அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான தனது நட்பு, மோடியின் அரசியல் நிலைத்தன்மை, மற்றும் ரஷ்யாவுடனான இந்தியாவின் வர்த்தக உறவு குறித்து வெளிப்படையாக பேசியது சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது. மோடியை புகழ்வது போல் பேசினாலும், டிரம்ப்பின் கிண்டல் மற்றும் அதன் பின்னணியில் உள்ள அரசியல் அழுத்தங்கள் குறித்து இங்கே விரிவாகப் பார்க்கலாம்.
“மோடி ஒரு சிறந்த மனிதர். அவர் என்னை நேசிக்கிறார். நான் இந்த ‘நேசம்’ என்ற வார்த்தையை நீங்கள் வேறுவிதமாக கருத வேண்டாம் என்று விரும்புகிறேன், அவரது அரசியல் வாழ்க்கையை நான் அழிக்க விரும்பவில்லை,” என்று டிரம்ப் குறிப்பிட்டார்.
இந்த கூற்று வெறும் நகைச்சுவை அல்ல; இது டிரம்ப்பின் பாணி அரசியல். தான் ஒருவரை புகழ்ந்தால், அதன் மூலம் அந்த நபருக்கு அமெரிக்காவின் அரசியல் அழுத்தம் ஏற்பட்டு, உள்நாட்டில் அவருக்கு சிக்கல் வந்துவிடக் கூடாது என்பதை கிண்டல் மூலம் உணர்த்துகிறார்.
“நான் பல ஆண்டுகளாக இந்தியாவை கவனித்து வருகிறேன். இது ஒரு நம்ப முடியாத நாடு. ஒவ்வொரு ஆண்டும் அங்கே ஒரு புதிய தலைவர் இருப்பார். சிலர் சில மாதங்கள் இருப்பார்கள், இது ஆண்டாண்டு காலமாக நடந்தது. ஆனால், இப்போது என் நண்பர் மோடி நீண்ட காலமாக அங்கே பிரதமர் பதவியில் இருக்கிறார்,” என்று டிரம்ப் மோடியின் அரசியல் ஸ்திரத்தன்மையை புகழ்ந்தார்.
இந்த நிலைத்தன்மைதான் மோடியின் மிகப்பெரிய பலம். அமெரிக்க சட்டப்படி ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபராக இருக்க முடியும். அந்த வகையில் டிரம்ப்புக்கு இது இரண்டாவது முறை என்பதால் இன்னும் அவர் அதிகபட்சம் 3 ஆண்டுகள் மட்டுமே பதவியில் இருப்பார். ஆனால் இந்தியாவின் சட்டப்படி ஒருவர் எத்தனை ஆண்டு வேண்டுமானாலும் பிரதமர் பதவியில் இருக்கலாம். அப்படி இருக்கும்போது, மோடி தனது வாழ்நாள் முழுவதும் இந்திய அரசியலில் செல்வாக்குடன் இருக்கக்கூடிய தலைவராக இருப்பார். மோடியை எதிர்க்கவோ, அவரது அரசியல் வாழ்க்கையை அழிக்கவோ எந்த ஒரு தேசிய அல்லது சர்வதேசத் தலைவரும் நினைத்தால், அவர்களே காணாமல் போவார்கள் என்றே டிரம்ப்பின் மறைமுக கிண்டல் உணர்த்துகிறது. இந்திய மக்களின் அபரிமிதமான ஆதரவே மோடியின் பலம்.
ஒருபுறம் மோடியை புகழ்ந்த டிரம்ப், மறுபுறம் ரஷ்யா – உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்துத் தமது அதிருப்தியை பதிவு செய்தார். இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது குறித்து எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை. ஏனெனில் அது ரஷ்யா தனது அபத்தமான போரை தொடர அனுமதிக்கிறது. இந்த போரில் ரஷ்யா சுமார் ஒன்றரை மில்லியன் வீரர்களை இழந்துள்ளது. இந்த போர் தொடங்கியிருக்கவே கூடாது… அது முடிவுக்கு வர வேண்டும் என நான் விரும்புகிறேன்,” என்று டிரம்ப் வெளிப்படையாக கூறினார்.
டிரம்ப்பின் இந்த முழு பேட்டியும் சர்வதேச அரசியலின் சிக்கலான ஒரு நாடகத்தையே காட்டுகிறது. மோடியை புகழ்ந்து பேசுவது, இந்தியாவிடமிருந்து தான் விரும்பிய (ரஷ்யா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவது) ஒரு முடிவை பெறுவதற்கான டிரம்ப்பின் சாமர்த்தியமான வழிமுறையாக இருக்கலாம்.
மொத்தத்தில், டிரம்ப், மோடியை அழிக்க நினைக்கவில்லை என்று கூறியது, மோடியின் அசைக்க முடியாத அரசியல் பலத்தை உணர்ந்து அவர் செய்த ஒரு நகைச்சுவை பேரம் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
