இன்னும் சில மாதங்களில் திருமணமாக உள்ள இளம் பெண் ஒருவர், தனது வருங்கால கணவருடன் ரோலர் கோஸ்ட்டரில் விளையாடிய போது, இருபது அடி உயரத்திலிருந்து தவறி விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியை சேர்ந்த பிரியங்கா என்பவர், நிகில் என்பவரை இன்னும் சில மாதங்களில் திருமணம் செய்ய இருந்தார். இந்த நிலையில் இருவரும் மகிழ்ச்சியாக டெல்லியில் உள்ள ஒரு தீம் பார்க் சென்றனர். பல வாட்டர் விளையாட்டுகளில் விளையாடிய பிறகு, அவர்கள் ரோலர் கோஸ்ட்டரில் சவாரி செய்ய முடிவு செய்தனர்.
இருவரும் அருகருகே உட்கார்ந்து இருந்த நிலையில், ரோலர் கோஸ்ட்டர் இயங்க ஆரம்பித்த சில நிமிடங்களில், பிரியங்கா 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். அவரது வருங்கால கணவர் நிகில் கண் முன்னாலேயே இந்த விபத்து நடந்தது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து உடனடியாக பிரியங்காவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, மருத்துவர்கள் பரிசோதனை செய்து, ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
பிரியங்காவின் சீட் பெல்ட் வேலை செய்யவில்லை என்பதால்தான் அவர் கீழே விழுந்தார் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, ரோலர் கோஸ்ட்டர் ஓட்டுநர், மேனேஜர் மற்றும் தீம் பார்க் இயக்குநரை போலீசார் விசாரித்து வருவதாகவும், சம்பந்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை சேகரித்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இன்னும் சில மாதங்களில் திருமண வாழ்க்கையில் ஈடுபட இருந்த பிரியங்கா, இந்த ரோலர் கோஸ்ட்டர் விபத்தில் உயிரிழந்தது, அவரது குடும்பத்தினருக்கும் அவரது வருங்கால கணவரின் குடும்பத்தினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.