சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார களத்தில் ‘ரியல் பாலிடிக்ஸ்’ என்பது வெறும் வார்த்தையல்ல, அது தற்போதைய உலகளாவிய கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் ஒரு நிதர்சன உண்மையாக மாறியுள்ளது. சமீபகாலமாக ரஷ்யாவிலிருந்து சீனாவை நோக்கி சென்று கொண்டிருந்த எண்ணெய் கப்பல்கள், சிங்கப்பூர் கடல் பகுதிக்கு அருகே வந்தவுடன் திடீரென ‘யு-டர்ன்’ அடித்து இந்தியாவின் மங்களூரு துறைமுகத்தை நோக்கி திரும்ப தொடங்கியுள்ளன. ‘அக்வா டைட்டன்’ போன்ற பெரும் கப்பல்கள் தென் சீன கடலில் நுழைய வேண்டிய தருணத்தில் திசை மாறி இந்தியாவுக்கு வருவது ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல; இது ஒரு திட்டமிட்ட பொருளாதார வியூகம். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்தியா சுமார் 30 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை வாங்கியுள்ளது, இது உலக எண்ணெய் சந்தையில் இந்தியாவின் வளர்ந்து வரும் ஆதிக்கத்தை காட்டுகிறது.
இந்த அதிரடி மாற்றத்திற்கு பின்னால் சில நுட்பமான வர்த்தக உத்திகள் உள்ளன. ரஷ்ய எண்ணெய் விற்பனையானது பெரும்பாலும் நெகிழ்வான ‘ஸ்பாட் டீல்’ முறையில் நடக்கிறது. அதாவது, ஒரு கப்பல் கடலில் பயணித்து கொண்டிருக்கும்போதே, அதை வாங்குவதற்கு யாராவது அதிக விலை கொடுத்தாலோ அல்லது உடனடி பணப்பரிமாற்றம் செய்தாலோ, அந்த எண்ணெய் அவர்களுக்கு விற்கப்படும். சீனா ஒரு பாதுகாப்பான மண்டலத்தில் இருப்பதாக நினைத்து கொண்டிருந்த வேளையில், இந்தியா அதிக விலை கொடுத்து சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்த எண்ணெயை கைப்பற்றியுள்ளது. இது லாஜிஸ்டிக்ஸ் குழப்பம் அல்ல, மாறாக இந்தியாவின் புத்திசாலித்தனமான சந்தை அணுகுமுறையாகும்.
இந்த வர்த்தகத்தில் இந்தியாவுக்கு இருக்கும் மிகப்பெரிய சாதகம் என்னவென்றால், எண்ணெய் விலையில் சற்று கூடுதலாக கொடுத்தாலும், காப்பீடு மற்றும் கப்பல் போக்குவரத்து செலவுகளில் கணிசமான மிச்சம் ஏற்படுகிறது. மேலும், இந்திய எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் தற்போது உடனடி பணப்பரிமாற்றத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதால், ரஷ்ய எண்ணெய் விநியோகஸ்தர்கள் இந்தியாவை தங்களின் முன்னுரிமை வாடிக்கையாளராக பார்க்கின்றனர். சீனா நீண்டகால குழாய் வழி ஒப்பந்தங்களை நம்பியிருக்கும் வேளையில், இந்தியா ஒரு திடீர் வாய்ப்பு முறையை பின்பற்றி, சந்தையில் எப்போது எண்ணெய் மலிவாகவும் வேகமாகவும் கிடைக்கிறதோ, அப்போது அதை தன்வசப்படுத்துகிறது.
இந்தியாவின் இந்த வெற்றிக்கு ஜாம்நகர் போன்ற உலகத்தரம் வாய்ந்த சுத்திகரிப்பு நிலையங்கள் ஒரு முக்கிய காரணமாகும். சுமார் 212 வகையான கச்சா எண்ணெய்களை சுத்திகரிக்கும் திறன் கொண்ட இந்தியாவின் சுத்திகரிப்பு நிலையங்கள், ரஷிய எண்ணெயை குறைந்த விலையில் வாங்கி சுத்திகரித்து, பின்னர் அதை டீசல் மற்றும் பெட்ரோலாக மாற்றி ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கு டாலர் மற்றும் யூரோ மதிப்பில் விற்கின்றன. இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், ரஷ்யாவிடம் இருந்து ரூபாயில் எண்ணெய் வாங்கிவிட்டு, அதை சுத்திகரித்து மேற்கத்திய நாடுகளுக்கு விற்று அந்நிய செலாவணியை ஈட்டுகிறது இந்தியா. இது ஒரு Win-Win வெற்றியாக இந்தியாவுக்கு அமைந்துள்ளது.
சர்வதேச அளவில் டாலரின் ஆதிக்கத்தைக் குறைக்கும் விதமாக, இந்த வர்த்தகங்கள் பெரும்பாலும் டாலர் அல்லாத முறையிலேயே நடைபெறுகின்றன. 90 சதவீத வர்த்தகம் ‘ரூபாய்-ரூபிள்’ முறையிலும், மீதமுள்ளவை திர்ஹாம் மற்றும் யுவான் போன்ற நாணயங்களிலும் நடக்கின்றன. இந்தியாவிற்கு சர்வதேச அளவில் எண்ணெய் விலையை நிலைப்படுத்தும் ஒரு முக்கிய பொறுப்பு இருப்பதாக உலக நாடுகள் கருதினாலும், அந்த செயல்பாட்டில் இந்தியா தனது லாபத்தையும் மிக துல்லியமாக கணக்கிடுகிறது. கச்சா எண்ணெயிலிருந்து கிடைக்கும் பெட்ரோல் மட்டுமல்லாது, அதன் துணை பொருட்களான மெழுகு, பிடுமென் போன்றவையும் இந்தியாவிற்கு பெரும் லாபத்தை தேடித்தருகின்றன.
இறுதியாக, ஆசிய எண்ணெய் வர்த்தக அதிகாரத்தில் இந்தியா ஒரு ‘விலை நிர்ணயம் செய்யும் பிளேயராக உருவெடுத்துள்ளது. ரஷ்யாவிற்கு தற்போதைய போர் சூழலில் பணம் தேவைப்படுவதால், அவர்கள் சித்தாந்தங்களை விட வியாபாரத்திற்கே முன்னுரிமை அளிக்கின்றனர். இந்தியாவின் வலுவான பணப்பரிமாற்ற வழிகள் மற்றும் துல்லியமான கடல்சார் வரைபடம் ஆகியவை எண்ணெய் கப்பல் உரிமையாளர்களுக்கு ஒரு நம்பிக்கையை தந்துள்ளன. இதனால், சீனாவை விட இந்தியாவை அவர்கள் சிறந்த வர்த்தக தளமாக தேர்வு செய்கின்றனர். முடிவாக, எண்ணெய் எங்கிருந்து வந்தாலும், அதை தனது நாட்டு நலனுக்காகவும் லாபத்திற்காகவும் இந்தியா மிக சிறப்பாகப் பயன்படுத்தி வருகிறது என்பதே உண்மை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
