இந்த உலகில் நாள் தோறும் வெளியே செல்லும் சமயத்தில் நம்மை கடந்து செல்லும் பல மனிதர்களின் வாழ்க்கைக்கு பின்னால் ஏராளமான கதைகள் இருக்கும். அதை கவனிக்கும் சமயத்தில் ஒரு பக்கம் எமோஷனலாகவோ அல்லது மெய்சிலிர்க்க வைக்கும் வகையிலோ கூட நிச்சயம் அமைந்திருக்கலாம். வேகமாக நாம் எங்கேயோ ஓடிக் கொண்டிருக்கும் சமயத்தில் சிலரின் கதைகளை நின்று நாம் கேட்கும் நேரம் இருந்தால் நமது வாழ்க்கையை மாற்றும் அளவுக்கு கூட ஏதாவது ஒரு திருப்பத்தை அவர்கள் சொல்லும் விஷயங்கள் உண்டு பண்ணும்.
43 வருட காதல்
அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே ரயில்வே ஸ்டேஷனில் தின்பண்டங்கள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வரும் வயதான தம்பதியரின் வாழ்க்கை பற்றிய செய்தி அனைவரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. சித்தேஷ் லோக்கரே (Siddesh Lokhare) என்ற நபர் வயதான தம்பதியர் தொடர்பான வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் பீம்ராவ் என்ற வயதான நபரும், அவரது மனைவி சோபா ஆகிய இருவரும் சேர்ந்து ஃபிளாட்பாரம் அருகே தின்பண்டங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.
இவர்களிடம் சென்று பேசும் சித்தேஷ் லோகரே, அவர்களுக்கு திருமணமான தேதி பற்றி கேட்க, உடனே பீம்ராவும் மிக உற்சாகமாக, ‘மார்ச் 12 1983 ஆம் ஆண்டு’ என கூறுகிறார். உடனடியாக அவரது மனைவியும் நாங்கள் 43 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வருகிறோம் என பெருமிதத்திலும் குறிப்பிடுகிறார்.
2 நிமிஷம் பிரிஞ்சிருக்க மாட்டோம்..
பீம்ராவின் பார்வை அவர் இரண்டு வயதாக இருக்கும் போதே பறிபோன நிலையில் அவருடன் இணைந்து வாழ்ந்து வருவது பற்றி பேசும் ஷோபா, ‘நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு எங்களது அன்பையும் பரிமாறிக் கொள்கிறோம்’ என்றும் குறிப்பிடுகிறார். மேலும் ஒருவருக்கொருவர் மதிப்பு கொடுத்தும் வாழ்ந்து வரும் பீம்ராவ் மற்றும் சோபா ஆகியோர் அடிக்கடி சண்டை போட்டாலும் இரண்டு நிமிடங்கள் கூட தனியாக இருக்க மாட்டார்கள் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
பார்வையில் குறைபாடு இருந்தாலும் பல சமையல் கலைஞர்களை விட வேகமாக காய்கறிகளை தனது கணவர் வெட்டுவதாக கூறும் சோபாவின் இடது கைகளிலும் விரல்கள் குறைபாடு உள்ளது தெரிகிறது. இப்படி ஒரு தம்பதிகள் 43 ஆண்டுகளாக ஒரு நிமிடம் பிரிந்திருக்காமல் இணைந்து சிறிய கடை மூலம் தங்களது வருமானத்தை ஈட்டி வரும் சூழலில் அவர்கள் இந்த தலை முறை இளைஞர்களுக்கும் ஒரு அறிவுரையை கூறியுள்ளனர்.
அடுத்தவங்களுக்காக வாழணும்..
‘கடின உழைப்பு தான் எல்லாமே. உங்களுக்காக மட்டும் நீங்கள் வாழவே கூடாது. அடுத்தவர்களுக்காக வாழும் போது தான் நீங்கள் நிஜத்திலேயே வாழ தொடங்குகிறீர்கள்’ என்றும் குறிப்பிடுகின்றனர். இந்த தம்பதியரின் வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன் அவர்கள் சொல்லும் வார்த்தைகள் பலருக்கும் இன்ஸபிரேஷனாக அமைந்துள்ளது.