எட்டு மாதங்களில் எட்டு போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமைப்பட்டாலும், அவர்தான் உலக நாடுகளின் மீது வரிப்போரை தொடுத்துப் பெரிய சிக்கலை கொடுத்து வருகிறார். வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு மிகப்பெரிய வரிகளை விதித்திருப்பதால், பிற நாடுகளுக்கு அமெரிக்காவில் வியாபாரம் செய்வது கடினமாகியுள்ளது.
இந்த சூழ்நிலையில், சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆசிய நாடுகளுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. “அடுத்த சில மாதங்கள், டிரம்ப்பின் வரிப்போரால் ஆசிய நாடுகளுக்கு மிகவும் கடினமான காலகட்டமாக இருக்கலாம். விலைவாசிகள் உயரலாம், ஏற்றுமதிகள் குறையலாம், வளர்ச்சி பாதிக்கப்படலாம். ஆனாலும் மனதை தளர விடாதீர்கள். ஆசியாவால் இதை எதிர்த்து போராட முடியும். டிரம்ப்பை எதிர்த்து அல்ல, உங்களது புத்திசாலித்தனமான நடவடிக்கைகளால்!” என்று கூறியுள்ளது.
இந்த வருடத்தின் முதல் பாதியில் (ஜனவரி முதல் ஜூன் வரை) ஆசிய பொருளாதாரம் ஆச்சரியம் அளித்தது. வரிகள் அமலுக்கு வருவதற்குள் பல ஆசிய நாடுகள் அவசர அவசரமாக ஏற்றுமதியை முடித்தன. மேலும், சிப்ஸ், கேட்ஜெட்கள், ஏ.ஐ. உபகரணங்களுக்கான தேவை அதிகரித்ததால், தொழில்நுட்ப நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டன. அரசாங்கங்கள் வட்டி விகிதங்களை குறைத்ததும், டாலரின் மதிப்பு வலுவிழந்ததும் ஆசிய ஏற்றுமதியாளர்களுக்கு லாபமாக அமைந்தது.
ஆனால், வருட துவக்கத்தில் இருந்த வளர்ச்சி, வருட முடிவில் இல்லாமல் போக வாய்ப்புள்ளது. ஏனெனில், அமெரிக்க வரி விதிப்பின் உண்மையான தாக்கம் இப்போதிருந்துதான் ஆசிய நாடுகளை பாதிக்கத் தொடங்கியுள்ளது. டிரம்ப் வரிகளை ஹிமாலய அளவிற்கு உயர்த்தியிருப்பதால், அமெரிக்காவுக்கான ஆசிய ஏற்றுமதி குறையும்.
இதன் விளைவாக, 2025 ஆம் ஆண்டுக்கான ஆசியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி 4.5% ஆக குறைய வாய்ப்புள்ளது. 2026 இல் இது 4.1% ஆக குறையக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
சீனா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகள் உலகிற்கு பொருட்களை தயாரித்து விற்பதால்தான் வளர்ச்சி அடைகின்றன. அமெரிக்காவின் வரி சண்டையால் இந்த வர்த்தகம் பாதிக்கப்படும். ஆசியாவுக்குள்ளேயே வர்த்தகத்தை அதிகரிக்க வேண்டும்: ஆசிய நாடுகளே அமெரிக்கா, ஐரோப்பாவை மட்டும் நம்பி இருக்காமல், தங்களுக்குள்ளேயே வர்த்தகத்தை அதிகரிக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
தற்போது, போன்கள், உடைகள் போன்ற முழுமையாக முடிக்கப்பட்ட பொருட்களில் வெறும் 30% மட்டும்தான் ஆசியாவுக்குள் வர்த்தகம் செய்யப்படுகிறது. இதை அதிகரித்தால், ஆசியா அமெரிக்காவுக்கு எதிரான ஒரு பாதுகாப்பு வலையை உருவாக்க முடியும். இதனால் ஆசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.4% உயரவும் வாய்ப்புள்ளது.
சர்வதேச நாணய நிதியம் இந்தியாவின் பொருளாதாரத்தை “நிலையானது மற்றும் சிறப்பானது” என்று பாராட்டுகிறது. பொருளாதார கொள்கைகள் நல்ல நிலையில் இருப்பதாகவும், பணவீக்கம் மெதுவாக குறைவதாகவும் குறிப்பிட்டுள்ளது. ஆனால், உலகளவில் போட்டியிடவும், வேகமாக வளரவும் இந்தியா இன்னும் சில ‘ஹோம்வொர்க்’ செய்ய வேண்டியுள்ளது என்று IMF கூறுகிறது:
தற்போதுள்ள சிக்கலான தொழிலாளர் சட்டங்களை எளிதானதாகவும், நிகழ்வானதாகவும் மாற்ற வேண்டும். வணிகம் தொடங்குவதற்கும், செயல்படுத்துவதற்கும் இருக்கும் ஏராளமான பழைய மற்றும் குழப்பமான விதிகளை நீக்க வேண்டும். உதாரணமாக, ஒரு சிறிய தொழில் தொடங்க 15-க்கும் மேற்பட்ட ஒப்புதல்கள் தேவைப்படுகின்றன. இந்த ‘காகித வேலைகள்’ அதிகம்.
உலகளாவிய வர்த்தகப் பதட்டங்கள், இந்தியாவுக்கு தன்னுடைய வர்த்தகத்தை மேம்படுத்த ஒரு பொன்னான வாய்ப்பு என்று IMF கூறுகிறது. இந்தியா அதிக நாடுகளுடன் வர்த்தகம் செய்வதை எளிதாக்க வேண்டும்.
அமெரிக்காவின் அதிக வரிகள் காரணமாக, 2026 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% இலிருந்து 6.2% ஆகக் குறையக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தாலும், வர்த்தக பேச்சுவார்த்தைகள் மூலம் வரிகளை குறைக்க முடிந்தால், வளர்ச்சி மீண்டும் கூட வாய்ப்பு உள்ளது என்றும் IMF நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஆசிய நாடுகள் அனைத்தும் ஒன்றுபட்டு, இந்தியா தனது வர்த்தக வியூகங்களை சரியாக வகுத்தால், அமெரிக்க வரிகளோ அல்லது உலக பொருளாதார அதிர்வலைகளோ நம்மை அசைத்து பார்க்க முடியாது என்றே சொல்லலாம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
