வீடியோ : முடிச்சு விட்டீங்க போங்க.. போலீஸ் வேடத்தில் வீடியோ கால் செய்த மோசடி ஆசாமி.. மறுபக்கம் இருந்த ஆளு தான் ஹைலைட்டே..

By Ajith V

Published:

என்ன தான் சமூக வலைத்தளத்தின் பரவல் இன்று மக்கள் மத்தியில் அதிகமாக இருந்தாலும் அது தொடர்பான விழிப்புணர்வு மிகக் குறைவாக தான் இருந்து வருகிறது. நமது மொபைலில் வரும் போலி மெசேஜில் உள்ள லிங்கை கிளிக் செய்தாலே நிறைய பணங்களை அபகரிக்கும் சைபர் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. இதனையும் தடுத்து நிறுத்துவதற்காக போலீசாரும், அரசு தரப்பிலும் நிறைய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தினாலும் அவர்கள் அதிலிருந்து தப்பிப்பது போல் தெரியவில்லை.

வயதான நபர்கள் மட்டும் இல்லாமல் இளைஞர்களும் கூட இது தொடர்பான வலையில் வீழ்ந்து வரும் நிலையில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் என எதை பயன்படுத்தினாலும் மிக கவனமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இன்னொரு பக்கம் சைபர் குற்றங்களை செய்யும் பல மோசடி பேர்வழிகள் அதனை ஏதாவது ஒரு வழியில் தொடர்ந்து செய்து கொண்டே தான் இருக்கின்றனர்.

அதிகரிக்கும் ஆன்லைன் மோசடிகள்

அப்படி ஒரு சூழலில் சமீபத்தில் நபர் ஒருவர் போலீஸ் உடையணிந்து வீடியோ கால் செய்திருந்த நிலையில் அதன் பின்னர் நடந்த சம்பவம் இணையவாசிகள் மத்தியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக மோசடி செய்யும் நபர் ஒருவர் போலீசார் உடை அணிந்து கொண்டு பின்னணியில் போலீஸ் நிலையத்தை போன்ற செட்டப் செய்து கொண்டு தனக்கு தோன்றிய எண்ணில் வீடியோ கால் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அப்போது எதிரே இருந்த நபர் கேமராவை திருப்பி வைத்திருந்த நிலையில், அந்த போலீஸ் ஆசிரியராக இருந்த போலி ஆசாமி, அந்த நபரை பற்றிய விவரங்களை விசாரித்துள்ளார். தொடர்ந்து கேமரா என்ன ஆனது என கேட்க மறுமுனையில் பேசிய நபர் ஃபோன் கேமராவில் கோளாறு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வசமாக சிக்கிய ஆசாமி

இதனைத் தொடர்ந்து அந்த ஆசாமி கேமராவை சரியாக திருப்புங்கள் எனக் கூற அந்த நபர் திரும்பியதும் மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்துள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்ட பகுதியை சேர்ந்த சைபர் கிரைம் போலீசாருக்கு தான் அந்த மோசடி ஆசாமி தவறுதலாக மோசடியில் ஈடுபட முயற்சி செய்து வீடியோ கால் செய்துள்ளார்.

இன்னொரு புறம் போலீசார் இருப்பதை பார்த்ததும் அந்த நபர் ஆடி போனதுடன் ஒருவிதமாக சிரித்துக்கொண்டே இருந்துள்ளார். தொடர்ந்து பேசி இருந்த கேரள சைபர் கிரைம் போலீஸ், ‘இந்த வேலையை விட்டு விடுங்கள். எங்களிடம் உங்கள் முகவரி, உங்கள் லொக்கேஷன் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் உள்ளது. இது சைபர் செல்’ எனக் கூறியதுமே அந்த நபர் ஒரு நிமிஷம் ஆடிப் போய்விட்டார்.

பொதுமக்கள் பலரிடம் மோசடியில் ஈடுபட துடிக்கும் நபர் ஒருவர் போலீசாரிடம் அதுவும் சைபர் க்ரைம் போலீசாரிடம் சிக்கியது தொடர்பான வீடியோ இணையத்தை அதிகம் கலக்கி வருகிறது.