டெஸ்லா நிறுவனத்தின் இந்தியா கிளை விரைவில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டெஸ்லா மாடல் கார்களை வாங்க முன்பதிவுகள் செய்யப்பட்டது. ஆனால் தற்போது முன்பதிவு செய்த நபர்களுக்கு பணத்தை திருப்பி அளிக்க டெஸ்லா தொடங்கியுள்ளது.
அமெரிக்க மின்சார வாகன நிறுவனமான டெஸ்லா, உலகின் மூன்றாவது பெரிய கார் சந்தையான இந்தியாவில் அதன் வெளியீட்டை சற்று தாமதத்துடன் திட்டமிட்டு வருவதாக செய்திகள் கூறுகின்றன.
இதனால் டெஸ்லா இந்தியாவுக்கே வராது என்பது அர்த்தமல்ல என்றும், உலகின் மக்கள் அதிகம் உள்ள இந்தியாவில் ஒரு பெரிய சந்தை பிரவேசத்திற்கு தயாராகி கொண்டிருப்பதாகவும், ஆனால் டெஸ்லாவின் வருகை சற்று காலதாமதம் ஆகலாம் என்றும் தெரிகிறது..
எனவே தான் முன்பதிவு செய்தவர்களுக்கு டெஸ்லா மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. அதில் தற்காலிகமாக உங்கள் முன்பதிவு தொகையை திருப்பி செலுத்த விரும்புகிறோம். இந்தியாவில் எங்கள் தயாரிப்புகள் உறுதியாகும் போது, மீண்டும் சந்தைக்கு வருவோம். எங்களது வெளியீடும் விநியோகமும் தொடங்கும் நேரத்தில், நீங்கள் மீண்டும் எங்களைத் தேர்வு செய்து முன்பதிவு செய்வீர்கள் என்று நம்புகிறோம்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய மின்னஞ்சல்களின் மூலம் டெஸ்லா நிறுவனம், இந்தியாவில் விற்பனையை தொடங்க விரும்பினாலும் இப்போதைக்கு வரவில்லை என்பதை குறிப்பிடுகிறது. கடந்த சில ஆண்டுகளில் உயர்ந்த இறக்குமதி வரி காரணமாக டெஸ்லா வர முயலவில்லை என்று கூறப்படுகிறது.
சமீபத்தில், எலான் மஸ்க் “இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியா வருவேன்” என்று கூறினார். அப்போது இந்தியா-அமெரிக்கா இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தம் நடைபெறும் என்றும், குறிப்பாக கார்கள் மீது விதிக்கப்படும் வரிகளை குறைக்கும் வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்பட்டது.