பிரபல கன்னட நடிகை ரன்யா ராவ், தங்கம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது கணவர் ஜதீன் ஹூக்கேரி என்பவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையின் போது, “என் மனைவியின் தொழில் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. தொழில் ரீதியாக அவர் என்னிடம் எதையும் பகிர்ந்து கொள்ள மாட்டார். நானாக கேட்டாலும் என்னிடம் சண்டையிடுவார்,” என்று அவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ரன்யா மற்றும் ஜதீன் ஹூக்கேரி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பெங்களூரில் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் ஜதீனிடம் அதிகாரிகாள் விசாரணையின் போது, “திருமணத்திற்கு 45 நாட்களுக்கு முன்பு தான் முதன்முறையாக அவரை சந்தித்தேன். அவர் மீது உள்ள நம்பிக்கை காரணமாக அவரது குடும்ப பின்னணியை நான் விசாரிக்கவில்லை. எனது மனைவி தனது தொழில் விவரங்களை என்னிடம் பகிர்ந்ததில்லை. நான் தொழிலைப் பற்றிப் பேசினாலும், அவர் அதைத் தவிர்த்து விடுவார். மீண்டும் கேட்டால் சண்டையிடுவார்,” என அவர் கூறியுள்ளார்.
“அவருடன் நான் மிகக் குறைந்த நாட்களே வாழ்ந்தேன். எனவே, அவரைப் பற்றிய பல விஷயங்கள் எனக்கு தெரியாது. ஊடகங்களில் வரும் தகவல்களை பார்த்துத் தான் சில விஷயங்களை அறிந்தேன்,” என்றும் அவர் தெரிவித்தார்.
ரன்யா கணவர் ஹூக்கேரி பெங்களூரைச் சேர்ந்த கட்டிடக்கலைஞர். பல சொகுசு விடுதிகளை அவர் கட்டியுள்ளார். மேலும், டெல்லி, மும்பை நகரங்களில் பல ஹோட்டல்களையும் கட்டியுள்ளார் என கூறப்படுகிறது.
ஆனால், ரன்யா தங்கக் கடத்தல் வழக்குக்கும் ஹூக்கேரிக்கும் தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.