சபரிமலை அய்யப்பன் கோயிலை அதிர வைத்த சம்பவம்.. ரகசிய விசாரணையால் சிக்கிய தென்காசி இளைஞர்

By Keerthana

Published:

சபரிமலை: சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜையையொட்டி கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டு 21-ந் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடந்து முடிந்தது. கடந்த செப்டம்பர் 21-ந் தேதி நடை சாத்தப்பட்ட பின்னர் கோவில் ஊழியர்கள் சன்னிதானத்தில் உள்ள உண்டியல்களை ஆய்வு செய்தனர். அங்கு உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது. அதனை திருடிய தென்காசி இளைஞரை போலீசார் கைது செய்தனர். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

உலக புகழ் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மட்டும் முழுமையாக திறந்திருக்கும். அதேநேரம் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் வாரமும் திறக்கப்படும். ஆவணி மாத பூஜையையொட்டி கடந்த செப்டம்ர் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டு 21-ந் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடந்து முடிந்தது. கடந்த செப்டம்பர் 21-ந் தேதி நடை சாத்தப்பட்ட பின்னர் கோவில் ஊழியர்கள் சன்னிதானத்தில் உள்ள உண்டியல்களை ஆய்வு செய்தார்கள். சபரிமலை கோயில் கருவறை மண்டபத்திற்கு அருகில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கை பணம் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக சபரிமலை தேவஸ்தான ஊழியர்கள் சன்னிதானம் போலீசுக்குத் தகவல் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதுதொடர்பாக டிஎஸ்பி ஜெயராஜ் தலைமையில் பம்பை இன்ஸ்பெக்டர் விஜயன், சப்- இன்ஸ்பெக்டர் சஜி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு ரகசியமாக விசாரணை நடந்தது.

தனிப்படையினர் சன்னிதானம் மற்றும் பம்பையில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இது தவிர சபரிமலையில் துப்புரவு உள்ளிட்ட வேலைக்கு வரும் நபர்களிடமும் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில் உண்டியல் பணத்தை திருடியது சபரிமலையில் துப்புரவு பணிக்கு வரும் தென்காசி மாவட்டம் கீழச்சுரண்டை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (வயது32) என்பது தெரியவந்தது. இவர் கடந்த 14 ஆண்டுகளாக எல்லா மாதமும் வேலைக்கு வருவது வழக்கம். அதன்படி கடந்த மாதம் 20-ந் தேதி வேலைக்கு வந்த போது உண்டியலை உடைத்து பணத்தை திருடியது தெரிய வந்தது. இதையடுத்த சுரேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

இந்த விவரத்தை அறிந்து கொண்ட சுரேஷ் இந்த மாதம் சபரிமலைக்கு வேலைக்கு வரவில்லை. இதையடுத்து தனிப்படையினர் சுரேசை பிடிப்பதற்காக நெல்லை, தென்காசி, மதுரை உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் கீழச்சுரண்டையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் போலீசார் கீழச்சுரண்டைக்கு சென்று வீட்டில் இருந்த சுரேசை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை பம்பைக்கு கொண்டு சென்று அவரிடம் தொடர்ந்து விசாரிக்கிறார்கள்.