அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நான்கு முக்கிய நாடுகளுடன் ஒரே நேரத்தில் மோதல் போக்கை கடைப்பிடித்து வருவது, அமெரிக்க பொருளாதார வல்லுநர்கள் மத்தியில் பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நாடுகள் உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பவை. இவற்றுடன் அமெரிக்கா பகைத்துக்கொண்டால், அது அமெரிக்காவிற்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
குறிப்பாக, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கக் கூடாது என்றும், மரபணு மாற்றப்பட்ட வேளாண் பொருட்களை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டும் என்றும் இந்தியாவிடம் டிரம்ப் கோரினார். இந்தியா அதை மறுத்ததால், முதலில் 25% ஆக இருந்த வரியை, கூடுதலாக 25% உயர்த்தி மொத்தம் 50% ஆக அறிவித்தார்.
இதேபோல், பிரேசில், ரஷ்யா மற்றும் சீனா மீதும் அதிக அளவில் வரிகளை விதித்துள்ளார். இந்த நான்கு நாடுகளும் இணைந்து, அமெரிக்காவுக்கு எதிரான பொருளாதார தடைகளை விதித்தால், அமெரிக்க பொருளாதாரம் நிலைகுலைந்து போகும் என்று அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். டிரம்ப் ஒரு கோமாளியை போல செயல்படுகிறார் என்றும், இந்த நிபுணர்களின் எச்சரிக்கையை அவர் கண்டுகொள்ளவில்லை என்றும் அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்தியாவை பொறுத்தவரை, அமெரிக்காவின் இந்த வரிவிதிப்பால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று இந்திய பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில், இந்தியாவின் மொத்த ஏற்றுமதி வருவாயில் அமெரிக்காவிற்கு செய்யப்படும் ஏற்றுமதி வெறும் 20% மட்டுமே. மேலும், இந்தியாவின் மொத்த வருமானத்தில் ஏற்றுமதியின் பங்கு வெறும் 2% மட்டுமே. எனவே, அமெரிக்கா உடனான வர்த்தகம் பாதிக்கப்பட்டாலும், இந்தியாவிற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படாது.
டிரம்ப் முன்பு சீனா மீது 140% வரை வரி விதித்து, பின்னர் சீனாவின் பொருளாதார முக்கியத்துவத்தை உணர்ந்து, படிப்படியாக வரியைக் குறைத்து 30% ஆகக் கொண்டு வந்தார். இதே நிலைதான் இந்தியாவிற்கும் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா ஒரு வலுவான பொருளாதாரம் கொண்ட நாடு என்றும், எந்த பொருளாதாரச் சிக்கலையும் தனியாக சமாளிக்கும் திறன் கொண்டது என்றும் இந்திய பொருளாதார வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
