டெல்லி: வாரணாசியில் உள்ள கங்கை நதியின் நீர்மட்டம் வரலாறு காணாத அளவு சரிந்துள்ளது. வாரணாசியில் இருக்கும் கங்கை ஆற்றின் அகலம் 30-35 மீட்டராக குறைந்ததை கண்டு புனித நீராட வரும் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இமய மலையில் உத்தராகண்டம் மாநிலத்தில் திபெத் எல்லையை ஒட்டியுள்ள கங்கோத்ரியில் 27 கன கிலோமீட்டருக்கும் அதிகமாகவும் சுமார் 30 கிலோமீட்டர் நீளமும் 2 முதல் 4 கிமீ அகலமும் உள்ள பனிப்பாறையில் இருந்து உருவாகும் கங்கை நதி பாகிரதி நதி என்ற பெயரில் ஆரம்பிக்கிறது. இது தேவப்பிரயாக் எனுமிடத்தில் அலக்நந்தா ஆற்றுடன் கலந்து கங்கையாக மாறுகிறது. இந்த நதி உத்தரகாண்ட் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் ரிஷிகேஷ், ஹரித்வார், கான்பூர்,அலகாபாத், வாரணாசி, பாட்னா போன்ற நகரங்கள் பாய்ந்து கடைசியில் கொல்கத்தாவில் உள்ள வங்கக்கடலில் கலக்கிறது.
இந்தியாவில் இந்த நதி கங்கை என்ற பெயரிலும், வங்க தேசத்தில் பத்மா என்ற பெயரிலும் பாய்ந்தோடுகிறது. வங்கதேசம் முழுவதும் சமவெளி பகுதியில் கங்கை பாய்வதால் அங்கு மிகப்பெரிய அளவில் செல்வ செழிப்பாக இருக்கிறது.. கங்கை நதிதான் வடக்கில் உத்தரகாண்ட் தொடங்கி உத்தரப்பிரதேசம், பீகார் வழியாக கடைசியில் உள்ள மேற்கு வங்காளம் வரை உள்ள மக்களுக்கு ஜீவ நதியாகும். மொத்தம் 2525 கி.மீ வரை ஓடுகிறது.
இந்த கங்கை சிவனின் திருத்தலமான உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியை கடந்து ஓடுகிறது. வாரணாசியில் (காசியில்) உள்ள கங்கையின் நீராடினால் பாவங்கள் தீரும் என்பது ஐதீகம் ஆகும். இதன் காரணமாக நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் கங்கைக்கு வந்து நீராடிச் செல்வது வழக்கமாகும். காசியும் அதன் கங்கை நதிக்கரையும் புனித தலம் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும். இதன் காரணமாக ஆண்டு முழுவதும் கங்கை நதிக்கரையில் எப்போதும் கூட்டம் அலை மோதுவது வழக்கம். கங்கை எப்போதுமே இங்கு வற்றிப்போனதும் இல்லை..
இந்நிலையில், இந்த ஆண்டு வரலாறு காணாத வெப்பம் காரணமாக கங்கை ஆற்றில் நீர் வரத்து பெருமளவு குறைந்து சரிந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் வரலாறு காணாத வெயில் அதிகமாக இருக்கிறது. இந்த கடும் வெப்பத்தால், கங்கை நதியின் நீர்மட்டம் வரலாறு காணாத அளவு குறைந்துள்ளது.
வழக்கமாக ஜூன் மாதத்தில் 70 முதல் 80 மீட்டர் வரை இருக்கும் கங்கை ஆற்றின் அகலம் இருக்கும் கங்கை ஆற்றின் அகலம் என்பது வெறும் 30 முதல் 35 மீட்டராக குறைந்திருக்கிறது. கங்கை ஆற்றில் நீர்மட்டம் குறைந்து வருவதால், கரையோரத்தில் தண்ணீரில் மூழ்கிக் கிடந்த உடைந்த படகுகள், குப்பைகள், பாறைகள் அதிகமாக வெளியே தெரிகிறது.
கங்கையில் தண்ணீர் அதிகமாக ஓடிக்கொண்டே இருப்பதை பார்த்த காசி மக்கள், கங்கை தற்போது உள்ள காட்சியை கண்டு கலங்கி போய் இருக்கிறாரக்ள். தென்மேற்கு பருவ மழை கங்கை நதி பாயும் உத்தரப்பிரதேசம் பக்கம் அனோகமாக விரைவில் எட்டிபார்க்கும் என தெரிகிறது. அதன்பிறகு எல்லாம் சரியாகி விடும்-