டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் புதிய வர்த்தகக் கொள்கைகள், இந்தியா-அமெரிக்கா உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்கா, இந்திய பொருட்களுக்கு 50% சுங்க வரி விதித்திருப்பது, இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வந்த வர்த்தக பேச்சுவார்த்தைகள் முறிந்ததற்கான தெளிவான அறிகுறியாகும். இந்த புதிய வரிவிதிப்பு, ஆகஸ்ட் 27 முதல் நடைமுறையில் வந்துள்ள நிலையில், ஏற்கனவே விதிக்கப்பட்ட 25% வரியுடன், கூடுதலாக 25% “அபராத வரி”யும் சேர்த்ததாகும். இது, சீனாவிற்கு விதிக்கப்பட்ட 15% வரி மற்றும் மற்ற நாடுகளுக்கு விதிக்கப்பட்ட 30% வரியை விட மிக அதிகமாகும்.
வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்தது ஏன்?
அமெரிக்க நிதித்துறை செயலாளர் கூற்றின்படி, டிரம்ப் நிர்வாகத்திற்கும், இந்தியாவிற்கும் இடையிலான உறவு சமீப காலமாக பதட்டமாகவே இருந்துள்ளது. வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை முதலில் தொடங்கியது இந்தியா என்றாலும், பேச்சுவார்த்தைகளை இழுத்தடித்ததும் இந்தியாதான் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
மறுபுறம், பிரதமர் நரேந்திர மோடி, இந்திய விவசாயிகள் மற்றும் சிறு தொழில்முனைவோரின் நலன்களில் எந்தவித சமரசத்திற்கும் இடம் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அமெரிக்கா, தனது விவசாய பொருட்களை இந்திய சந்தையில் திணிக்க முயற்சி செய்வதாலேயே, இந்தியா இந்த பேச்சுவார்த்தைகளில் மெதுவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த நான்கு வாரங்களில், டிரம்ப், பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்புகொள்ள நான்கு முறைக்கு மேல் முயற்சி செய்தும், அந்த முயற்சிகள் நிராகரிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது, இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையிலான உறவு எந்த அளவுக்கு சிக்கலானது என்பதை காட்டுகிறது.
டிரம்ப்பின் பொது அறிவிப்புகள்: உள்நாட்டு அரசியலுக்கான தந்திரமா?
டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப்போர் ஏற்படுவதை தான் தடுத்ததாக பொது வெளியில் பேசியுள்ளார். தனது வர்த்தக அச்சுறுத்தல்கள்தான் இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு வர செய்தன என்றும் அவர் கூறியுள்ளார். இந்த பேச்சுகள், உள்நாட்டில் அவர் சந்தித்து வரும் விமர்சனங்களை சமாளிப்பதற்காக பயன்படுத்தும் ஒரு தந்திரம் என்று தான் விமர்சனம் செய்யப்படுகிறது. மேலும் அவர் போரை நிறுத்தியதாக கூறியதை பாகிஸ்தான் தவிர எந்த நாடும் குறிப்பாக அமெரிக்க மக்களே நம்பவில்லை.
எதிர்காலப் பாதை: தன்னம்பிக்கையும், தற்சார்புப் பொருளாதாரமும்
இந்தியா மீது விதிக்கப்பட்ட இந்த வர்த்தக வரி, நீண்ட காலத்திற்குத் தொடர வாய்ப்புள்ளது என்று தான் கூறப்படுகிறது. இதன் காரணமாக, இந்தியா தனது பாதுகாப்பு துறையில் கடந்த காலத்தில் எவ்வாறு தற்சார்பு கொள்கையை கடைப்பிடித்ததோ, அதேபோன்று இப்போது தனது பொருளாதாரத்தையும் தன்னம்பிக்கையுடன் வலுப்படுத்த கவனம் செலுத்தி வருகிறது. இந்திய பொருளாதாரம் உள்நாட்டு திறனை அதிகரிப்பதன் மூலம், இந்த வர்த்தக போரின் தாக்கங்களை சமாளிக்க முடியும் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர். எனவே இப்போதைக்கு இந்தியா மீண்டும் அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாது என்றே கூறப்பட்டு வருகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
