இந்தியன் ரயில்வே என்பது உலகில் உள்ள மிகப்பெரிய ரயில் நிறுவனங்களில் ஒன்றாகும். கோடிக்கணக்கான பயணிகள் தினமும் இந்தியாவில் உள்ள ரயில்களில் பயணம் செய்கிறார்கள். நாடு முழுவதும் 7,300க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ள நிலையில், தினசரி 13,000 ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும், இரண்டு கோடிக்கும் அதிகமான பயணிகள் தினசரி பயணம் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியன் ரயில்வே நிலையங்களில் கடைகள், விளம்பரங்கள், பிளாட்பார்ம் டிக்கெட்டுகள், பயண டிக்கெட்டுகள் உள்ளிட்டவற்றில் இருந்து பெரும் அளவில் வருவாய் ஈட்டப்படுகிறது. மத்திய அரசின் முக்கிய வருவாயில் ஒன்றாக ரயில்வே துறை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுவரை, இந்தியாவில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களும் இந்தியன் ரயில்வேக்கு உரிமையாக்கப்பட்ட நிலையில் இருந்தன. ஆனால், தற்போது, இந்தியாவின் முதல் தனியார் நிர்வாகத்தில் செயல்படும் ரயில்வே நிலையம் மத்திய பிரதேச மாநிலத்தில், போபாலில் உள்ள ஹபீப் கன்ஸ் பகுதியில் உள்ள ராணி கமலாபதி ரயில்வே நிலையம் ஆகும்.
உலக தரத்திற்கு இணையான வசதிகள் இங்கு உருவாக்கப்பட்டுள்ளன. விசாலமான பார்க்கிங் ஏரியா, 24 மணி நேர மின்சாரம் மற்றும் குடிநீர், ஏர் கண்டிஷன் லாபி, அலுவலகங்கள், கடைகள், எஸ்கலேட்டர் மற்றும் லிப்ட் வசதி, பெரிய வர்த்தக கடைகள், கார் ஷோரூம், மீட்டிங் ஹால், ஹோட்டல் மற்றும் சிறப்பு மருத்துவமனை ஆகியவை இந்த ரயில்வே நிலையத்தில் அமைந்துள்ளன.
புதுடெல்லியில் இருந்து சென்னை செல்லும் பாதையில் ராணி கமலாபதி ரயில் நிலையம் அமைந்துள்ளது. இது மேற்கு மத்திய ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்டதாகும். இந்தியாவின் முதல் தனியார் நிர்வாகத்தில் செயல்படும் ரயில்வே நிலையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.