இந்திய வரலாற்றில் முதன்முறையாக, கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை பிடித்து சாதனை படைத்துள்ளது. இது கேரள அரசியலில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.
மொத்தமுள்ள 100 வார்டுகளில், என்.டி.ஏ சுமார் 50 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆகிய இரு பிரதான கூட்டணிகளும் வெகுவாக பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளன. கடந்த சில தேர்தல்களில் தென் கேரளாவில் பாஜக அடைந்த தொடர்ச்சியான வளர்ச்சி, இந்த மகத்தான வெற்றிக்கு வழிவகுத்துள்ளது.
என்.டி.ஏ-வின் இந்த வெற்றி அலையில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு, கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியான ஆர். ஸ்ரீலேகா, திருவனந்தபுரம் மாநகராட்சியின் 41-வது வார்டான சாஸ்தமங்கலத்தில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாகும். 1987-ஆம் ஆண்டு கேரள கேடர் அதிகாரியான இவர், சிபிஐ(எம்) வேட்பாளரான அம்ரிதா ஆர். என்பவரை 708 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து உள்ளார். தற்போது பாஜகவின் மாநில துணை தலைவராக இருக்கும் ஸ்ரீலேகா, தான் அரசியலில் நுழைந்தது முதலே காங்கிரஸும், எல்.டி.எஃப்-உம் தன்னைக் குறிவைத்து பலவிதமான விமர்சனங்களையும், அவதூறுகளையும் வீசியதாக தெரிவித்துள்ளார்.
தனது வெற்றிக்கு பிறகு பேசிய ஆர். ஸ்ரீலேகா, “நான் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே, எல்.டி.எஃப் மற்றும் காங்கிரஸ் கட்சியினரால் எனக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அது எதிர்பார்க்கப்பட்ட அளவைவிட மிகவும் அதிகமாகவே இருந்தது. ஒவ்வொரு நாளும் சமூக ஊடகங்களில் என்னை குறிவைத்து அவதூறான பதிவுகள் போடப்பட்டன. ஆனால், என் வார்டில் உள்ள மக்கள் இந்த அனைத்தையும் அர்த்தமற்றதாக நிராகரித்துவிட்டு, நான் கஷ்டப்பட்ட போதும் மகிழ்ச்சியாக இருந்த போதும் என் பக்கபலமாக நின்றார்கள். நான் வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வெற்றியின் மூலம் மக்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நான் புரிந்து கொண்டேன்” என்று உருக்கத்துடன் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்துள்ள இந்த வெற்றி, கேரள அரசியலில் ஒரு திருப்புமுனை ஆகும்” என்று குறிப்பிட்டுள்ளார். ஆர். ஸ்ரீலேகாவின் வெற்றி, வெறும் தனிப்பட்ட வெற்றியாக இல்லாமல், கேரளாவின் தலைநகரிலேயே மாற்றத்தை நாடும் மக்களின் மனநிலையை பிரதிபலிப்பதாக அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது. ஒரு முன்னாள் உயர் போலீஸ் அதிகாரி, ஆளும் இடதுசாரி வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றிருப்பது, இந்த மாற்றத்தின் அடையாளமாக அமைந்துள்ளது.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆர். ஸ்ரீலேகா, தனது தொழில் வாழ்க்கையை ஸ்ரீ வித்யா ராஜா கல்லூரியில் விரிவுரையாளராக தொடங்கினார். பின்னர், மும்பையில் ரிசர்வ் வங்கி கிரேடு பி அதிகாரியாக பணியாற்றினார். தனது 26-வது வயதில், 1987-ஆம் ஆண்டு கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியாக பொறுப்பேற்று வரலாறு படைத்தார். காவல்துறை பணியில் 33 ஆண்டுகள் அனுபவம் கொண்ட இவர், பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். சிபிஐ-யில் எஸ்.பி. மற்றும் டிஐஜி ஆகவும் பணியாற்றியவர். மேலும், அவர் ஒன்பது புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
ஏற்கனவே திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்று எம்பியாகியுள்ள நிலையில் தற்போது திருவனந்தபுரம் மாநகராட்சியில் என்.டி.ஏ ஆட்சியை பிடிப்பதன் மூலம், கேரளாவின் நகர்ப்புற அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், எதிர்வரும் சட்டமன்ற தேர்தல்களுக்கான அரசியல் சமன்பாடுகளையும், கூட்டணிக் கணக்கீடுகளையும் மாற்றி அமைக்கக்கூடிய ஒரு வலுவான அரசியல் அலையை ஏற்படுத்தி உள்ளன. தென் மாநிலங்களில் காலூன்ற துடிக்கும் பாஜகவுக்கு, கேரள தலைநகரில் கிடைத்துள்ள இந்த மகத்தான வெற்றி, அக்கட்சியின் எதிர்கால வியூகங்களுக்கு ஒரு பெரும் உந்துசக்தியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
