இந்திய மருத்துவத்துறையில் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளதாகவும், ரூ.1500 கோடி அளவு மோசடி நடைபெற்றிருக்கலாம் என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையை நிர்வகிக்கும் அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் ரூ.1200 கோடிக்கும் அதிகமாக நிதி மோசடி செய்துள்ளதாகவும், வேறு சிலர் ரூ.300 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அறக்கட்டளை நிர்வாகிகள் காவல்துறைக்கும் அமலாக்கத்துறைக்கும் புகார் அளித்துள்ள நிலையில், வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது, நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
கடந்த 1997 ஆம் ஆண்டு, கிஷோர் மேத்தா மற்றும் அவரது மனைவி சாரு மேத்தா ஆகியோர் லீலாவதி மருத்துவமனையை கட்டி முடித்தனர். இருவரின் மறைவுக்கு பின் அவர்களுடைய உறவினர்கள், சகோதரர்கள் இந்த மருத்துவமனையை தங்களுடைய கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர். இதையடுத்து, கடந்த 20 ஆண்டுகளில் இந்த மருத்துவமனையில் பல்வேறு வகைகளில் மோசடி மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், மொத்தம் ரூ.1500 கோடிக்கும் அதிகமான நிதி தவறான வழிகளில் தங்களுடைய சொந்த கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மருத்துவ பொருட்கள் வாங்குதல், கட்டணங்களில் பெயர்களில் கொள்ளை என பல்வேறு கிரிமினல் வேலைகள் இடம்பெற்றிருக்கலாம். இதனை அடுத்து, இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் தற்போது பெல்ஜியம் மற்றும் துபாயில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை, மருத்துவத்துறையில் நடந்த மிகப்பெரிய ஊழல் இதுதான் என்று குறிப்பிடப்படும் நிலையில், இது குறித்து மும்பை போலீஸ் கமிஷனர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அமலாக்கத்துறையும் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. வெளிநாட்டில் உள்ள இந்த மோசடி செய்தவர்கள் இந்தியா கொண்டு வரப்படுவார்களா? அவர்களிடமிருந்து பணம் கைப்பற்றப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.