சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சீனாவுக்கு சென்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியபோது, செமிகண்டக்டர் மாநாடு ஒன்றில் பேசுகையில் எழுப்பிய கேள்வி இந்திய உளவு மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பல ஊகங்களுக்கு வித்திட்டுள்ளது.
“நீங்கள் கைதட்டுவது நான் சீனாவுக்கு போனதற்காகவா? இல்லை பத்திரமாக திரும்பி வந்ததற்காகவா?” என்று பிரதமர் மோடி பேசியது, அவர் சீன பயணத்தின்போது ஏதோவொரு பாதுகாப்பு அச்சுறுத்தலை உணர்ந்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. மூத்த பத்திரிக்கையாளர் கோலாகல சீனிவாசன், இந்த கேள்வியின் பின்னணியில் உள்ள அதிர்ச்சி அளிக்கும் உலக உளவு போரின் தகவல்களை பகிர்ந்துள்ளார்.
பிரதமர் மோடியின் சீன பயணம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி நிகழ்ந்த நிலையில், அதே ஆகஸ்ட் 31-ஆம் தேதி பங்களாதேஷின் டாக்காவில் நடந்த மர்ம மரணங்கள் இந்த ஊகங்களுக்கு மேலும் வலு சேர்க்கின்றன.
டாக்காவில் உள்ள ஒரு பிரபலமான நட்சத்திர விடுதியில், வங்கதேச படைகளுக்கு பயிற்சி அளிக்க வந்த ஒரு சிஐஏ உளவாளி திடீரென இறந்து கிடந்தார். அவரது உடலில் காயம், துப்பாக்கி சூடு போன்ற தடயங்கள் இல்லை. ஆனால், அவர் அருந்திய பானத்தில் பொலோனியம் என்ற கதிரியக்க ஐசோடோப் கலந்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது. உளவாளிகளை தீர்த்துக்கட்ட ரஷ்ய உளவுத்துறை இதுபோன்ற பொலோனியத்தை பயன்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்றது.
அதே நாளில், டாக்காவில் உள்ள மற்றொரு விடுதியில் ஒரு பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவாளியும் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இறந்த அமெரிக்க உளவாளி, சீனாவில் பிரதமரை கொல்வதற்காக சிஐஏ-வால் அனுப்பப்பட்டவர் என்றும், இதை ரஷ்ய உளவுத்துறை கண்டறிந்து இந்திய உளவுத்துறையான ராவிடம் தெரிவித்ததாகவும், ரஷ்யா மற்றும் ரா-வின் கூட்டு முயற்சியால் அந்த உளவாளி கொல்லப்பட்டார் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச உளவாளிகளின் சதி வலை இந்தியாவிற்கு புதிதல்ல. கடந்த காலங்களில் இந்தியாவின் முக்கிய வளர்ச்சிக்கு தடையாக இருந்த மாபெரும் விஞ்ஞானிகள் மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். இந்திய அணுசக்தி திட்டத்தின் தந்தை என்று கருதப்படும் ஹோமி பாபா, 1966 ஜனவரி 24 அன்று ஜெனிவாவுக்கு பயணித்தபோது, அவர் சென்ற விமானம் மான் பிளாங்க் மலையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து ஒரு சதி என்று நீண்டகாலமாக சந்தேகிக்கப்பட்டது.
993-ஆம் ஆண்டு கிரிகோரி டக்ளஸ் என்ற பத்திரிகையாளரிடம் பேசிய ராபர்ட் கிராவெலி என்ற சிஐஏ உளவாளி, ஹோமி பாபா சென்ற விமானத்தின் சரக்கு பகுதியில் டைம் பாம் வைத்து வெடிக்க செய்தது சிஐஏ தான் என்றும், இந்தியாவின் அணு ஆயுத திட்டத்தைப் தாமதப்படுத்துவதற்காக இந்தச் சதி செய்யப்பட்டதாகவும் கூறி, அதிர்ச்சி அளித்துள்ளார்.
1966 ஜனவரி 11 அன்று, பாகிஸ்தானுடன் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான மறுநாள், அன்றையப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி தாஷ்கண்டில் மர்மமான முறையில் இறந்தார். இவரது மரணத்திலும் சிஐஏ-வின் கைவண்ணம் இருப்பதாக ராபர்ட் கிராவெலி தெரிவித்திருந்தார்.
இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை விக்ரம் சாராபாய், 50-51 வயதிலேயே 1971 டிசம்பர் 30/31 அன்று மாரடைப்பிற்கான எந்த முகாந்திரமும் இல்லாத நிலையில், திடீரென இறந்து போனார்.
கிரயோஜெனிக் தொழில்நுட்பம் தெரிந்த இந்தியாவின் ஒரே விஞ்ஞானியான நம்பி நாராயணன், உளவு ரகசியங்களை கசியவிட்டதாக பொய்யான வழக்கில் சிக்கவைக்கப்பட்டார். இந்த தொழில்நுட்பம் இந்தியாவுக்கு கிடைத்துவிட கூடாது என்பதற்காக சர்வதேச நாடுகள் சதி செய்தன. இதில், கிரயோஜெனிக் தொழில் நுட்பத்தை இந்தியா பெற தடை விதித்த ரஷ்ய உளவுத்துறைக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சதியால் இந்தியாவின் விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சி 15 ஆண்டுகள் பின்னடைவை சந்தித்தது.
சமீபத்தில் பிரம்மோஸ் ஏவுகணை பிரிவின் இளம் விஞ்ஞானி ஆகாஷ்தீப் குப்தா மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவமும், இதுபோன்ற சர்வதேச சதியின் தொடர்ச்சியாக இருக்கலாம் என்று உத்தர பிரதேசத்தின் முன்னாள் டிஜிபி விக்ரம் சிங் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
இந்த வரலாற்று ஆபத்துகளையும், உலக உளவுத்துறை வலைப்பின்னல்களையும் பிரதமர் மோடியும், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் நன்கு உணர்ந்தே இருக்கிறார்கள். என்ன நடக்கும், எப்படி செயல்படுவார்கள், எப்படி முறியடிக்க வேண்டும் என்ற தெளிவு அவர்களுக்கு இருப்பதால், அதற்கேற்பவே நாட்டை வழிநடத்தி வருகின்றனர். பிரதமர் மோடியின் கேள்வியே (சீனாவிலிருந்து பத்திரமாகத் திரும்பி வந்ததற்காகவா?) இந்த கடுமையான பாதுகாப்பு சூழலை மறைமுகமாக உணர்த்துவதாக உள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
