கடந்த சில வருடங்களாக UPIமூலம் பண பரிவர்த்தனை மிக வேகமாக நடைபெற்று வருகிறது. சின்ன சின்ன பெட்டிக் கடைகள், தள்ளுவண்டி கடைகள், பிளாட்பார்ம் கடைகளில் கூட UPIவசதி வந்துவிட்டதால், பொதுமக்கள் மொபைலில் இருந்து ஸ்கேன் செய்து பணத்தை மிக எளிமையாக பரிவர்த்தனை செய்து வருகின்றனர். ஆனால், தற்போது இந்த பரிவர்த்தனை வணிகர்களுக்கு பெரும் சிக்கலாக மாறிவிட்டது.
UPIமூலம் பணம் பெற்று கொள்வதால் அவர்களுடைய உண்மையான விற்பனை மதிப்பு தெரிந்து விடுகிறது என்பதும், வங்கியில் இருந்து இந்த தகவல்களை எடுத்து ஜிஎஸ்டி அலுவலகம் சில வணிகர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதால் வணிகர்கள் அச்சமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. முன்பெல்லாம் ஒரு டீக்கடையில் தினமும் 20 ஆயிரம், 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை நடந்தால் கூட அது சுத்தமாக வருமான வரித்துறை அலுவலகத்திற்கு தெரியாது. எல்லாமே ரொக்க பரிமாற்றம் என்பதால் எதுவுமே கணக்கில் வராமல் பார்த்து கொள்வார்கள். ஆனால் தற்போது, UPIமூலம் பணப் பரிமாற்றம் செய்யப்படுவதால், ஜிஎஸ்டி வரம்புக்குள் சில வணிகர்கள் வந்து விடுவதால் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஒரு வருடத்திற்கு 40 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக விற்பனை செய்தாலோ அல்லது சேவை தொழிலில் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டினாலோ ஜிஎஸ்டி வரம்புக்குள் வரவேண்டும் என்பது விதியாக உள்ளது. இதனை அடுத்து, பெங்களூருவில் உள்ள பல வணிகர்கள் தற்போது “No UPI, Only Cash” என்ற போர்டை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஜிஎஸ்டி அலுவலகம் இது குறித்து ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இது குறித்து கர்நாடக மாநில வணிகவரித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
பணம் எப்படிப் பெறப்படுகிறது என்பதை பொருட்படுத்தாமல், பொருட்கள் அல்லது சேவைகளிலிருந்து ஈட்டப்படும் மொத்த வருமானத்திற்கு ஜிஎஸ்டி பொருந்தும். அதாவது, பணம், யுபிஐ, கார்டு பேமென்ட்கள், வங்கி பரிமாற்றங்கள் அல்லது வேறு எந்த முறையிலும் பெறப்படும் வருமானம் ஜிஎஸ்டிக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
பொருட்களிலிருந்து ஆண்டுக்கு ரூ.40 லட்சத்திற்கும் அதிகமாகவோ அல்லது சேவைகளிலிருந்து ரூ.20 லட்சத்திற்கும் அதிகமாகவோ வருமானம் ஈட்டும் வணிகங்கள் ஜிஎஸ்டி பதிவு செய்து செலுத்த வேண்டும். பணம் யுபிஐ மூலம் வந்தாலும் அல்லது ரொக்கமாக வந்தாலும் இது பொருந்தும்.
UPIஐ தவிர்ப்பது ஜிஎஸ்டி செலுத்துவதிலிருந்து வர்த்தகர்களை பாதுகாக்காது
ரொக்க பரிவர்த்தனைக்கு மாறுவது வணிகங்களை அவர்களின் ஜிஎஸ்டி கடமையிலிருந்து விலக்கு அளிக்காது. டிஜிட்டல் பேமென்ட் பதிவுகள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த வருவாய் அடிப்படையிலேயே ஜிஎஸ்டி அறிவிப்புகள் வழங்கப்படுகின்றன என்று தெளிவுபடுத்தியுள்ளது.
UPIஐ ஏற்க மறுப்பது ஜிஎஸ்டி செலுத்துவதை தவிர்க்க உதவாது என்பதை பெங்களூரு வர்த்தகர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அனைத்து வருமான ஆதாரங்களுக்கும் ஜிஎஸ்டி பொருந்தும் என்பதை புரிந்துகொண்டு, விதிகளை பின்பற்றுமாறு வரித்துறை வணிகங்களை வலியுறுத்துகிறது. டிஜிட்டல் பேமென்ட்களை தவிர்க்க முயற்சிப்பது வரி பொறுப்பை தடுக்காது மற்றும் மேலும் ஆய்வுக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே புலி வாலை பிடித்துவிட்ட வணிகர்கள் அதில் இருந்து மீள வழி தெரியாமல் சிக்கலில் இருப்பதாக கூறப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
