீனாவை தனிமைப்படுத்த நினைத்தது அமெரிக்கா, ஆனால் அது சீனாவை உலகளாவிய தெற்கில் தனது உறவுகளை வலுப்படுத்தத் தூண்டியது. இந்தியாவை ஒரு நட்பு நாடாக நினைக்காமல், சீனாவுக்கு எதிராக பயன்படுத்த அமெரிக்கா நினைத்தது, அதனால் சில நிர்ப்பந்தங்களை கொடுத்தது. ஆனால், இந்தியா அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயப்படாமல் தனது சொந்த பாதையில் பயணிக்க துணிந்தது.
இறுதியில், இந்தியா- சீனா ஒற்றுமை ஒருபோதும் நிகழாது என்று இருந்த நிலை மாறி, இந்தியா-சீனா நெருக்கத்திற்கு அமெரிக்காவே குறிப்பாக டிரம்ப்பே ஒரு காரணமாகிவிட்டார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
