மும்பைக்கு அருகேயுள்ள நல்லசோபாரா பகுதியில் உள்ள ஹோவர்ட் ஆங்கில பள்ளியில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் கோபத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. வகுப்பறையில் துர்நாற்றம் வீசியதாக கூறப்பட்ட புகாரை தொடர்ந்து, இரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவனின் பிறப்புறுப்பில் பள்ளி ஆசிரியை ஒருவர் ஸ்ப்ரே தெளித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மாநில கல்வித்துறை இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது. பள்ளியின் செயல்பாடுகளில் கடுமையான குறைபாடுகளை கண்டறிந்ததால், பள்ளியை மூட உத்தரவிட்டுள்ளது.
இந்தச் சம்பவம் ஜூலை 23 அன்று வெளிச்சத்திற்கு வந்தது. 8 வயது குழந்தையின் பெற்றோர் புகார் அளித்த நிலையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் பெற்றோரிடம் மன்னிப்பு கோரியதாக தெரிகிறது. ஆனாலும் குழந்தையின் தாயார் சோனல் ரந்திவே இந்த சம்பவத்தை வெளியுலகிற்கு கொண்டு வந்துவிட்டார்.
ரந்திவே கூறுகையில், அன்று வகுப்பறையில் மூன்று மாணவர்கள் மட்டுமே இருந்தனர். வகுப்பு ஆசிரியை நிதா நிஜாவுதீன், வகுப்பறையில் ஒரு துர்நாற்றம் வீசுவதாக கூறினார். தன் மகன் அதற்கு தான் காரணம் இல்லை என்று மறுத்தபோது, ஆசிரியை ஸ்ப்ரே எடுத்து, அவரது பிறப்புறுப்பில் தெளித்ததாக கூறப்படுகிறது. அந்த சிறுவன் வேதனையில் அழுத போதிலும், நிஜாவுதீன் அதை ஒரு வேடிக்கையாக கருதி புறக்கணித்ததாக ரந்திவே தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு, ரந்திவே உடனடியாக பள்ளி முதல்வர் ஹீனா சையத்தை அணுகியுள்ளார். ஆனால், தனது குற்றச்சாட்டை பள்ளி முதல்வர் சீரியஸாக எடுத்து கொள்ளவில்லை என்றும், தனது புகாரை அவர் புறக்கணித்தார்,” என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்,.
இந்த புகாரை தொடர்ந்து, மாநில கல்வித்துறை விசாரணையை தொடங்கியது. குழு கல்வி அலுவலர் இரண்டு நாட்களுக்குள் ஒரு விரிவான அறிக்கையை சமர்ப்பித்த பின்னர் “பள்ளியை மூடுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரம் குறித்த விசாரணை நடந்து வருகிறது,” என்று பால்கர் மாவட்ட துணை கல்வி அலுவலர் மாதவ் மாதே ஒரு ஊடகத்தில் கூறியுள்ளார். நோட்டீஸ் கொடுக்கப்பட்ட பிறகும் பள்ளி தொடர்ந்து செயல்பட்டால், காவல்துறை வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதிகாரிகள் மேற்கொண்ட உடனடி நடவடிக்கையால் தான் ஓரளவு நிம்மதி அடைந்துள்ளதாகவும், விசாரணை எவ்வாறு வெளிவருகிறது என்பதை பார்க்க காத்திருப்பதாகவும் குழந்தையின் தாய் கூறினார். “இந்த விஷயத்தில் துறை உடனடியாக நடவடிக்கை எடுத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். என் குழந்தைக்கு நீதி கிடைக்க வேண்டும், இது போன்ற ஒரு விஷயம் வேறு எந்த பெற்றோருக்கும் நடக்கக் கூடாது என்று நான் விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
