முன்னாள் விமான ஓட்டுனராக, மும்பையை சேர்ந்த ஒருவர் சமூக வலைதளங்களில் இரண்டு நபர்களுடன் நண்பர்களாக அறிமுகமானார். அவர்களிடம் உரையாடும் போது, “Tesla நிறுவனத்தில் நீங்கள் முதலீடு செய்தால், எலான் மஸ்க் அவர்களை நேரடியாக சந்திக்க வாய்ப்பு கிடைக்கும்” என்று கூறியதை நம்பி, முதலில் இரண்டு லட்சம் ரூபாய் முதலீடு செய்தார்.
அதன் பின்னர், “உங்கள் பணம் டெஸ்லாவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது, மேலும் அதிகமாக முதலீடு செய்தால் டெஸ்லா கார் இலவசமாக பெறலாம். அது மட்டுமின்றி எலான் மஸ்க் அவர்களை நேரில் சந்திக்கவும் முடியும்” என்று கூறியுள்ளனர். இதனை நம்பிய அவர் தொடர்ந்து முதலீடு செய்தார்.
மொத்தம் 22 முறை வங்கி மற்றும் பேபால் மூலம் 72 லட்சம் ரூபாய் முதலீடு செய்த பின்னரே அவர் மோசடிக்கு உள்ளானதை உணர்ந்தார். அதன் பிறகு, “உங்கள் முதலீட்டிலிருந்து 78 லட்சம் ரூபாய் வருமானமாக கிடைத்துள்ளது. எனவே அதற்குரிய வரியை செலுத்தினால், முழு பணத்தையும் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்” என்று கூறப்பட்டது.
உடனடியாக அவர், “வரிப்பணத்தை கழித்துக் கொண்டு மீதியை அனுப்புங்கள்” என்று கூறியதும், அவர்களுடன் உள்ள தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணை நடைபெற்று வருகிறது. 72 லட்சம் ரூபாய் மோசடிக்கு உள்ளாகிய முன்னாள் விமான ஓட்டுனரின் அனுபவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.