ராஜஸ்தான் மாநிலத்தில், இளம்பெண் ஒருவர் தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென எட்டு தெரு நாய்கள் அவரை சுற்றி வளைத்து கடிக்கத் தொடங்கின.
அவர் முடிந்த அளவு அந்த நாய்களிடமிருந்து தன்னை பாதுகாக்க முயன்றார். ஆனால், ஒரு கட்டத்தில் கீழே விழுந்துவிட்டதால், அவரது கை, கால், கழுத்து, முகம் ஆகிய பகுதிகளில் கடித்து குதறின.
அந்த நேரத்தில், அந்தப் பக்கமாக ஸ்கூட்டரில் வந்த ஒரு பெண், வண்டியை நிறுத்திவிட்டு நாய்களை விரட்டினார். அதற்குள் அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் ஓடிவந்து நாய்களை விரட்டினர்.
இதையடுத்து, தெரு நாய்கள் கடித்ததால் ரத்த வெள்ளத்தில் மிதந்த அந்த இளம்பெண்ணை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பலரும், தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோபத்துடன் பதிவிட்டு வருகின்றனர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, அதே பகுதியில் 65 வயது பெண் ஒருவர் தெரு நாய் கடியால் பாதிக்கப்பட்டு படுகாயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் மாநிலம் மட்டுமின்றி, தமிழகம் உள்பட பல பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.