இனிமேல் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம்.. CBSE அறிமுகம் செய்யும் புதிய நடைமுறை.. ஆனால் இதுதான் ரொம்ப கஷ்டம்.. ஏன் தெரியுமா?

CBSE வரும் 2026-27 கல்வியாண்டு முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்காக திறந்த புத்தகத் தேர்வுகளை அதாவது தேர்வுகளை புத்தகத்தை பார்த்து எழுதலாம் என்ற ஒரு நடைமுறையை அறிமுகப்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முடிவு, தேசியக்…

cbse

CBSE வரும் 2026-27 கல்வியாண்டு முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்காக திறந்த புத்தகத் தேர்வுகளை அதாவது தேர்வுகளை புத்தகத்தை பார்த்து எழுதலாம் என்ற ஒரு நடைமுறையை அறிமுகப்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முடிவு, தேசியக் கல்விக் கொள்கை 2020-இன் ஒரு பகுதியாக, மாணவர்களின் மனப்பாடம் செய்யும் திறனை தாண்டி, அவர்களின் புரிதல் மற்றும் விமர்சன சிந்தனை திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாக இந்த நடைமுறை கொண்டுள்ளது.

புதிய திட்டத்தின்படி, ஒவ்வொரு பருவத்திலும் நடத்தப்படும் மூன்று எழுத்து தேர்வுகளில் திறந்த புத்தக தேர்வுகளும் சேர்க்கப்படும். மொழி, கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் போன்ற முக்கியப் பாடங்களுக்கு இந்த முறை பொருந்தும். இந்த தேர்வுகளின்போது, மாணவர்கள் பாடப்புத்தகங்கள், வகுப்பு குறிப்புகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட இதர பொருட்களை பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த அணுகுமுறை, மாணவர்களை வெறும் தகவல்களை மனப்பாடம் செய்வதற்கு பதிலாக, அவற்றை எவ்வாறு பயன்படுத்தலாம், பகுப்பாய்வு செய்யலாம் மற்றும் சூழலுக்கு ஏற்றவாறு பதிலளிக்கலாம் என்று சிந்திக்கத் தூண்டும்.

இந்த புதிய முறையைச் செயல்படுத்துவதற்கு முன், CBSE ஒரு முன்னோட்ட ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வில் மாணவர்களின் செயல்திறன் கலவையாக இருந்தது. மாணவர்களின் மதிப்பெண்கள் 12% முதல் 47% வரை இருந்தன. இது, பாட புத்தகங்களில் உள்ள தகவல்களை திறம்படப் பயன்படுத்துவதிலும், பல பாடங்களின் கருத்துகளை ஒன்றிணைத்து புரிந்துகொள்வதிலும் மாணவர்கள் சவால்களை எதிர்கொண்டதை காட்டியது.

இருப்பினும், இந்த ஆய்வில் கலந்துகொண்ட ஆசிரியர்கள், இந்த முறையின் எதிர்காலம் குறித்து நம்பிக்கையாக இருந்தனர். ஆரம்பகால சவால்கள் இருந்தபோதிலும், திறந்த புத்தக தேர்வுகள் மாணவர்களின் விமர்சன சிந்தனை திறனை வளர்ப்பதற்கான ஆற்றலை கொண்டுள்ளன என்று அவர்கள் தெரிவித்தனர்.

இந்த திட்டம் நடைமுறைக்கு வரும்போது, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சில முக்கிய சவால்களை எதிர்கொள்ளக்கூடும். கேள்விகளை வடிவமைப்பதில் ஆசிரியர்களுக்குப் புதிய திறன்கள் தேவைப்படும். ஏனெனில், கேள்விகள் நேரடியாக பாடப்புத்தகத்திலிருந்து கேட்கப்படாமல், புரிதலை சோதிப்பதாக இருக்க வேண்டும்.

புத்தகங்களை வைத்து பதிலளிப்பது எளிது என்று மாணவர்கள் கருதலாம். ஆனால், உண்மையில் இது கடினமானது. மாணவர்கள் தகவல்களை தேடி, அதை அப்படியே எழுதக்கூடாது. அதில் உள்ள சாரம்சங்களை புரிந்து கொண்டு தங்கள் பாணியில் ஒரு புதிய தனித்துவமான பதிலை உருவாக்க வேண்டும். இது, நேர நிர்வாக திறனையும், ஆழமான கற்றல் திறனையும் கோரும்.

CBSE இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த, தரப்படுத்தப்பட்ட மாதிரி வினாத்தாள்களை உருவாக்கும். மேலும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களையும் வழங்கும். திறந்த புத்தகத் தேர்வுகள், மாணவர்களின் கற்றல் அனுபவத்தை முற்றிலும் புதிய பரிமாணத்திற்கு எடுத்துச்செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.