இந்திய பொருளாதாரம் இன்று ஒரு புதிய சவாலையும், வாய்ப்பையும் ஒரே நேரத்தில் சந்தித்து வருகிறது. சமீபத்தில், அமெரிக்கா தனது விசா கொள்கைகளில் கொண்டு வந்த மாற்றங்கள், இந்திய பொருளாதாரத்தின் முக்கிய அங்கமான தகவல் தொழில்நுட்பத் துறையில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஒருபுறம், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு, இந்திய பொருளாதாரத்திற்கு பெரிய அளவில் பலன்கள் கிடைக்கும் என பிரதமர் நரேந்திர மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இது பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு புதிய உத்வேகத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறம், சர்வதேச அளவில், இந்திய-அமெரிக்க வர்த்தக உறவுகள், குறிப்பாக தொழில்நுட்ப துறையில், நிச்சயமற்ற சூழலை எதிர்கொள்கின்றன. அமெரிக்கா, ஹெச்1பி விசாக்களுக்கான கட்டுப்பாடுகளை கடுமையாக்கியிருப்பது, இந்திய ஐடி துறையினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஒரு “ஷாக் தெரபி” போல தோன்றினாலும், இதில் பல கோணங்கள் உள்ளன.
அமெரிக்காவில் ஆண்டுதோறும் வழங்கப்படும் 85,000 ஹெச்1பி விசாக்களில், பெரும்பாலானவை இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கே வழங்கப்படுகின்றன. இந்த விசா, வெளிநாட்டு ஊழியர்கள் அமெரிக்காவில் பணிபுரிய வழி வகுத்தது. ஆனால், அமெரிக்க அரசு இப்போது இந்த விசாக்களுக்கு அதிக கட்டுப்பாடுகளை விதிக்கிறது. முக்கியமாக, அதிக சம்பளம் பெறும், அதிநவீன திறன்கள் கொண்டவர்களுக்கு மட்டுமே விசா வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
அதிக சம்பளம் வாங்கும் இந்திய ஊழியர்களுக்கு பதில் அதைவிட குறைவாக அல்லது அதே சம்பளத்தில் அமெரிக்க ஊழியர்களால் மாற்றுவது” என்ற வாதம் அமெரிக்காவில் முன்வைக்கப்படுகிறது. ஆனால், இது சாத்தியமா? இந்தியர்கள் 13,000 கி.மீ. தாண்டி அமெரிக்காவுக்கு சென்று வேலை பார்க்கிறார்கள் என்றால், அது அவர்களது தனித்துவமான பங்களிப்பு மற்றும் திறமை காரணமாகவே. இந்த திறமை அமெரிக்கர்களிடம் இருந்திருந்தால் இந்தியர்கள் அமெரிக்காவுக்கு வரவேண்டிய அவசியமே இருந்திருக்காதே.
இந்தியர்கள் மற்றும் சீனர்களின் அறிவுத் திறன் இல்லாமல், அமெரிக்காவின் ஐடி துறை செழிக்க முடியாது என பல தொழிலதிபர்களும் நிபுணர்களும் தெரிவித்துள்ளனர். மென்பொருள் உருவாக்கம் முதல் செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு வரையிலான பல்வேறு துறைகளில் இந்தியர்களின் பங்கு அளப்பரியது. அமெரிக்க பல்கலைக்கழகங்களில்கூட கணிதம் மற்றும் கம்ப்யூட்டர் அறிவியல் போன்ற முக்கிய படிப்புகளில் இந்திய மற்றும் சீன மாணவர்கள் கணிசமான அளவில் உள்ளனர். இந்த திடீர் மாற்றங்கள், அமெரிக்காவின் தொழில்நுட்ப வளர்ச்சியையே பாதிக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
பலர் இந்த மாற்றத்தை இந்தியாவுக்கு கிடைத்த பரிசு என்று கூறுகின்றனர். டிரம்ப் அரசின் இந்த நடவடிக்கை, இந்திய திறமைகளை இந்தியாவிலேயே தக்கவைக்க உதவும் என்று அவர்கள் நம்புகிறார்கள். வெளிநாடு வாழ் இந்தியர்களை தாய்நாட்டிற்குத் திரும்பி வர ஊக்குவிக்க, அரசாங்கம் சிறப்புச் சலுகைகளையும், முதலீட்டு வாய்ப்புகளையும் வழங்கலாம். சீனா 1980-களில் இதேபோன்ற கொள்கைகளை அமல்படுத்தி, இன்று உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக வளர்ந்தது.
இந்தியாவில் தொழில் தொடங்குவோருக்கு, வரிச் சலுகைகள், எளிதான அனுமதி நடைமுறைகள், வங்கி உதவிகள், உள்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றை ஏற்படுத்தி தரலாம். இதன் மூலம், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் கிளைகளை தொடங்க முன்வருவார்கள்.
பிரதமர் மோடியின் ‘மேக் இன் இந்தியா’ மற்றும் ‘மேக் இன் பாரத்’ போன்ற திட்டங்கள், இந்தியாவிலேயே வேலைவாய்ப்புகளை உருவாக்கி, இந்திய இளைஞர்களை வெளிநாடு செல்வதில் இருந்து தடுக்கும். கல்வி மற்றும் ஆராய்ச்சியில் அதிக முதலீடுகள் செய்து, உயர் கல்வி நிறுவனங்களை வலுப்படுத்த வேண்டும். இதனால், அமெரிக்காவில் படித்தவர்கள் இந்தியாவில் உள்ள ஆராய்ச்சி மையங்களில் பணியாற்ற முடியும்.
இந்த நடவடிக்கை இந்தியாவிற்கு ஒரு சவாலாக இருந்தாலும், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்தால், இது ஒரு பெரிய வளர்ச்சி வாய்ப்பாக மாறும். இந்திய திறமையாளர்களை இந்தியாவிலேயே தக்கவைத்து, உலகளாவிய தொழில்நுட்ப மையமாக இந்தியாவை மாற்றுவதற்கான நேரம் இது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
